ஓவியனின் பார்வையில் குற்ற உலகம்!

 

 

 

 




 

 

 அண்டர் தி ஸ்கின்
சீன தொடர்
24 எபிசோடுகள

மகத்தான திறமையான ஓவியன். கல்லூரி வயதில் போலீஸ்காரர் கொல்லப்படுவதற்கான ஓவியத்தை வரைந்து கொடுத்து சர்ச்சையில் சிக்குகிறான். நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றாலும் கொலைக்கும்பலுக்கு மறைமுகமாக போர்ட்ரைட் ஓவியம் வரைந்து கொடுத்தது, அவனுக்கு எதிர்பார்த்திராத துயரத்தை அளிக்கிறது. அதுவரையில் அவன் கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களைக் கூட தீவைத்து எரித்துவிட்டு, காவல்துறையில் பணிக்கு சேர்கிறான். அங்கு ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வேலை செய்கிறான். தொடக்கத்தில் கொலைக்கும்பலுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்து கொடுத்தான் என்பதற்காக கேப்டன் டுசெங் அவனை மதிப்பதில்லை. ஆனால் கொலை வழக்குகளை கண்டுபிடிப்பதில் சென் யிக்கு உள்ள புத்திசாலித்தனம், ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பல்வேறு வழக்குகளோடு, தனது வாழ்க்கையை மாற்றிப்போட்ட கேப்டன் லீ வெய் வழக்கிலுள்ள குற்றவாளிகளை எப்படி பிடித்தான் என்பதுதான் கதை.

தொடரின் நாயகன் ஓவியன் என்பதால், வழக்குகள் அனைத்தும் ஓவியம் சார்ந்த அடிப்படையைக் கொண்டுள்ளன. அதாவது கொலையாளி உள் அலங்கார வடிவமைப்பாளர், கட்டுமான கலைஞர். அப்படியெனில் அவருக்கு ஓவியங்கள் பிடித்தமானதாக இருக்கும். அதன் அடிப்படையில் அவரின் உளவியலை அடையாளம் கண்டு, அதை வைத்து அவர் செய்த குற்றங்களை பின்தொடர்கிறார் நாயகன். இந்த வகையில் அவர், காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் மனச்சிதைவு கொண்ட மருத்துவரின் கொலையை துப்புதுலக்குகிறார். வடிவமைப்பாளரின் ஒற்றை நகப்பூச்சு வைத்து அவரைப் பின்தொடர்ந்து அவர்தான் கொலை செய்தார் என சென் யி உறுதியாக நம்புகிறான். அவனது நம்பிக்கையை சில வழக்குகளுக்கு பிறகு கேப்டன் டுசெங்கும் ஏற்றுக்கொள்கிறான்.

இந்த தொடரின் முக்கியமான அணுகுமுறை கொலை, அதற்கான காரணம், எப்படி கொலை நடந்தது, கொலையானவரின் பின்னணி, கொலை செய்தவரின் பின்னணி என கதை நகர்கிறது. கொலையில் குற்றவாளி என பிடிக்கப்பட்டவர், குற்றத்தை ஒப்புக்கொண்டால் காவல்துறையின் பணி முடிந்தது. கேப்டன் டுசெங்கும் அப்படித்தான் வழக்குகளை கையாள்கிறான். ஆனால் சென்யூ அப்படி எளிதாக குற்றத்தை குற்றவாளி கிடைத்தவுடனே ஏற்பதில்லை. ஆதாரம் இருக்கிறது என்றாலே குற்றத்தை ஏற்காதவர்கள் உலகில் அதிகம். இந்த லட்சணத்தில் தானே முன்வந்து குற்றத்தை ஏற்றாலும் அதை எப்படி செய்தார் என்பதை விளக்கிச் சொல்லவேண்டும். அதில் தடுமாற்றம் வந்தால் கூட காவல்துறைக்கு வழக்கு முடியாது. அந்த வகையில் குடும்ப வன்முறை வழக்கில் கணவனை முதல் மனைவி கொன்றுவிடுகிறாள். குற்றத்தை அவள் ஏற்கிறாள். ஆனால், சென்யூ அதை ஏற்பதில்லை. முதல் மனைவி கைதாகி லாக்கப்பிற்கு செல்லும்போது, சைக்கோபாத்தின் காதலி, சாரி என மன்னிப்பு கோருகிறாள். இந்த ஒற்றை வார்த்தையை வைத்து சென்யூ துப்புதுலக்கி முதல் மனைவி, குழந்தையை வயிற்றில் வைத்துள்ள காதலி என இருவருமே கொலையில் தொடர்புடையவர்கள் என கண்டுபிடிக்கிறான்.

இரு பெண்கள் சேர்ந்த தங்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு பதில் சொல்லுகிறார்கள். காவல்துறையை நாடாமல் தானாகவே முடிவெடுத்து கொலை செய்கிறார்கள். இதில் முதல் மனைவி தன்னுடைய வாழ்க்கையை அடமானமாக வைக்கிறாள். அப்படியும் சேடிஸ்டின் காதலிக்கு அது தவறாக தோன்றுகிறது. கொலையை செய்தது தான்தான் என தண்டனையைப் பெற்றுக்கொள்ளத் துணிகிறாள். இதில் யாரை குறை சொல்ல? குடும்பவன்முறையை செய்தவனையா, அல்லது சமூகத்தையா, சட்டங்கள் அந்தளவு கடுமையாக இல்லையோ என அச்சம் ஏற்படுகிறது.

புகழ்பெற்ற ஓவியன் காவல்துறையில் பணியாற்ற வருகிறான். அங்கு ஓவியத்திறமை மட்டுமல்ல, உடலின் கட்டுமானம், எலும்பு அமைப்பு, உளவியல், அறையின் கோணம் என பல்வேறு விஷயங்களிலும் வழக்குகளை அடையாளம் கண்டு தீர்க்க உதவுகிறான் சென்யி. இறுதியாக பெண்களை கடத்தி விபச்சாரத்திற்கு விற்பது, மக்களின் தகவல்களை திருடி அதை சட்டவிரோதவகையில் பயன்படுத்துவது என இருக்கும் டெக் நிறுவனத்தையும் முடக்கி நிறுவனரை கைது செய்கிறார்கள். கேப்டனும் சென்யூவும் காலமான லீ வெய்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஜாலியாக உரையாடுவதோடு தொடர் நிறைவுபெறுகிறது.

கொலைக்குற்றவாளிக்காக சிறைசெல்லும் காதலிக்கு நாயகன் வரைந்து கொடுக்கும் பதிமூன்று வயது சிறுமியாக உள்ள தோற்றம். பிறகு ஏன் அதை வரைந்தேன் என்று சொல்லிவிட்டு அதற்கு கொடுக்கும் விளக்கம் அருமை. இதேபோல, உள்வடிவமைப்பாளரான பெண்ணுக்கு மேரி க்யூரியை வரைந்துகொடுத்து சொல்லும் உதாரணம் அட்டகாசம்.

நாயகன் சென்யி முதல்முறையாக காவல்துறை கட்டடதிற்கு செல்லும்போதே, அவன் எப்படி உலகை பார்க்கிறான். முகங்களை எப்படி மனதில் வைத்துக்கொள்கிறான் என்பதைக் காட்டிவிடுகிறார்கள். பிணக்கூராய்வு செய்யும் மருத்துவர், கண்காணிப்பு கேமராக்களை பரிசோதிக்கும் பெண் அதிகாரி, உடற்பயிற்சி செய்யும் குறும்பான அதிகாரி என பாத்திரங்கள் அனைத்துமே சுவாரசியமாக உள்ளன. அப்பாத்திர நடிகர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.  

நிதானமாக நகரும் கதை என்பதால் அனைவருக்கும் பொருந்திப்போகும் தொடர் அல்ல. தொடர் நிதானமாகவே செல்கிறது. ஓவியம் சார்ந்த புலனாய்வு தொடர் என்பதால் நிறைய ஓவியங்களைப் பற்றிய தகவல்களை போகிற போக்கில் விவரித்து கூறுகிறார்கள். அதிலும், ஒரு சிறுமி வரைந்துள்ள வீட்டின் படத்தை வைத்தே அவளது மனநிலை எப்படி இருக்கிறது என சென்யி சொல்வது ஆழமானது. அதன் பொருளை நாம் உணரும்போது வேதனையான உணர்வெழுகிறது.

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்