டிஜிட்டல் பாகுபாடுகளால் பாதிக்கப்படும் ஏழை, வயதான மக்கள்!

 




இப்போது நீங்கள் படிக்கும் கட்டுரை டிஜிட்டல் உலகில் ஏழைகள், கல்வியறிவற்றவர்கள் படும்பாடுகளைப் பற்றியது. அண்மையில் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, அனைத்து கடைகளிலும் க்யூஆர் கோட் முதன்மையாக இருந்தது. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டி கடை ஒன்றில் சாப்பிட்டு 30 ரூபாயைக் கொடுத்தபோது, 24 ரூபாய் போக , ஆறு ரூபாய்க்கு பதில் ஐந்து ரூபாய்தான் கிடைத்தது. ஒரு ரூபாய்தான் நஷ்டம். ஆனால் அது உணவக உரிமையாளருக்கு அல்ல எனக்கு நேரிட்டது. க்யூ ஆர் கோடு வழியாக பணத்தை கட்டுவது எளிதானது. ஆனால் அதற்கு கட்டணம் விதிக்கும்போது நிலைமை என்னாகும்? வலுக்கட்டாயமாக ரொக்க பரிமாற்றத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

திருவண்ணாமலையில் எனக்கு டீ வாங்கிக்கொடுத்து அவரது அலுவலக அறையில் தங்க வைத்தவர், செய்த செலவுகள் அனைத்தும் க்யூஆர் கோட் வழியாகத்தான். நான் பணமாகவே எடுத்து அனைத்து செலவுகளையும் செய்தேன். நண்பர் தனக்கு நன்கறிந்த குறிப்பிட்ட ஆவின் பார்லர் கடையில் டீ அருந்துகிறார். சீனிவாசா உணவகத்தில் பட்டை சாதம் சாப்பிடுகிறார்.  எனவே, டிஜிட்டலில் பணம் செலுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், எனக்கு அதெல்லாமே அந்நிய இடங்கள்தான். ரொக்கமாக செலவு செய்வதையே நான் விரும்பினேன். உலகமே டிஜிட்டலாக இருக்கும்போது, இயங்கும்போது  உங்களை நீங்களே நொந்துகொள்வீர்கள்.

இன்று மாநில அரசின் உதவித்தொகை வங்கிக்கணக்கிற்கு வந்துவிடுகிறது. அதை அரசு உங்களுக்கு கூறினாலும், வங்கி கூறினாலும் குறுஞ்செய்திதான் வரும். அதை நீங்கள் எடுத்துப் பார்க்கவேண்டும். எரிவாயு உருளையை பதிவு செய்தலும், ரயிலுக்கு முன்பதிவு செய்தலும் இதே முறையில்தான் உள்ளது. உங்கள் கையில் நவீன போன் வேண்டும். அதில் இணைய டேட்டா இருக்கவேண்டும். இல்லையெனில் உலகில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றே யாரும் கருதமாட்டார்கள்.

வாட்ஸ்அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பதும், வீசாட், அலிபேயில் பொருட்களுக்கான தொகையை கட்டுவதும் எந்த தவறுமில்லை. ஆனால் இதை பழகாத மக்களுக்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? அவர்களை அச்சுறுத்தாமல் அரசின் வசதிகளைப் பெறுவதற்கு யாரேனும் உதவுகிறார்களா என்று பார்த்தால் அப்படியான உதவிகள் மிக அரிதாகவே உள்ளன.

இங்கிலாந்தில் மேற்கு லண்டனில் உள்ள இயாலிங் பகுதி. இங்கு வாழும் ரூத், பீட்டர் ஜாஃபே என்ற வயதான தம்பதியினர் விமானத்தில் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். ரியான் ஏர் என்ற நிறுவனம், அவர்கள் தங்கள் டிக்கெட்டை போன் வழியாக காட்டாததற்கு கோபப்பட்டனர். மேலும் , அவர்களின் டிக்கெட்டை தாளில் அச்சிட்டு தருவதற்கு 140 டாலர்களை கட்டணமாக கேட்டனர். இது அங்கு சர்ச்சையான செய்தியாக மாறியது.

விமானசேவை நிறுவனம்,இங்க்ஜெட் பிரிண்டர், அதன் மை செலவு அதிகம் என காரணம் சொல்லியது. வயதான தம்பதியினர் ‘’ரியான் ஏர் நிறுவன வலைத்தளத்தில் டிக்கெட் பதிவு செய்வதில் குழம்பி போய்விட்டோம்’’ என பதில் அளித்தனர். தொழில்நுட்ப அறிவு அனைவருக்கும் இருக்காது. அறியாமை என்பதை அவமானமாக நினைக்க வைத்த விமானசேவை நிறுவனத்தை பற்றி சொல்ல நல்வார்த்தை ஏதும் என்னிடம் இல்லை. குறைந்தபட்ச கண்ணியத்துடன் வாடிக்கையாளர்களை நடத்தக்கூடவா தெரியாது?

மின்னஞ்சலை பார்க்கவில்லை, வலைத்தளத்தில் செக் இன் செய்யவில்லை என இயந்திரத்தனமாக பதில் கூறுகிறார்கள். தொழில்நுட்ப அறிவு படைத்தவர்கள் மட்டும்தான் விமானத்தில் ஏறி பயணிக்கவேண்டும் என கூறினாலும் கூறுவார்கள் போல.

இணையம், அதில் பாஸ்வேர்ட், மோசடி, குப்பை மின்னஞ்சல்கள், பாதுகாப்பு குறைபாடுகள் என அத்தனையையும் ஒருவர் தெரிந்துகொண்டு இயங்குவது மிக கடினமான ஒன்று. அதிலும் வயது மூத்தவர்களுக்கு இவையெல்லாம் கடினமான  பணிகளாகவே இருக்கும்.

மேற்கு நாடுகளில் கார்களை நிறுத்துமிடத்தில் கூட ஆட்கள் இருப்பதில்லை. அனைத்துமே கருவிகள். எந்திரங்கள்தான். அவற்றுக்கு நீங்கள் பழகாதபோது, அந்த வசதியை பயன்படுத்த முடியாது. மருத்துவமனைகளில் அப்பாயின்ட்மென்ட் கூட குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கும்படி நிலைமை மாறிவிட்டது. போன் இல்லாத, குறுஞ்செய்தியை படிக்கத்தெரியாத, அதை அறியாத நோயாளிகளின் நிலைமை என்னாவது?

இங்கிலாந்தில் இருபது வீடுகளுக்கு ஒரு வீடு என்ற அளவில் இணையம் இல்லை. இதேபோல வங்கிக்கணக்கு, போன் இல்லாத வீடு என நிறையப்பேர் வாழ்கிறார்கள். இதன் அர்த்தம் பேடிஎம், போன்பே, கூகுள்பே பற்றி தெரியாத மக்கள் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு டிஜிட்டல் உலகை அறிமுகப்படுத்த ‘தி குட் திங்க்ஸ் பவுண்டேஷன்’ என்ற தனியார் அமைப்பு நிறைய முயற்சிகளை செய்கிறது. வயதானவர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை போனை டேபை பயன்படுத்த பயிற்சி அளிக்கிறது. முன்னணி செல்போன் நிறுவனங்களோடு இணைந்து சிம் கார்டுகளை குறைந்த விலைக்கு வழங்குகிறது.

ரொக்க பரிவர்த்தனையை ஒழிப்பது சரிதான். ஆனால், அதற்கான அறிவை மக்களுக்கு வழங்கிவிட்டு செய்வது அதிர்ச்சியை உருவாக்காது. இந்த வகையில் இங்கிலாந்தில் பல நூறு ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், முக்கியமான இடங்களில் 5 கி.மீ. ஒன்று என முக்கிய வங்கி ஏடிஎம்கள் இயங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வளர்ந்த நாடான இங்கிலாந்திலும் 1.3 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அரசு, முழுக்க ரொக்க பரிவர்த்தனையை ஒழிக்கும் விதமாக மாறுவது இந்த மக்களுக்கு தினசரி வாழ்க்கையை பிரச்னைக்குரியதாக மாற்றுகிறது. அந்த நாட்டில் 5 சதவீத வீடுகளில் இணைய இணைப்பு இல்லை.

முழுக்க கணினி அமைப்பு, தட்டச்சு எந்திரங்கள், க்யூஆர் கோட் என்பதெல்லாம் அதை அறியாதவர்களுக்கு புதிய உலகாகவே இருக்கும். பல்வேறு போக்குவரத்து சேவைகளில் இருந்து மனிதர்களை நீக்குவது வேலையிழப்பு அபாயத்தை கூறுவதோடு, மனிதர்களின் தொடர்பே மெல்ல டிஜிட்டல் உலகில் குறைந்து வருகிறது என்பதையும் அறிய வைக்கிறது. மக்களுக்கு முறையான பயிற்சியளித்து மாற்றங்களை அறிமுகப்படுத்தி அவர்களையும் மெல்ல அழைத்துச்செல்வது பிரச்னைகளை குறைக்கும்.

கார்டியன் இதழில் வெளியான ஆண்ட்ரூ ஆண்டனி கட்டுரையை தழுவியது.

pixabay

கருத்துகள்