மறுபிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைத்து வைத்த தீயசக்தியுடன் போராடும் பூசாரி!

 ஃபிரம் நவ் ஆன் இட்ஸ் ஷோ டைம்

ஃபிரம் நவ் ஆன், இட்ஸ் ஷோ டைம்

கே டிராமா

ராக்குட்டன் விக்கி

இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைக்கப்பட்ட தீயசக்திக்கும், அதை அடைத்த பூசாரிக்குமான  ஜென்மச் சண்டை.

தொன்மைக் கால கொரியா. அங்குள்ள சிற்றரசு நாடு. அதில் வாழும் தலைமை பூசாரி, பஞ்சம் தீர்க்க தனது புனித கண்ணாடியைக் கொண்டு  வேண்டிய மழையை வரவைக்கிறார். நாடு செழிப்புறுகிறது. நாட்டு மக்களும் மகிழ்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் மகள், அதாவது இளவரசி அனைவரின் முன்னிலையில் தான் பூன் சிக் என்ற தலைமை பூசாரியை காதலிப்பதாக பேனர் பிடித்து சொல்கிறாள்.

பூன் சிக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை, இளவரசியை தான் விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த நொடி அவரின் தலையை வெட்டி எறிந்துவிடுவார்கள். அவரின் இனத்தை  அழித்து வீடுகளை கொளுத்திவிடுவார்கள்.

எனவே இளவரசியிடம் அரச குல ஆட்களைப் பார்த்து மணந்துகொள்ளுங்கள். தான் தாழ்ந்த குலத்தை சார்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால், இளவரசி கேட்பதாக இல்லை. தலைமை பூசாரியும், இளவரசியும் குணத்தில் ஒன்று போலத்தான். தன்னை அழித்துக்கொண்டாவது பிறருக்கு நன்மை செய்பவர்கள். இதுதான் அவர்களை ஒன்றாக்குகிறது. ஆனால், பக்கத்து நாட்டைச் சேர்ந்த ஆட்சியாளர் இளவரசியைப் பார்த்து காதல் கொள்கிறார். காமம் அல்ல. எனவே இளவரசியை மணம் செய்து கொடுத்தால் சிற்றரசு அமைதியாக இருக்கும் . இல்லையேல் அதை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார்.

குறுநாட்டு மன்னர் பூசாரியை மகளுக்கு மணமுடிக்க வாக்கு கொடுத்த நிலையில் என்ன செய்வதென தடுமாறுகிறார். தீயசக்தியின் செயலால், இளவரசியின் பாதுகாவலரே துரோகம் செய்து பூன் சிக்கை சிறையில் தள்ளுகிறார். இளவரசியும், பூன்சிக்கும் தீயசக்தியோடு போராடி அந்த மோதலில் இறக்கிறார்கள். கடைசி நேரத்திலும் கூட தீயசக்தியை பூசாரி மூங்கில் குடுவையில் அடைத்துவிட்டு இறந்துபோகிறார். 

இளவரசி, பூசாரி என இருவருமே மறுபிறப்பு எடுத்து மீண்டும் ஒன்றுசேர்வது போல சூழல் அமைகிறது. அதேநேரம் தீயசக்தியும் கடலில் இருந்து விழிப்புற்று எழுகிறது.காதல் ஒன்று சேர்ந்ததா, தீயசக்தி இந்த முறை செய்த சதிவேலைகள் என்ன என்பதை அறிய தொடரைப் பார்க்கவேண்டும்.

பூசாரி, புகழ்பெற்ற மேஜிக் வல்லுநராக பிறந்து வாழ்கிறான். இளவரசி, அங்குள்ள காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறாள்.  அவளது குறைந்த வருமானத்திலும் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்கிறாள். அவளின் அப்பா, மந்திரவாதி மூலம மரணம் அடைந்திருக்கிறார். அப்பாவின் நண்பரான கமிஷனர் அப்படித்தான் கூறுகிறார். ஊடகங்களும் அதை அப்படியே ஒப்பிக்கின்றன. ஆனால், இளவரசியான கான்ஸ்டபிளோ அதை நம்புவதில்லை.

தனது அப்பாவின் இறப்புக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என தேடுகிறாள். அது வேறுயாரும் அல்ல. நாயகனின் தாத்தாதான்.  மேஜிக் வல்லுநராக பிறக்கும் பூன் சிக், படு சுயநலமாக வாழ்கிறான். அவனது தாத்தா மாந்திரீகர் என்பதால் அவனால் ஆவிகளை பார்க்க முடிகிறது. அவர்களில் மூன்று பேர்களை வேலைக்கு வைத்து மேஜிக் கலைகளை நடத்தி ஏராளமாக பணம் சம்பாதிக்கிறான். அதை வைத்து மூன்று ஆவிகளின் குடும்பத்திற்கு உதவிகளை செய்கிறான்.

மற்றபடி மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு இருந்தாலும் கூட சுயநலமான மனிதர்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என கூறுகிறான். அவனது தாத்தாவின் வாழ்க்கை, அவர் மீதான அபாண்ட குற்றச்சாட்டு அவனை அப்படி முடிவெடுக்க வைக்கிறது. அவனது வம்சத்தில் ஆண்கள் மாந்திரீகனாவது விதி. ஆனால் அதை மேஜிக் கலைஞன் ஏற்க மாட்டேன்கிறான். அவனது வழிபாட்டிற்குரிய தெய்வ ஆன்மா, அவனை மிரட்டுகிறது. இதனால் வேறுவழியின்றி இளவரசி கான்ஸ்டபிளாக இருக்கும் காவல்நிலையத்தில் தன்னார்வ போலீசாக வேலைக்கு சேருகிறான். இப்படித்தான் இளவரசிக்கும் பூன்சிக்குக்கும் மீண்டும் உறவு தொடங்குகிறது.

பெண் கான்ஸ்டபிளுக்கு அவன் ஆவிகளை வைத்து வேலை வாங்குவது தெரிகிறது. எனவே, தீர்க்க முடியாத அமானுஷ்ய வழக்குகளை இரண்டு பேரும் சேர்ந்து தீர்க்கலாம் என முடிவு செய்கிறார்கள். அவளுக்கு மெல்ல மேஜிக் கலைஞன் மீது ஈடுபாடும்  காதலும் வருகிறது.  இதற்கிடையில் கமிஷனரின் மகன் காவல்துறையில் டிடெக்டிவாக இருக்கிறார். அவருக்கு இந்த பெண் கான்ஸ்டபிள் மீது அப்படியொரு காதல். ஆனால் அவரது அப்பா, அக்காதலை ஏற்பதில்லை. அந்தஸ்து பிரச்னை என்கிறார். அவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் ஆசை  உள்ளது. அதற்கேற்ப ஒரு வரனைப் பார்க்க நினைக்கிறார். இதற்கிடையில் தீய சக்தியும் பழிவாங்குவதற்கு கடலில் இருந்து வெளியே வருகிறது. பூன் சிக்கை தேடி அலைகிறது.

அர்ப்பணிப்பான காதல் காலம் கடந்தாலும் ஒன்றாக சேரும்  என கூறியிருக்கிறார்கள். அதற்கேற்ப தொடரில் நகைச்சுவை, நெகிழ்ச்சி, துரோகம், சதி என அனைத்தும் கொண்டதாக இருக்கிறது. மேஜிக் கலைஞனாக நடித்த நடிகரின் முகம் ஏனோ வாடி வதங்கிப் போய் தெரிகிறது. அதில் புத்துணர்ச்சியே இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்னையா? இவருக்கும் சேர்த்து  பெண் கான்ஸ்டபிள் – இளவரசி பாத்திரத்தில் நடிதத நடிகை நடித்துவிடுகிறார். மூன்று பேய்களின் பாத்திரங்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பின்னணி கதை, அதை நிறைவு செய்து முக்தி பெறுவது ஆகியவை தொடர்பான காட்சிகளும் நன்றாக உள்ளன.

ஃபேன்டசியான கதை. அதற்கான அம்சங்களோடு நகைச்சுவையும் சேர நன்றாகவே இருக்கிறது. நாயகனின் முகத்தை பார்க்காமல் நாயகியின் முகத்தை பாருங்கள். போதும்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்