மணல் மாஃபியா தலைவனை கைது செய்ய முயலும் சிபிஐ அதிகாரி!
மஃப்டி - கன்னடம் |
மஃப்டி
(கன்னடம்)
சிவராஜ்குமார்,
ஷான்வி, ஶ்ரீமுரளி
ரோகணூர் என்ற
ஊரில் உள்ள பாரதி ரத்தினவேல் என்ற மாஃபியா தலைவனை பிடிக்க அரசு முயல்கிறது. இதற்காக
ஜனா என்ற சிபிஐ அதிகாரி, அண்டர்கவராக செல்கிறார். அவருக்கும் பாரதி ரத்னவேல் குழுவுக்குமான
உறவு எப்படி அமைந்தது என்பதே கதை.
மணல், மண்,
கனிமங்கள் என அனைத்தையும் அள்ளி வணிகம் செய்து ரோகணூர் என்ற ஊரில் பெரும் மாஃபியா தலைவனாக
இருப்பவர் பாரதி ரத்னவேல். அவரை பிடிக்க அரசியல் கட்சிகள் அழுத்தம் தர சிபிஐ களமிறங்குகிறது.
ஆனால், இந்த முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் பலரும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தீயிட்டு
கொளுத்தப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். எனவே, சிபிஐயே திணறுகிறது. இந்த நேரத்தில்
ஜனா என்ற அதிகாரியை நியமித்து அண்டர்கவராக
இரு என்று கூறுகிறது. அவரும் மெல்ல பாரதி ரத்னவேலின் மாஃபியா குழுவில் சேர்ந்து மெல்ல
உயர்கிறார். துறைமுகத்தில் ரவுடியாக இருப்பவர், மெல்ல பாரதி ரத்னவேலின் ரோகணூர் பகுதிக்கு
செல்கிறார். அங்கு சென்று அவரைப் பற்றி ஆதாரங்கள் சேகரிக்கத் தொடங்குகிறார். அதாவது,
அவர் செய்யும் குற்றங்கள், தொழில்கள் பற்றியவை. பாரதி ரத்னவேல் பற்றிய ஆவணங்கள் சொல்வது
வேறு. அவருடைய ஊரில் உள்ள மக்கள் சொல்வது வேறு என மெல்லப் புரிந்துகொள்கிறார்.
மக்களை வளைத்து
தங்களுக்கேற்ப மாற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரகுமார் முயல்கிறார். இந்த முயற்சியை
ஜனா, பாரதியின் பாதுகாவலராக இருந்து தடுக்கிறார். பாரதியின் கூட உள்ளவர்களே துரோகம்
செய்கிறார்கள். அதையும் ஜனாதான் தடுத்து உயிரைக் காக்கிறார். மேலும் பாரதி ரத்னவேலின்
நல்ல குணங்கள் பற்றி தெரிந்துகொள்வதால், அவரால் ஆதாரங்கள் சேகரித்தாலும் அவரை கைது
செய்ய மனம் வருவதில்லை. ஏறத்தாழ ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் போல உணர்வு, மனநிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் ஜனாவை அரசியல்வாதி ரவீந்திரகுமார் குறிவைத்து விபத்துக்குள்ளாக்குகிறார்.
இதன்மூலம் பாரதி ரத்னவேலை வீழ்த்த நினைக்கிறார். அவரது தம்பியை முதல்வராக்க முடிவு
செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் உச்சகாட்சி.
ரவி பஸ்ரூர்
பில்டப் இசை கொடுத்து காட்சிகளை வலுப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் நார்தனின் காட்சிகள்
அனைத்திலும் கருப்புநிறம் நிறைந்திருக்கிறது. படத்தின் காட்சிகள் அனைத்துமே துருபிடித்த
நிறத்தில்தான் உள்ளன. இதுவே படத்தின் மையக்கதைக்கு பார்வையாளர்களை நகர்த்திச் செல்கிறது.
ஒருவித வெறுமையான சோகம் நிறைந்த இயல்பு நம் மனதில் உருவாகிறது.
படத்தின்
ஆதாரமே பாரதி ரத்னவேல் பாத்திரம்தான். இதில் சிவராஜ்குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
அதிகமாக குரலை உயர்த்தாமல் தன்னை எதிர்த்தவர்களைக் கொல்வது, தங்கையின் பாசத்திற்காக
அவள் ராக்கி கட்டுவாள் என எழுந்து நிற்பது, பிறந்த நாள் வாழ்த்துக்காக காத்திருப்பது
என நிறைய காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.
நள்ளிரவில்
வீட்டுக்கு வந்தாலும் தூங்குகிற குழந்தைகளை உசுப்பி எழுப்பி பரோட்டாவையும் சால்னாவையும்
ஊட்டுகிற முரட்டு தந்தையைப் போல தனது ஊர் மக்களிடம் பாரதி நடந்துகொள்கிறார். தனது ஆட்களை
ஏவி மக்களின் குடிசைகளை ஒரேநாளில் கொளுத்துகிறார். ஆனால் பின்னாளில் பார்த்தால், அங்கு
அத்தனை பேருக்கும் கான்க்ரீட் வீடுகளை கட்டிக் கொடுக்கிறார். செயலில் முரட்டுத்தனம்.
உள்ளுக்குள் அன்பு.
அவரது உறவே
என்றாலும் தவறு செய்தால் மரணத்தை பரிசாக கொடுக்க தயங்குவதில்லை. மக்களுக்கு நல்லது
செய்யவேண்டும் என அவரது அப்பா முயற்சி செய்கிறார். ஆனால், அந்த முயற்சியை அரசு அதிகாரிகள்
தோற்கடித்துவிட அதனால் மனமொடிந்து உடல் நோயுற்று சிகிச்சைக்கு பணமின்றி இறந்துபோகிறார்.
இதனால் ஒட்டுமொத்தமாக அரசு அமைப்பு மீது காழ்ப்புணர்வு கொள்ளும் பாரதி, பணபலம் கொண்டவராக
உருவாகி அதன்மூலம் அரசை, கட்சியை விலைக்கு வாங்கி தன்போக்கில் ஆட்டி வைக்கிறார்.
தன் மக்களுக்கு தேவையான வசதிகளை தன் சொந்த காசில்
செய்துகொடுக்கிறார். அதேநேரத்தில் மண் அள்ளும் குவாரிகளை தடுக்க நினைப்பவர்களை ஆட்களை
விட்டு கொல்கிறார். தனக்கு துரோகம் செய்பவர்களைக் கொன்றுவிட்டு அவர்களின் குடும்பத்திற்கு
பணம் அளித்து பார்த்துக்கொள்கிறார்.
எதிர்மறை
நாயகனை துதிக்கும் படம். எனவே, அதற்கான அம்சங்களை சரியான விகிதத்தில் பொருத்தியிருக்கிறார்கள்.
பாரதி ரத்னவேல்,
மாஃபியா தலைவர். அதேசமயம் தான் செய்யும் செயல்களைப் பற்றி முழுமையாக தெரிந்தவர். மக்களுக்கு
நன்மை தரும் விஷயங்களை பிறர் செய்தால் அதை தடுக்காதவர். தானும் செய்வோம், அவரும் செய்யட்டும்
என நினைக்கிறார். இதற்காகவே அந்த ஊரில் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசும் போராடுகிற
தலைவரான அஷ்வத் கோத்தாரியை உயிரோடு விடுகிறார். மண் அள்ளும் தொழிலைச் செய்பவர் மீது
எதிர்காலத்தில் அஷ்வத் குறைசொல்லி புகார் கொடுத்து போராடுவார் என்பதை அறியாதவரல்ல.
தான் சம்பாதித்த காசைக் கொடுத்து தனது பகுதியில் தான் நடத்தும் தொழிலுக்கு ஆபத்து வராதமாதிரி
பார்த்துக்கொள்ளும் பாரதி, கையாள எளிமையான ஆள் அல்ல.
தான் மக்களின்
பிரச்னைகளை தீர்க்கவேண்டுமென்றால் பணபலத்தில் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்பதை யதார்த்தவாதியாக
புரிந்துகொண்டே மண், மணலை அள்ளத் தொடங்கியிருக்கவேண்டும். பாரதியின் அப்பா லட்சியவாதி.
ஆனால் பாரதி நடைமுறைவாதி. இப்படி இருந்தால்தான் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு மக்களுக்கு
ஏதாவது செய்யமுடியும் என நம்புகிறார். அதையே செய்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில்
75 ஆண்டுகளாக தண்ணீர் வராத கிராமத்திற்கு அரசு செலவில் கலெக்டர் குடிநீர் குழாயை அமைத்துக்கொடுத்தார்.
இதனால் குடிநீர் வியாபாரம் கெட்டுப்போன விரக்தியில் அரசிடம் புகார் செய்ய, கலெக்டரை
வேறு இடத்திற்கு மாற்றிவிட்டனர். மக்கள் யாரை கடவுளாக நினைப்பார்கள் குடிநீர் வசதியை
செய்து தந்து அதற்கு தண்டனை பெற்ற பெண் அதிகாரியையா அல்லது இடமாற்றிய உள்ளூர் தாதாக்களையா?
இது சமகால,த்தில் நடைபெற்ற சம்பவம். படத்திற்கும் இது ஒத்துவருகிறதல்லவா?
மக்களின்
தினசரி பிரச்னைகளை, நெடுநாளைய ஏக்கங்களை பணபலம், அதிகாரபலம் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி
தீர்த்து வைத்தாலே அவர் கடவுளாகிவிடுவார். அரசு அமைப்புகளை அமைதிபடுத்திவிட்டு, தனிநபராக
வசதிகளை ஒருவர் செய்து தந்தால் அவரை மக்கள் எப்படி விட்டுக்கொடுப்பார்கள்?
பாரதி இந்த
மனநிலையை சாதகமாக்கிக் கொண்டு மண் அள்ளும் தொழிலின் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறார்.
தன் ஆட்களின் சம்பளம் போக, மீதியுள்ள பணத்தை மக்களுக்காக செலவழிக்கிறார். ஒருவகையில்
தனது அப்பா தோற்றுப்போன இடத்தில் மகன் ஜெயிக்கும் கதை. உணவு, உடை, வீடு என அடிப்படையான
விஷயங்களே கிடைக்காத இடத்தில் சட்டம் பற்றி பேசி என்ன பயன்?
பாரதி ரத்னவேலுக்கு
தண்டனை தருவது சரி. ஆனால், அவரது குழுவில் இருக்கும்போது ஜனாவும் கூட காவல்துறை அதிகாரியை
தன் கையால் சுட்டுக் கொன்றிருக்கிறாரே அதற்கு என்ன தண்டனை? சட்டப்படி அனைத்து விஷயங்களையும்
தராசு தட்டில் வைத்தால் வைத்தால் ஜனாவுடைய வேலையை அவர் விட்டுக்கொடுக்கவேண்டும். பாரதி
செய்த விஷயங்களையே அவர் தொடரவேண்டும். நடைமுறையாக அப்படித்தான் நிஜமான கதை பயணிக்கும்.
ஷான்வி, படத்தில்
கிளாமர் ஊறுகாய். ஜனா, சிங், பாரதி ரத்னவேல் ஆகியோருக்கான பங்கு கதையில் அதிகம். எல்லோருமே
நன்றாக நடித்திருக்கிறார்கள். இதே படம் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வந்திருக்கிறது.
கன்னடப்படம்
தமிழ் டப்பில் பார்க்க கிடைக்கிறது. யூட்யூபில் தேடுங்கள்.
கன்னடத்தில் நாயகன் பெயர் கனா, மாஃபியா தலைவர் பெயர் பைராதி ரணகல். தமிழில் பெயரை மாற்றிவிட்டார்கள்.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக