பழகும் பெண்களை சூனியக்காரியாக நினைக்கும் கொலைகாரனை பிடிக்க உதவும் பூச்சி வல்லுநர்!
பழகும் பெண்களை சூனியக்காரியாக நினைக்கும் கொலைகாரனை பிடிக்க உதவும் பூச்சி வல்லுநர்
இன்செக்ட் டிடெக்டிவ்
2 சீசன்
சீன தொடர்
யூட்யூப்
பூச்சி வல்லுநர், தாய்லாந்துக்கு படிப்பதற்காக செல்கிறார். அங்குதான் அவரது காதலியும் கூட வேலை செய்வதற்காக வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து வழக்குகளை புலனாய்வு செய்து தாய்லாந்து இன்ஸ்பெக்டரை சூப்பரிடெண்ட் லெவலுக்கு உயர்த்தி புரமோஷன் வாங்க வைப்பதே கதை.
தொடரில் முக்கியமான கதை, தொடர்கொலைகளை செய்யும் சிசோபெரெனியா வந்த பிணக்கூராய்வு மருத்துவர் பற்றியது. அவர்தான் காவல்துறைக்கான பிணக்கூராய்வு செய்பவர். அவரை தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு கொலையாளி என காட்டிவிடுகிறார்கள். முதன்மை பாத்திரங்கள் அவரை கொலையாளி என எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே முக்கியமான திருப்புமுனை.
இந்த பாகத்திலும் நாயகன், நாயகிக்கு காதல் காட்சிகள் ஏதும் கிடையாது. முத்தம் கொடுக்கும்படி சூழல் இருந்தால், இன்ஸ்பெக்டர் நண்பன் அங்கு வந்துவிடுவான். நாயகன் ஜின்டாங் அல்ல ஜின்டியாங் என மாற்றி வாசியுங்கள். தவறாக தட்டச்சு செய்துவிட்டேன். ஜின்டியாங், ஜின்லிங் எப்போதும் போல காதல் வளர்க்கிறார்கள். நாயகி, பழமைவாதி. கல்யாணத்திற்கு அப்புறம்தான் எல்லாம் என தமிழில் கவிஞர்கள் முனகுவார்களே அதே ரகம். எனவே, நோ காதல் நோ ரொமான்ஸ். நாயகனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் புரோமன்ஸ் இருக்கிறது. ஒருகட்டத்தில் நாயகியே சொல்கிறாள். உண்மையில் நான் அவனுடைய காதலி போல இல்லை. இன்ஸ்பெக்டரான அவன்தான் காதலி போல இருக்கிறான் என அலுத்துக்கொள்கிறாள். இரண்டாவது பாகம் கூட இதே வசனத்தோடு அப்படியே முடிகிறது.
முதல் வழக்கில் நாயகனும் கூட சந்தேகப்பட்டியலில் இருக்கிறான். ஆனால் அவன்தான் கொலையான பெண் எப்படிப்பட்ட ஆயுதத்தில் கொலையானாள் என கண்டுபிடித்து கூறுகிறான். அதேநேரம், புழுவை வைத்து நடந்த கொலை முயற்சியைக் கூட கண்டுபிடிப்பவன் அவன்தான். ஊழல் வழக்கில் கைதாகி பணியிழக்கும் தாய்லாந்து போலீஸ்காரன், இந்தியாவில் இருந்து அரிய பட்டாம்பூச்சியின் படிம உருவத்தை திருடிவிடுகிறான். அதைத்தேடி வருபவன், போலீஸ்காரன் பிரியத்திற்குரிய விலைமாதை அடித்து உதைத்து சித்திரவதை செய்கிறான். அதில் துரதிர்ஷ்டவசமாக அவள் இறந்துவிடுகிறாள். இதனால் போலீஸ்காரன் வெகுண்டுபோகிறான். விலைமாதைக் கொன்ற பாதுகாவலன்,முன்னாள் போலீஸ்காரன் என இருவருமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அப்போது, தனது காதலியைக் கொன்றவன் பாதுகாவலன் என போலீஸ்காரன் அறிந்துகொள்கிறான். அவனைக் கொல்ல புத்தியைப் பயன்படுத்துகிறான். கொலைக்கு புழு ஒன்றை பயன்படுத்துகிறான். அப்புழு கடித்தால் ஒருவருக்கு உடல் முழுக்க ரத்தம் கசிந்து இறக்கும் கொடூர சாவு நிகழும்.
முன்னாள் போலீஸ்காரனின் திட்டத்தை அறிந்து ஜின்டியாங் அதை தடுப்பதோடு, அவன் பாதுகாவலனை மருத்துவமனையில் கொல்ல முயலும்போது கைது செய்யவும் உதவுகிறான். தாய்லாந்து காவல்துறைக்கு இவ்வழக்கு பெரிய ஆறுதலாகிறது. இருநாட்டு உறவுகள் கெட்டுப்போய்விடாமல் காப்பாற்றியதற்காக ஜின்டியாங்கின் இன்ஸ்பெக்டர் நண்பனுக்கு பாராட்டு கிடைக்கிறது.
பதினைந்து ஆண்டுகளாக நடக்கும் பெண்களை எரித்துக்கொல்லும் வழக்கு, அதன் மீறல்களைப் பற்றி பார்ப்போம்.
இன்ஸ்பெக்டரின் அப்பா காலத்தில் பதியப்பட்ட வழக்கை மகன் காலத்திலும் தீர்க்க முடியவில்லை. அதேபோல கொலைகள் திரும்ப நடைபெறத்தொடங்குகின்றன. பெண்களின் உடலை முற்றாக எரித்து, அதைக் கொண்டு வந்து ஏதேனும் நிலப்பகுதியில் புதைத்துவிடுகிறார்கள். பெரிய ஆதாரங்கள் ஏதுமில்லை. கிடைக்கும் பாதையிலும் காவல்துறை செல்வதாக இல்லை. ஜின்டியாங், ஜின்லிங் என இருவரும் சேர்ந்து இன்ஸ்பெக்டரோடு வழக்கை துப்பு துலக்கி வெல்கிறார்கள்.
வெகு நாட்களாக குறிப்பிட்ட ஆய்வகத்தில் உள்ள உடலை எப்படி திடீரென ஒரு மருத்துவர் வேறு இடத்திற்கு மாற்ற முடியும், அதுவும் வழக்கை நடத்தும் இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல்..... இன்ஸ்பெக்டர் குறிப்பிட்ட காவல்நிலையத்திற்கு போன் செய்துகூட உடல் அங்குள்ளதா என விசாரிப்பதில்லை.
மரியோ என்பவன் மீது சந்தேகம் என்றால் அவனைப் பற்றி முற்று முழுதாக விசாரிக்கலாம். அதை தாமதமாகவே செய்கிறார்கள். அதுவும் அவன் மீது சந்தேகம் உறுதியானபிறகு கூட போனில் பேசும் வாய்ப்பு கிடைத்தாலும் ஜின்லிங்கை எச்சரிக்கை செய்யவில்லை. எச்சரித்துவிட்டால் கதை அங்கேயே முடிந்துவிடுமே, அவளை கடத்திசென்று கொல்ல முயலும்போது காப்பாற்றுவதுதானே நாயகத்துவம்?
பொதுவாக ஒருவரை முற்றாக எரித்துக்கொல்வது என்பது அரிது. அப்படியான வழக்கு என்றால் சூனியக்காரிகளை எரித்துக்கொல்லும் வழக்கம் என்பதைக் கூட போலீசார் அறியாமல் இருப்பது பரிதாபம். அதுபற்றிய நூல் கிடைத்தபிறகுதான் கொலை செய்த முறையையே அறிகிறார்கள் என்பது நம்பும்படி இல்லை.
முன்முடிவுகளோடு இருக்கும் இன்ஸ்பெக்டரின் உதவியாளர் பாத்திரம் எரிச்சல் ஊட்டுகிறது. எந்த இடத்திலும் அந்த பாத்திரம் புத்திசாலித்தனமாக பேசவே இல்லை. இந்த வகையில் முதல்பாகம் எவ்வளவோ பரவாயில்லை. அதில் உணர்ச்சிவசப்படும் ஒரு நபர் இருப்பார். ஆனால், அவர் பார்வையாளர்களின் மனதை வெளிக்காட்டுவதைப்போல உருவாக்கப்பட்டிருப்பார். இத்தொடரில் வசனங்கள் பாதி தாய் மொழியிலும் மீதி சீன மொழியிலும் உள்ளது. இப்படி இருப்பது சிலருக்கு புரிந்துகொள்வதை தடை செய்யக்கூடும்.
நாயகன் பூச்சி வல்லுநர் என்பதால், வழக்குகளில் பூச்சிகளை சாதுர்யமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை திணிப்பு என்று கூறமுடியாதபடி இருப்பது முக்கியமானது. பெண்களை எரித்துக்கொள்ளும் வழக்கில் ராமர் வேடமிட்டு நடிப்பவரின் கதை துயரமானது. உணவு தரும் பெண்ணைக் காதலித்து, அவளை சீரியல் கொலைகாரன் கொன்றுவிட்டான் என உண்மை தெரிந்தும் அதற்கான நீதி கிடைக்காமல் தன்னைத்தானே அழித்து அதன் வழியாக குற்றவாளியை அடையாளம் காட்டுவது யாருமே நினைத்து பார்க்காத ஒன்று. தாய்லாந்தில் உள்ள போதைப்பொருள் பிரச்னை. இதில் உள்ள ஆட்கள் பணத்தை வைத்து எளிதாக தப்புவதைக்கூட தொடரில் நேரடியாக காட்டிவிட்டார்கள்.
இதேபோல, தாய்லாந்து கிராமத்தில் நகரில் உள்ள பெண்களை கடத்தி வந்து அவர்களை மணம் செய்வித்து வியாபாரம் செய்பவர்கள் வழக்கும் பெரிய திருப்பங்கள் இல்லையென்றாலும் நெகிழ்ச்சியானது.
பழிவாங்கும் பால்புதுமையின பெண்ணுக்கு ஆதரவாக நிற்கும் நெருப்பால் பாதிக்கப்பட்ட சகோதரி பாத்திரம் சிறப்பாக உள்ளது. பழிவாங்குவதை நிதானமாக அடையாளம் கண்டு தூரத்தில் இருந்தே ரசிப்பவர், காவல்துறையினரை அடையாளம் கண்டு குற்றங்களை தான் செய்ததாக கூறி தற்கொலை செய்துகொள்கிறார். அதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனையும் இணைத்துக்கொண்டு தண்டிக்கிறார். குடும்பரீதியான பாலியல் சுரண்டலை தைரியமாக சொன்ன வழக்கு. தாய்லாந்து இன்ஸ்பெக்டர், நண்பன் ஜின்டியாங் சொல்வதை பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு விடுகிறார். அதிலும் தந்தை கண்டுபிடிக்க முடியாத வழக்கு அவருக்கான ஸ்பெஷல். அதை நண்பர்கள் துணையோடு வெல்வது தொடரின் முத்தாய்ப்பானதாக உள்ளது.
தொடக்கத்தில் இன்ஸ்பெக்டர் பாத்திரம் ஜின்லிங்கை காதலிக்க முயலும். ஆனால், அவருக்கு காதலர் இருக்கிறார் என தெரிந்ததும் நண்பனையும், அவரது காதலியையும் பாதுகாக்கவே முயன்றுகொண்டிருப்பார். இறுதிவரை அதை செய்வார். இதனால் தொடரில் காதலை விட நட்பே மேலோங்கி நிற்கிறது.
நாயகன் ஜின்டியாங்கைப் பொறுத்தவரை நீதியைப் பெற முடியாதவர்களுக்கு, அதை அணுக முடியாதவர்களுக்கான குரலாக இருக்கிறார். சில சமயங்களில் தன்னையே கூட நீதியைப் பெறும் முயற்சியில் அர்ப்பணிக்க தயங்குவதில்லை. அதை கருணை, இரக்கம் என கூறலாம். அவரது செயலின் பின்னணியை சற்று தாமதமாகவே இன்ஸ்பெக்டர், ஜின்டியாங்கின் காதலி ஆகியோர் உணர்கிறார்கள்.
ஜின்டியாங்கின் நண்பன், ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை கொடுக்க மறுத்ததற்காக கொலை செய்யப்படுகிறார். அதை ஜின்டியாங் சீனாவில் இருந்து கண்டுபிடித்து தீர்க்கிறார். சீனா, தாய்லாந்து என இருநாடுகளுக்கான போலீஸ் வழக்காக மாறுகிறது. தாய்லாந்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவர் கொல்லப்படுகிறார். அதை செய்வது அவரைக் கூட்டி வந்த பேராசிரியர். அந்தக்கொலை அவர் செய்த இன்னொருகொலையை விசாரிக்க வைக்கிறது.
பூச்சிகளைப் பற்றி மட்டுமல்ல மனிதர்களின் உணர்ச்சிகளைப் பற்றியும் கவனம் கொண்டு எழுதப்பட்டுள்ள தொடர்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக