மாவோவின் இளமைக் காலத்தை விளக்குகிற நூல்!

 



மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்
எட்ஹர் ஸ்னோ
சவுத் விஷன் புக்ஸ்
தமிழில் எஸ் இந்திரன்
ப.127

இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகே வெளியுலகிற்கு சீனா, அதன் கம்யூனிச தலைவரான மாவோ பற்றிய முழுமையான அறிவு கிடைத்தது. மாவோவின் நூற்றாண்டான 1993ஆம் ஆண்டு மூல நூலின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக தமிழில் மொழிபெயர்ப்பாளர் இந்திரனால் எழுதி வெளியிடப்பட்டது.

மாவோவின் இளமைப்பருவம் நூலில் சிறப்பாக வாசகர்களின் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளது. மூல நூலின் சுருக்கம் என்பதால் மற்ற பகுதிகள் எல்லாம் வேகமாக கடந்துசெல்கிறது. அவை எவற்றிலும் மனதில் பதியும் எந்த சம்பவமும் இல்லை. அடிப்படையாக நூல் வழியாக தெரிந்துகொள்வது என்னவென்றால், நூலிலுள்ள சம்பவங்களை எட்ஹரிடம் ஐந்து மணிநேரத்தில் மாவோ கூறியிருக்கிறார். அவற்றை அவர் பதிவு செய்து அல்லது குறிப்பெடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். நூலில் ஆச்சரியமூட்டும் விஷயம், அவரோடு வேலை செய்த தோழர்களுக்கு என்ன ஆனது, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் கூட அக்கறையோடு பிராக்கெட் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் வாசகர்களுக்கு எந்தளவு பயன்படும் என யோசித்திருந்தால் தேவலை.

பொதுவாக நூலை வாசிப்பவர்களுக்கு மாவோவின் சிறுவயது எப்படி இருந்தது, அவரது அப்பாவின் குணம் என்ன, அம்மா அன்பானவரா என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக மாவோ, தொன்மையான இலக்கியங்களை படித்தவர். அக்காலத்திலேயே சீனமொழி இலக்கியங்களைப் போற்றி புகழ்வது வழக்கமாக இருந்திருக்கிறது. அவரது ஆசிரியர்கள், அவரது இலக்கியங்களை அடிப்படையாக கொண்ட கட்டுரையை அங்கீகரித்து பாராட்டியுள்ளனர். அரசு அங்கீகரித்த, தடைசெய்த என பல்வேறு புரட்சி இலக்கிய நூல்களை ஏராளம் படித்து தேர்ந்துள்ளார் மாவோ. இதுவே அவரது புரட்சி மனப்போக்குக்கு முக்கிய காரணமாக உள்ளது. புரட்சிக்கு எதிராக இருந்தவர்கள், எதிர்புரட்சி செய்தவர்கள், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் என ஒருவர் விடாமல் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் இந்த நூல், மக்கள் சீன குடியரசு அரசின் அறிவிப்பாணையோ என்று கூட சந்தேகம் தோன்றவைக்கிறது. அந்தளவு பெயர், அவர் செய்த பணி, கட்சியில் இருக்கிறாரா இல்லையா, கொல்லப்பட்டார் என்றால் யாரால் கொல்லப்பட்டார் என நிறைய விவரங்களை அடுக்கியிருக்கிறார்கள். இதனால் மொத்த நூலையும் படித்த அனுபவம் கிடைக்கவில்லை. மின்னல் வேகத்தில் சம்பவங்கள் கண்முன்னே கடந்துபோன தோற்றம் உண்டாகிறது.
புரட்சி இயக்கங்களைத் தொடங்குவது, அதன் பணிகளை செய்வது, பிரசாரத்திற்காக பல்வேறு நாளிதழ்களை தொடங்கி நடத்துவது, போராட்டங்களை செய்வது. அணி திரட்டல் என நூல் ஒருகட்டத்தில் வேகமெடுத்து இறுதிவரை வேகம் குறையாமல் வாசிக்க வைக்கிறது. ஆனால் அதில் பெரிய பயன் ஏதுமில்லை. அதில் கூறப்படும் தகவல்கள் எவையு்ம மனதில் இருத்திக்கொள்ள முடியாதவை. கொரில்லா போர் முறையின் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் மாவோ.

நூலைப் படித்தால் மாவோவின் இளமைக்காலத்தைப் புரிந்துகொள்ளலாம். அவர் எப்படி தன்னை மெல்ல வாசிப்பு வழியாக உருவாக்கிக்கொண்டார், நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலகட்டம் என நிறைய விஷயங்களை அறியலாம். நூலின் முக்கியமான பகுதி மாவோ அவரது அப்பாவைப் பற்றி அங்கதமாக விவரிப்பது என கூறலாம். பிரச்னைகள் வரும்போது மட்டும் கடவுளை வணங்குபவர் என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அம்மா, கடவுள் பக்தி கொண்டவர். ஆனால் மாவோ மெல்ல கடவுள் பக்தியைக் கைவிட்டு வாசித்த நூல்கள் வழியாக பகுத்தறிவை தேடி அலைந்தவர். நூலில் மாவோ கையில் அதிக காசு கூட இல்லாத நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து திரிந்திருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் நண்பர்கள் சிலரை சந்தித்தால், பயணச்செலவுக்கு காசை தேற்றிக்கொண்டு மறுபடியும் திட்டமிட்ட இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார். இப்படியான பயணங்களே அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. நாட்டை மக்களை புரிந்துகொள்ள உதவியுள்ளது.

ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு சுருக்கமாக அமைந்ததில் வாசகர்களுக்கு கிடைக்கும் ஒரே பயன், மாவோவின் இளமைக்காலத்தை வாசித்து அறியும் இன்பம் மட்டுமே. மற்றபடி அவரின் போராட்ட அனுபவங்கள் எல்லாம் வீடியோவை வேகமாக ஓட்டிவிட்டு பார்க்கும்போது என்ன தெரியும்? காட்சி நகர்கிறது என்பதைத்தானே, அதில் வேறு எந்த உணர்வையும் பெற முடியாது. இந்த நூலும் அதுபோன்ற அனுபவத்தையே வழங்குகிறது. மாவோவைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வாசிக்கலாம். அமெரிக்க பத்திரிகையாளர் மாவோவுடன் பேட்டியை எடுக்கும் முன்னரே சீனாவுக்கு வந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். சீனமொழியை அறிந்தவர். பல்வேறு புகழ்பெற்ற ஊடகங்களில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளைப் பற்றிய செய்திகளை தேடி எழுதி செய்தியாக்கியிருக்கிறார். 


கோமாளிமேடை குழு



https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.amazon.es/%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%258B-%25E0%25AE%2592%25E0%25AE%25B0%25E0%25AF%2581-%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D-Tamil-ebook/dp/B09FHRWC4Y&ved=2ahUKEwi7gtPLzeyKAxVIIxAIHbt3Au4QFnoECBwQAQ&usg=AOvVaw10_ay1sIV4KdDh6dbQ6GB6





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்