நிலநடுக்க பேரிடரில் தாயைக் காப்பாற்ற முயலாமல் மக்களைக் காப்பாற்றிய தந்தையை வெறுக்கும் மகள்!
லைட் சேசர் ரெஸ்க்யூ
சீனதொடர்
யூட்யூப்
40 எபிசோடுகள்
அறுவை சிகிச்சை மருத்துவர், அவரது தந்தை என இருவருக்குமான வெறுப்பு, பாசப்போராட்டம்தான் முக்கிய கதை. நாயகன் வக்கீல், நாயகி மருத்துவர். இருவருக்குமான மோதல், காதல் எல்லாம் பிறகு வருகிறது.
லைட் சேசர் ரெஸ்க்யூ என்ற மீட்பு அமைப்பு தன்னார்வமாக இயங்கி வருகிறது. அதற்கான நிதியை கேப்டன் குயின்சன் வழங்கி வருகிறார். அவர்தான் அதில் தலைவர்,பயிற்சியாளர். தனது அமைப்புக்கு தன்னார்வமாக பயிற்சி பெற வருபவர்களுக்கு மாதச்சம்பளம் கொடுக்கமுடியாவிட்டாலும் முறையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை வழங்குகிறார். கேப்டனின் மீட்பு படையில் உள்ள அனைவருமே பிழைப்புக்கு கூடுதல் வேலை ஒன்றை செய்து வருகிறார்கள். மீட்பு பணி என்பது உயிரைக் காப்பாற்றும் பெருமை என்பதால் அதிலுள்ளவர்கள் அனைவருமே அதை விரும்பி செய்கிறார்கள்.
நாயகன், பெருநிறுவனங்களுக்கான வக்கீல். நல்ல சம்பளம் தரும் சட்டசேவை நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு வாய் பேச முடியாத தங்கை ஒருத்தி இருக்கிறார். அவர் ஏன் வாய் பேசமுடியாமல் போனார் என்பதற்கு பின்கதை உள்ளது. அதை தொடர் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
தொடரில் நிறைய எதிர்மறை உணர்வு எண்ணத்தை உண்டாக்கும் காட்சிகள் உண்டு. அவை எதற்கென கேட்காதீர்கள் இருக்கிறது. குறிப்பாக மருத்துவராக உள்ள நாயகியை மருத்துவமனை டீன் நடத்தும் பாகுபாடான விதம், அவரை ஒருமுறை வேலையில் இருந்து சஸ்பெண்ட் கூட செய்கிறார்கள். நாயகி அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. குகை ஒன்றுக்குசென்று மாட்டி்க்கொண்டவரகளுக்கு மருத்துவம் பார்த்து ஊடகங்களில் பிரபலமாக பெயர் அடிபட, தர்ம சங்கடத்துடன் நாயகியை மருத்துவமனை சேர்த்துக்கொள்கிறது.
மீட்புபணியை பிரபலப்படுத்தும் தொடரில் கேப்டன், அவரது மகளான மருத்துவர் என இருவரையும் அதிகம் கவனம் கொள்ள வைத்திருக்கிறார்கள். இருவருமே பிறரது உயிரைக் காக்க அர்ப்பணிப்போடு போராடுபவர்கள். சிறுவயதில் கேப்டன், அவரது மனைவியை நிலநடுக்க பேரிடரில் காக்க தவறிவிடுகிறார். அதனால் மகள், அப்பாவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டுவிடுகிறார். இருவருக்கும் தொடக்கத்தில் இருந்த அன்பு, முழுமையான வெறுப்பாக மாறிவிடுகிறது. அப்பா இல்லாதபோது காதலன் என்ற புதிய உறவு கிடைக்கிறது. ஆனால் அப்பா என்ற உறவு, சண்டைகள் மறந்து புதுப்பிக்கப்படும்போது காதலன் என்ற உறவு சிக்கலுக்குள்ளாகிறது.
சீன தொடரில் உள்ள தேசியவாதம் இதிலும் நீக்கமற உள்ளது. கட்சிக்கு ஆதரவான போக்கும் உள்ளது. கதை என்ற வகையில் புதுமை ஏதுமில்லை. அனைத்தும் எதிர்பார்த்தது போலவே நடக்கிறது. மருத்துவரான நாயகி கேசுவலாக இருக்கும்போது எப்போதும் குட்டி ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டே நடக்கிறார். பார்க்கும்போதே சில்லென்று ஆகிறது மனசு. இதிலும் வழக்கம்போல பிற சீனதொடர்களில் காட்டுவதையொற்றி நாயகனே சிறந்த சமையல்காரர். அவர்தான் நிறைய உணவுகளை சமைத்து நாயகிக்கு கொடுக்கிறார். தங்கைக்கு கொடுக்கிறார். நாயகனின் தங்கை கணவர், மனைவி சொல்லும் ஆலோசனையை ஏற்று உணவு கடை ஒன்றை தொடங்குகிறார். அந்த காட்சிகள் சிறப்பாக உள்ளன.
தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை, மீட்பு படை வீரர் மன்னிப்பதை எப்படி ஏற்பது? அந்த விவகாரத்தால்தான் அவர் ஒருவனைக் கொல்கிறார். சிறை செல்கிறார். வேலை கிடைக்க மாட்டேன்கிறது. காதலி சொல்படி கடை திறக்கிறார். அதில் வெற்றி பெறுகிறார்.
நாயகன் வக்கீலாக இருக்கிறார். வசதியானவர். நாயகி மருத்துவர். அவரும் வசதியானவர்தான். இவர்களுக்கு இடையிலான உறவு என்பது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர்கள் சார்ந்து உருவாகிறது. நாயகனைப் பொறுத்தவரை நான் உனக்கு உதவினால் எனக்கென்ன லாபம் என நினைப்பவர். நாயகி,பலன் எதையும் எதி்ர்பார்ப்பதில்லை. சம்பளத்திற்கு செய்யும் வேலையில் கூட அப்படித்தான் இருக்கிறார். ஆனால் அவரது குழுவிற்கான அங்கீகாரம் என்று வரும்போது அதை அவர் விட்டுக்கொடுப்பதில்லை. நாயகன், நாயகி என இருவருக்குமான உறவு என்பது மேல்தட்டு வர்க்க காதல். ஆனால், நாயகனின் தங்கை ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால், வசதியானவர். ஆனால் அவர் காதலிப்பவர் சிறை சென்று வந்த மீட்பு வீரர். நடுத்தர குடும்பம். அவரின் குடும்பமே உணவு செய்து விற்பதையே முக்கிய வருமான ஆதாரமாக கொள்கிறது. நாயகனின் தங்கைக்கு காதலன், அவரது குடும்பம் பிடித்துப்போகிறது. அவர்களுடனேயே வாழ விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால், நாயகனைப் பொறுத்தவரை அதை விரும்பவில்லை. மீட்புபணி, கொரியர் விநியோகம் செ்ய்வது என வாழ்பவர் எப்படி தனது தங்கையை பாதுகாக்க முடியும் என கேட்கிறார்.
சரிதான். அதில் தவறு ஏதும் கிடையாது.
நாயகனின் பாத்திரம் ஒரு மாதிரியானதாக உருவாக்கப்பட்டுள்ளது. சதி செய்வது போல, ஒருவரை திட்டமிட்டு காயப்படுத்துவதாக, உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. நாயகி, எந்த இடத்திலும் சுயநலம் கொண்டவராக நடந்துகொள்ளவில்லை. தனது காதலன் தன்னை விட்டு போக கூடாது என்று நினைக்கும்போது மட்டுமே தனக்கு தெரிந்த இறந்தகால உண்மையை மறைக்கிறார். ஆனால், அதை அவரது அப்பா கூறிவிடுவார் என்று அவருக்கு தெரிகிறது. எனவே, தான் கூற வேண்டாம் என்று கூட நினைத்திருக்கலாம்.
தொடரில் வரும் கேப்டன் பாத்திரம் குரூரமான உண்மைகளை கூறுபவராக உள்ளார். பெருமை புகழ் கிடைத்தாலும் கூட அதற்கு அவர் கொடுக்கும் விலை மிகப்பெரிய தனிமை. எளிய உணவை உண்டுகொண்டு மீட்புபணியை செய்துகொண்டு இருக்கிறார். மகள் பேசுவதில்லை. மனைவி இறந்துவிட்டார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான் பிள்ளை போல இருக்கிறார்கள்.
டிங் டிங்டிங் என்று காமிக்ஸ் ஓவியர் பாத்திரம் வருகிறது. அந்த பெண்தான் தொடரில் சற்று உத்வேகம் தரும் சலிப்பைக் குறைக்கும் பாத்திரம். அவரும் ஜூமிங்கும் செய்யும் ரகளைகள்தான் தொடரை சற்று உயிர்ப்போடு தொய்வு வராமல் காக்கிறது. வக்கீல் நாயகன் எதற்கு மீட்பு படை தலைவராகவேண்டும் என்பதை அழுத்தமாக கூறவில்லை. கேப்டனுடைய மகளை மணப்பதால் அவருக்கு தலைவர் தகுதி வந்துவிடுமா? கேப்டன் இந்த இடத்தில் நாயகனின் அந்தஸ்து, செய்யும் வேலை, அவர் கூட்டாளியாக உள்ள பெரிய நிறுவனங்கள் என இவை எல்லாவற்றையும் கணக்கில் கொள்கிறார். அல்லாதபோது தலைவர் பதவிக்கு சரியான தேர்வாக, நாயகனின் தங்கை கணவரே இருப்பார்.
உள்ளடக்க அளவில் சுமாரான தொடர்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக