தாலிபன் எனும் அடிப்படை மதவாத தீவிரவாத இயக்கம் தோன்றிய வரலாறு!

 





பா ராகவன் எழுத்தாளர்





தாலிபன்

பா ராகவன்

 

கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியரும், இந்நாள் மெட்ராஸ் பேப்பர் இணைய பத்திரிகையின் முதன்மை ஆசிரியருமான பா ரா எழுதிய நூல். நாவல்களை எழுதினாலும் கூட கட்டுரை நூல்களை திறம்பட நயமாக எழுதுவதில் சோடை போகாத எழுத்தாளர். வளரும் எழுத்தாளர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வருகிறார். அதில் அவருக்கு வருமான நலம் இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. கணபதி துதி முடிந்தது. நூலைப் பற்றி பார்ப்போமா?

ஆப்கனிஸ்தான் பற்றிய நூலை படித்து முடிக்கும்போது, அங்கு மீண்டும் தாலிபன் ஆட்சி தொடங்கியிருக்கிறது. அதன் நேரடி விளைவாக மக்கள் துன்பமுற தொடங்கியிருக்கிறார்கள். இந்த அவல வாழ்க்கை ஏன் என பெண்கள் தற்கொலை செய்துகொண்டு வருகிறார்கள். மரணம் மிகப்பெரும் விடுதலை அல்லவா?

ஆப்கனிஸ்தானில் ஓபியம் பயிரிட்டு அதை விற்பதன் மூலம் அந்த நாட்டிற்கு பெருமளவு பணம் கிடைக்கிறது. ஆனால் இந்த வியாபாரத்தால் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானுக்கு லாபம் என்றாலும் போதைப்பொருள் சார்ந்த நிறைய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இந்தியாவுக்கு பெரும் தலைவலி.

 தாலிபன்களை  அகற்றி ஜனநாயக பூர்வமான ஆட்சியை கொண்டு வர அமெரிக்காவோடு இந்தியாவும் பங்கேற்று நிறைய  உதவிகளை செய்தது. இதில், மக்கள் நலனாவது, மண்ணாங்கட்டியாவது எல்லாம் அரசியல் லாபம்தான். ஆனால் இன்று அந்த நிலம் மீண்டும் ஷரியத் ஆட்சி நடத்தும் தாலிபன்களிடம் போய்விட்டது. இந்த தீவிரவாத இயக்கம் உருவாக வளர என்ன காரணம் என நூல் பேசுகிறது.

ஆப்கனிஸ்தானில் ஏற்கெனவே நடந்த ஆட்சிகள், அதன்வழியாக உருவான அரசியல் பிரச்னைகள், போராளி குழுக்கள் என பலவற்றையும் பா ரா தெளிவாக விளக்கியிருக்கிறார். தாலிபன் போராளிக்குழுவின் தலைவர் முல்லா ஓமரின் அறிமுகமே வணிக சினிமா நாயகனுக்குரியது. ஆனால் ஆட்சி கிடைத்தபிறகு அவர்கள் செய்யும் முட்டாள்தனங்கள், ஒசாமாவுக்கு சாதகமான மாற்றங்கள், செயல்பாடுகள் மக்களை துன்புறுத்த தொடங்கின. நூலில் எந்தெந்த விஷயங்களுக்கு  தடை என்பதை விளக்கமே சில அத்தியாயங்கள் செலவாகிவிட்டன. அத்தனை தடைகள். அதை மீறுபவர்களுக்கு தண்டனையும் இதே ரகத்தில்தான். மதவாத அடிப்படை ஆட்சி. எனவே, அதன் லட்சணம் மக்களின் வாழ்க்கையை கற்காலத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆப்கனிஸ்தானில் உள்ள போராளிக்குழுக்களை ஒருங்கிணைக்க வேண்டும் அல்லது அழிக்கவேண்டும். ஒரே போராளிக்குழு அதை ஆளவேண்டும். அப்போதுதான், அங்கு வணிகம் செய்வது எளிது. இதற்காக பாக். செய்த செயல்பாடுகள் பின்னாளில் அந்த நாட்டிற்கே பேராபத்தாக முடிந்தது. பாக் அரசோடு அங்குள்ள ஜமாலியா என்ற அறிவுஜீவி கட்சி ஒன்று, மதரசாக்களை நடத்தி மாணவர்களை தாலிபன்களுக்கு விலையின்றி வழங்கியது. இதெல்லாமே பின்னாளில் அந்நாட்டை சீரழிவில் தள்ளியது. இன்றுவரை தாலிபன்கள் பாக்கில் குண்டுகளை வெடிக்க வைத்து வருகிறார்கள்.

பிற தீவிரவாத இயக்கங்களுக்கும், தாலிபன்களுக்குமான வேறுபாட்டை பா ரா கூறுவது சுருக்கமாக தாலிபன் பற்றி புரிய உதவும்.  தீவிரவாதிகளாக இருந்து அரசியல் தலைவர்கள் ஆனவர்கள் பிறர் என்றால் போராளிகளாக அறிமுகமாகி ஆட்சியில் அமர்ந்து தீவிரவாதிகள் ஆனவர்கள் தாலிபன்கள் என விளக்குகிறார். படிக்கும் நமக்கே அதிர்ச்சி என்றால், அவர்களது கோமாளித்தனமான கொடூர ஆட்சியில் உள்ளவர்களின் நிலை எப்படியிருக்கும்?

தாலிபன்கள் பின்பற்றும் கையேடு ஒன்றை முல்லா ஓமர் தயாரித்திருக்கிறார். அதை நியூஸ் வீக் பத்திரிகை பெற்று மொழிபெயர்த்து வெளியிடும்போதுதான் அதன் செயல்பாடுகள், விதிகளை உலகம் புரிந்து பீதியடைகிறது. அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியோர் தாலிபன்களை ஆயுதம், பணம் பயிற்சி கொடுத்து தங்கள் வணிக நலன்களுக்காக வளர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல தாலிபன்கள் வணிகத்திற்கு ஆதரவாக பின்னாளில் மாறவில்லை. அமெரிக்க எதிர்ப்பை, சிறுபான்மையினர் வெறுப்பை கையில் எடுக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு உலகளவில் பெரும் பின்னடைவாக மாறுகிறது.

மது, போதைப்பொருட்கள், பெண்கள்  என எந்த கெட்டப்பழக்கமும் கைக்கொள்ளாத மனதளவில் கடும் காழ்ப்பை, வெறுப்பைக் கொண்ட ரவுடி கும்பல்தான் தாலிபன்கள். மற்றபடி பிறரை அடக்கியாளும் அதிகார வெறி, சிறுபான்மையினர் மீதான வெறுப்பு, மதவெறி ஆகியவற்றைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

சமகால பிரச்னைகளுக்கான தீர்வை தொன்மையான மத நூலில் தேடுகிற முட்டாள்கள். இவர்களைப் பற்றி அறியாமல் மக்கள் ஆதரவு கொடுத்து ஆட்சியில் அமர்த்துகிறார்கள். ஆறு ஆண்டுகள் ஆட்சியில் அந்த நாடே பக்கவாதம் வந்தது போல பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் கலாசார முக்கியத்தும் கொண்ட பாமியன் புத்தர் சிலைகளை அழிப்பதை தாலிபனை வளர்த்தெடுத்த பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரப் நினைத்தாலும் கூட தடுக்க முடிவதில்லை.

பள்ளிகளை மூடி மதவாத நூல்களை மட்டும் படிக்க சொல்லி தீவிரவாத இயக்கங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்வது, மக்களை பல்வேறு கற்கால மதவிதிகளை சொல்லி ஒடுக்குவது, மக்களை பிற நாடுகளுக்கு அகதியாக செல்ல ஊக்குவிக்கும் வகையில் ஒடுக்குமுறை ஆட்சி என தாலிபன்கள் செய்த ஏதுமே மக்களுக்கு அணுவளவு நன்மையாக இல்லை.

 நூலைப் படித்ததும் அதில் இருந்து அறிந்துகொண்டது,  கல்வி அறிவு எந்தளவு முக்கியம் என்பதுதான். உண்மையில் மக்கள் தெளிவாக இருந்தால் மதவாத வெறியர்களான தாலிபன்கள் அங்கு ஆட்சியில் ஏறியிருக்க முடியாது. மக்கள் தங்களின் உயிருக்கான பாதுகாப்பை சுதந்திரத்தை அடகு வைத்து வாங்கியிருக்கிறார்கள். நஜிபுல்லா படுகொலை, சிறுபான்மையினர் இனப்படுகொலை அதிர்ச்சி ஏற்படுத்திய பகுதிகள்.

அண்டை நாடான ஆப்கனிஸ்தான் பற்றி எளிதாக புரிந்துகொள்ள பா ரா எழுதியுள்ள இந்த நூல் போதுமானது. தாலிபன்களின் வரலாற்றோடு ஆப்கன் பற்றியும் விரிவாக எழுதி மேற்கு நாடுகளின் நோக்கங்களை விளக்கியிருக்கிறார்.

கோமாளிமேடை டீம்

படம்

மெட்ராஸ் பேப்பர்

ஜீரோ டிகிரி பப்ளிஷிங்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்