நிர்வாணப்படம் எடுத்து சினிமா வாழ்க்கையை பலிகொடுத்து கொலையான நடிகர்!

 



பாப் கிரேன்




சினிமா, டிவி நடிகர்களின் வாழ்க்கையை திரையிலும் அதற்கு பின்னாலும் மக்கள் பின்தொடர்கிறார்கள். கவனிக்கிறார்கள். இப்படி கவனிப்பதில் மக்களுக்கு சுவாரசியம் கூடுகிறது. நடிகர்கள் அவர்களின் புகழுக்கு கொடுக்கும் விலையாக அந்தரங்க வாழ்க்கை உள்ளது. இந்த வகையில் அரிசோனாவைச் சேர்ந்த நடிகர் பாப் கிரேன் இணைகிறார். இவர் 1960களில் வெளியான ஹோகன்ஸ் ஹீரோஸ் தொடரில் முன்னிலை நடிகராக இருந்து பிரபலமானவர். பாலியல் சார்ந்த வினோத பழக்கங்கள் அவரது டிவி தொடர் வட்டாரத்தில் கசிய, வேலைவாய்ப்பை இழந்து, மனைவி விவாகரத்து செய்துவிட குடியில் பாதி அழிந்தார். மீதியை அவரது நட்புகள் அழித்தன.

1978ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று விண்ட்மில் டின்னர் தியேட்டருக்கு சொந்தமான கட்டிடத்தின் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கொலைக்கு காரணமானவர்களை யாரென இன்றுவரை கண்டறிய முடியவில்லை.

இறந்துகிடந்தவரின் கழுத்தில் மின்சார வயர்கள் தொங்கின. இடது காதின் மேற்புறம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. நாற்பத்தொன்பது வயதில் பாப் கிரேனின் வாழ்க்கை பரிதாபமாக முடிவுக்கு வந்தது. பாப் கிரேனுக்கு இரண்டு மனைவிகள் உண்டு, ஒருவர், அவரது பள்ளிக்கால தோழி. அடுத்து நடிகை ஒருவரை மணந்தார். இரு மனைவிகள் மூலம் ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.

செக்ஸ் மீது இருந்த அளவுக்கு அதிகமான ஆர்வம், வீட்டில் செக்ஸ் வீடியோ எடுத்தது என்பவை பாப் கிரேனை சற்று நோயாளி போல காட்டுகிறது. இவரைப் பற்றி ஐந்து நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு நூலை அவரது மகன் ராபர்ட் கிரேன் எழுதியிருக்கிறார். கிரேன் – செக்ஸ், செலிபிரிட்டி அண்ட் மை ஃபாதர்ஸ் அன்சால்வ்ட் மர்டர் இதுதான் நூலின் பெயர். ‘’அப்பாவின் கொலை வழக்கு பற்றிய விவகாரத்தில் பனிமூட்டம் போல விஷயங்கள் தெளிவற்று உள்ளன. என் வாழ்வு முழுமைக்கும் அவரின் கொலை வழக்கு பற்றிய வருத்தம் இருக்கும் ’’ என்றார்.

கனெக்டிகட்டில் பிறந்த பாப் கிரேன், ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து பிறகு டிவியில் நடிக்கத் தொடங்கினார். 1960களில் டிவியில் சிட்காம்கள் வெற்றி பெற்று வந்தன. 1965இல் ஹோகன்ஸ் ஹீரோ என்ற டிவி தொடரை தயாரித்தனர். அதில் கர்னல் ஹோகன் என்ற பெண்கள் மீது காதல் ஆசை கொண்ட ஜெர்மன் அதிகாரியாக பாப் கிரேன் நடித்தார். இந்த தொடர், மகத்தான வெற்றி பெற்றது.

ஆனால் இதில் கிடைத்த புகழை பாப் கிரேன் எப்படி பயன்படுத்திக்கொண்டார் என்பதில் தொடங்குகிறது வில்லங்கம். தன்னிடம் பேச வந்த பெண்களை மூளைச்சலவை செய்து  நிர்வாணமாக படமெடுத்து வைத்துக்கொள்ளத் தொடங்கினார். புகைப்படங்கள், வீடியோ என பாலியல் ஆசை நீண்டது. அப்படி என் தந்தை செய்தது எல்லாம் பரஸ்பரம் இருவரும் ஒப்புக்கொண்டதால்… இதில் போதைப்பொருட்களோ, கட்டாயப்படுத்தலோ ஏதுமில்லை. பெண்களுக்கு என் தந்தையைப் பிடித்திருந்தது என ராபர்ட் கூறுகிறார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் யாருமில்லை. இவரது நிர்வாண வீடியோக்களை எடுத்து கொடுத்தவர் பெயர், ஜான் ஹென்றி கார்பென்டர். வீடியோ கேமராக்களை விற்பதை தொழிலாக செய்து வந்தவர்தான் கார்பென்டர்.

பெண்கள் மீதான மோகத்தை வேலை செய்யும் இடத்திலும் பாப் கிரேன் தொடர்ந்தார். அங்கு சிந்தியா லின் என்ற பெண்ணுடன் முறையற்ற உறவை வைத்திருந்தார். பிறகு அந்த பெண் நடித்த பாத்திரத்தில் நடிக்க வந்த இன்னொரு பெண்மணியான பேட்ரிசியா ஆல்சன் என்பவருடன் காதல், காமம் என இரண்டையும் கொண்டார். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து குறுகிய காலத்தில் பேட்ரிசியாவை மணந்தார். இரு பிள்ளைகளைப் பெற்றார்.

உடலுறவு மீதான அதீத ஆர்வம் பாப் கிரேனின் மனநிலையைப் பாதித்தது. அவர் டிஸ்னி தயாரித்த படத்தின் படப்பிடிப்பில் தான் நிர்வாணவாக எடுத்து இளம்பெண்களின் புகைப்படங்களை பிறரிடம் காட்டினார். இது தயாரிப்பாளர்களுக்கு தெரிய வர, மக்கள் பேச, நேஷனல் என்கொயர் என்ற நாளிதழில் செய்தியானது.

அதன்பிறகு பாப் கிரேனுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டிவி தொடர், சினிமா என ஒப்புக்கொண்ட பாத்திரங்களில் கூட நடிக்க முடியவில்லை. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை நிராகரித்தனர். பொது மக்களின் கருத்து, பாப் கிரேனுக்கு எதிராக இருந்தது. அதை வெகுஜன திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எதிர்கொள்ள முடியவில்லை. பிறகு பாப், சோகத்தில் கிளப்புகளில் குடித்து குடியில் நீந்தத்தொடங்கினார். அங்கு வரும் பெண்களோடு உறவுகொள்ளத் தொடங்கினார்.

டிவி சேனல்களில் பாப் நடித்து வந்த தொடர்களுக்கான கலாசாரம் மாறியது. அப்போது, அவருக்கு நடுத்தர வயது வந்திருந்தது. பிறகு கிடைத்த பாத்திரங்கள் எல்லாமே தமிழ் திரைப்படங்களில் பாலாசிங் நடிப்பாரே அதுபோல துக்கடா பாத்திரங்கள்தான். கிரேன், தனது நண்பர் கார்பென்டருடன்தான் சுற்றிக்கொண்டிருந்தார். பிறகு இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.

1978ஆம் ஆண்டு பாப் கிரேன் இறந்துகிடந்த இடத்தில், அவரைப் பற்றி அறிந்தவர்கள் விசாரித்தவர்கள் ஜான் கார்பென்டரை அதிகம் சந்தேகப்பட்டனர். அந்த காலத்தில் டிஎன்ஏ சோதனைகள் புழக்கத்திற்கு வராத காரணத்தால் பாப் கிரேனை கொன்றது கார்பென்டரா அல்லது வேறு ஆளா என உறுதி செய்ய முடியவில்லை. கார்பென்டரின் காரில்  பாப்பின் ரத்தம் இருந்தது. ஆனாலும் கொலைக்கான ஆயுதம் என்பதை காவல்துறையால் உறுதி செய்ய முடியவில்லை. அதை கண்டுபிடிக்கவும் இல்லை.

பாப், கார்பென்டர் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த பெண்களின் கணவர், காதலர் கோபத்தில் பாப்பை கொன்றிருக்கலாம் என்ற கூட வழக்கை ஆராய்ந்தனர். ஆனால் அப்படி பெரிதாக வாய்ப்பில்லை என்று தெரிந்து விசாரணையை கைவிட்டுவிட்டனர். பாப் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜான் கார்பென்டர் காலமானார்.

 

 

 

 

லைனெட் ரைஸ்

பீப்புள் இதழ்

கருத்துகள்