உண்மையான காதலை தவறான மனிதர்களிடம் தேடும் இருவரின் கதை!

 






ஃபர்பெக்ட் கிரைம் - ஜே டிராமா




பர்ஃபெக்ட் கிரைம்

ஜே டிராமா

ராக்குட்டன் விக்கி

ஏடிபி என்ற கட்டிட உள் அலங்கார நிறுவனம் ஜப்பானில் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் டைரக்டர் தகாகுமா சானுக்கு, பிளானிங் பிரிவில் உள்ள மசிமா கவோரி என்ற இளம்பெண்ணோடு முறை தவறிய உறவு இருக்கிறது. அடிக்கடி உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்திலும் இந்த செக்ஸ் உறவை சிலர் அறிந்திருக்கிறார்கள். டைரக்டருக்கு மணமாகியிருக்கிறது. அவரது மனைவி அவரை காதலிக்கிறார் . ஆனாலும் அவரது கணவர் மசிமாவின் இளமையான உடலுக்கு அடிமையாகி செக்ஸ் இன்பம் அனுபவித்து வருகிறார். மசிமாவுக்கு இந்த உறவு வெளியே தெரிந்தால் தனக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என நினைக்கிறாள்.

 ஆனால் அதில் இருந்து அவளால் உண்மையாகவே வெளியே வர முடியவில்லை. அப்போது அமெரிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து சினோமோ சான் என்ற வடிவமைப்பாளர் வருகிறார். அவர், மசிமாவின் தகாத உறவை அறிந்து அதை துண்டித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அந்த உறவை துண்டித்துக்கொண்டு சினோமோவுடன் அவள் காதல் கொள்கிறாள். இந்த உறவு நிலைத்ததா, உண்மையான காதலாக மாறியதா என்பதே இறுதிப்பகுதி.

 

தொடரின் இயக்குநருக்கு காதல் என்பது பற்றியோ உடல் தேவை என்பது பற்றியோ பெரிய அறிவு இல்லை என வைத்துக்கொள்ளலாம். காட்சிகளைப்ப் பார்த்தால் இது தொடரா எக்ஸ்வீடியோ தளத்தில் இருந்து எடுத்து எடிட் செய்த ஏதாவது வீடியோ பார்க்கிறோமா என்று தோன்றும்.

மசிமா டைரக்டர் தகாகுமா சானுடன் உறவு கொள்கிறாள். பிறகு அவரை பிரேக் அப் செய்துவிட்டு சினோமா சானுடன் காதல் செய்கிறாள் உடலுறவு கொள்கிறாள். சினோமா சான், மசிமாவை உள்ளன்போடு காதலிப்பதில்லை. செக்சுக்காக அவளை பயன்படுத்திக்கொள்கிறான். கூடுதலாக அவன் டைரக்டர் தகாகுமா சானை பழிவாங்க நினைக்கிறான். டைரக்டரின் மனைவியை சினோமோ காதலிக்கிறார். அவளும் அவனை நண்பன் என நினைத்தாலும் சொன்னாலும் கூட உடலுறவு கொள்ளும்போதும் அவனை தடுப்பதில்லை. சினோமோவின் இன்ட்ரோவர்ட் நண்பன் இருக்கிறான். அவன் தனது காதலை மசிமாவோடு சொல்வதற்கு முன்னரே அவள் டைரக்டரோடு உறவில் ஆழமாக ஈடுபடுகிறாள். அடுத்து அவளை அதில் இருந்து பிரிக்க நினைப்பதற்குள் அந்த வேலையை சினோமா சான் செய்கிறான். முழுக்க அவளை தன்னுடைய பிடியில் வைத்துக்கொள்கிறான். இந்த ஒனோ சானை காதலிக்க இன்னொரு பெண் ஆபீசில் இருக்கிறாள். அவளை மட்டுமாவது நீங்கள் தொடரைப் பார்த்து தெரிந்துகொண்டால் நல்லது.

மருதமலை படத்தில் வரும் யாரு இவளை முதலில் கல்யாணம் பண்ணுனது என்ற பல புருஷன் காமெடி போலவே இங்கு காதலும் செக்சும் இணைந்திருக்கிறது. எது முன்னால், பின்னால் என நமக்கு தெரிவதில்லை.

ஆறு எபிசோடுகளில் முடியவேண்டிய கதை. பத்து எபிசோடுகளுக்கு இழுக்கிறார்கள்.  தொடரில் வரும் பாத்திரங்கள் பலவற்றுக்கும் காதல், திருமணம், செக்ஸ் உறவு ஆகியவற்றுக்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. அவர்கள் பேசுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது.

டைரக்டர் தகாகுமா சான் பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். இவர் மசிமா காவோரியோடு முறையற்ற உறவில் இருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு காதல் மனைவி இருக்கிறாள். அவளும் அவரை மிகவும் நேசிக்கிறாள். இதை டைரக்டர் அறிந்தே இருக்கிறார். ஆனாலும் வேறொரு பெண்ணின் உடல் செக்ஸ் சுகத்திற்காக தேவைப்படுகிறது. அதை அவர் பிரேக் அப் செய்த மசிமாவிடம் கூட இறுதிவரை வலியுறுத்தி மீண்டும் உறவை தொடர முயல்கிறார்.

இவரைப் போன்ற இன்னொரு பாத்திரம் இவரது மனைவி, மெய்வா சான் கல்யாணம் உறுதியானது தெரிந்தாலும் சினோமா சான் உடலுறவுக்கு அழைத்ததும் மறுக்காமல் செல்கிறாள். அன்றைய இரவை மகிழ்ச்சியாக  கழிக்கிறார்கள். ஆனால் தான் காதலிப்பது டைரக்டர் தகாகுமா சான் என்கிறாள். இன்னொரு இடத்தில், நியூயார்க் வருபவள். சினோமா சானை தனியாக சந்தித்து மீண்டும் உடலுறவு கொள்கிறாள். அப்போதும் இன்ப வெறியில் கணவன் பெய்ர் தகாகுமா சான் என்பதை உச்சரிக்கிறாள். நண்பனான சினோமா சானுடன் உச்ச இன்பம் அடைகிறாள். இறுதியாக மணவாழ்வில் தனது கணவன் தன்னை விரும்பவில்லை என அறியும்போது சினோமா  சானை அழைத்து வருந்துகிறாள். தற்கொலை செய்வதாக புலம்புகிறாள். ஆனால் காதலை புரிந்துகொள்ளாத கணவனை விவாகரத்து செய்வதாக ஒருக்காலும் கூறுவதில்லை.  உண்மையில் மெய்வாவிற்கு கணவர் மீது இருப்பது காதலா, சமூக பாதுகாப்பு பற்றிய சுயநலமா, அல்லது ஏதேனும் மனநல குறைபாடா எதுவும் புரிவதில்லை.

இதேபோல ஒரு காட்சியில் தகாகுமா சான் , மனைவி, மசிமா காவோரி என இருவரையும் மனப்பூர்வமாக காதலிக்கிறேன் என  கூறுகிறார். தகாகுமா சான், மெய்வா சான் என இரு பாத்திரங்களுமே மனதளவில் நேர்மை இல்லாதவர்கள். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இன்பம் துய்த்துவிட்டு செல்பவர்கள். அவ்வளவுதான்.

தொடரில் சினோமா சான், ஒனோ சான் என இரு வடிவமைப்பாளர்களின் பாத்திரங்களும் குறைந்த பட்சம் மனசாட்சிக்கு பயப்படுபவர்களாக நேர்மையாக இருக்கிறார்கள். சினோமா சான், மசிமாவை பழிவாங்குவதாகவே செயலை தொடங்குகிறான். அவளை தகாகுமா  சானிடம் இருந்து பிரேக் அப் செய்ய வைக்கிறான். முறைதவறிய உறவு அவளை காயப்படுத்தும் . அதற்கு எதிர்காலம் இல்லை என வெளிப்படையாக பேசுகிறான். அது மசிமாவை கரைந்தழச் செய்கிறது.

தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது போல சினோமா முன்னாலேயே தெருவில் அழுகிறாள். இது சினோமாவின் மனதை கரைக்கிறது. வெள்ளந்தியான ஒரு பெண்ணை நாம் காயப்படுத்துகிறோம் என உள்ளுக்குள் மருகுகிறான். பின்னாளில் மசிமா மீது காதல் வந்தபோதும் கூட அவனால், அவன் செய்த தவறுகளையே மன்னிக்க முடியவில்லை. எனவே, அவள் மணந்துகொள்ள தனது தேர்வாக தனது நண்பன் ஒனோ  சானின் பெயரைக் கூறிவிட்டு நியூயார்க் செல்கிறான்.

உண்மையில் அழகும், திறமையும் கொண்ட மசிமா காவோரியை அவனால் பழிவாங்க முடியவில்லை. அவனும், அவளும் அவர்களுக்கு மட்டுமேயான காதலை மனிதர்களிடையே தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது கிடைப்பதில்லை. கிடைப்பது போல நம்பினாலும் அது அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் தவறான மனிதர்களின் இதயங்களாக உள்ளது.

  ஒனோ சானும் அப்படிப்பட்ட பாத்திரம்தான். அவனுகு மசிமாவின் திறமை பிடித்திருக்கிறது. அவளது அழகு, அறிவு ஈர்க்கிறது. ஆனால், அவள் முறை தவறிய உறவில் இழுக்கப்பட்டிருக்கிறாள். அவளை காப்பாற்ற வேண்டும் என்றால் கூட அவனின் அகவயமான இயல்பு காரணமாக அதை நடைமுறைபடுத்த முடியவில்லை. மசிமாவை காக்க முடியாது போகிறது. அவனுக்கான வாய்ப்பு வரும்போது மசிமா சினோமா சானை காதலிக்கத் தொடங்கியிருக்கிறாள். அதை அவன் உணர்ந்து அவனை விட்டு அவள் நீங்குவதே அவளை காக்கும் என நினைத்து சில செயல்களை செய்கிறான். அது சரியானதும் கூடத்தான்.

 ஆனால், மசிமா சினோமாவை நினைத்து கண்ணீர் விடுவதைப் பார்த்ததும், அவளை அவனைப் பார்க்கச்சொல்லி டிக்கெட் வாங்கி அமெரிக்காவிற்கு அனுப்பிவிடும் நேர்மை கொண்டவனாக மாறுகிறான். அவளது காதல் தனக்கானது இல்லை என புரிந்துகொண்டு வழிவிட்டுவிடுகிறான். அவளை செக்சுக்காக பயன்படுத்துவதோ, தானறிந்த விஷயங்களை வைத்து மிரட்டுவது கூட வாய்ப்பாக இருந்தாலும் அதை அவன் செய்வதில்லை.

மசிமா காவோரிக்கு காதல் தேவையாக இருக்கிறது. ஆனால், தனது உடலை தகாகுமா சானுக்கு கொடுத்தால் அன்பு கிடைக்கும் என நினைக்கிறாள். ஆனால், உண்மையில் அப்படி நடப்பதில்லை. அவளுக்கு தனது முறையற்ற உறவின் எதிர்காலம் தெரிகிறது. ஆனால், அதில் இருந்து எப்படிமீள்வது என தெரிவதில்லை. சினோமா சான் அதைத்தான் அடையாளம் காட்டுகிறான். சுதந்திரத்தை அடைய உதவுகிறான். அதனால் அவள் அவன் தவறுகளை மறந்து மன்னித்து காதலிக்கத் தொடங்குகிறாள். அமெரிக்கா சென்று அவனோடு வாழத்தொடங்குகிறாள்.   

ஏடாகூடமான தொடர். வீட்டிலுள்ளோர் தனித்தனியாக பார்க்கவும்.

வினோதமான ஜப்பானிய உறவுகள்….

 கோமாளிமேடை டீம்


கருத்துகள்