நோய்வாய்ப்பட்ட காதலனுக்கு, காதலி கொடுக்கும் அன்பு பரிசு! - லூக்கா - மலையாளம்

 
லூக்கா -மலையாளம்


லூக்கா

மலையாளம்

டோவினோ தாமஸ், ஆஹானா

இயக்குநர் – அருண் ஜோஸ்

 

அதீத காதலும் அதன் விளைவுகளும்…. இப்படித்தான் இந்தப்படத்தின் கதையைக் கூற வேண்டும்.

லூக்கா என்ற ஓவியர், ஓவிய கண்காட்சி ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தோழி மூலம் பங்கேற்க வருகிறார் நிஹா. அங்கு வாய் சும்மாயிருக்காமல் இதெல்லாம் ஒரு படைப்பா என கேலி பேச, லூக்காவிற்கும் நிஹாவிற்கும் முட்டிக்கொள்கிறது.

பிறகு மெல்ல சமாதானமாகி நட்பு கொள்கிறார்கள். பிறகு இருவருக்குமான கடந்தகாலம் தெரிந்துகொண்டபிறகு காதல் உருவாகிறது. லூக்காவின் பெற்றோர் முன்னமே துர் மரணங்களை சந்தித்தவர்கள். நிஹாவிற்கும் பாலியல் வல்லுறவு சார்ந்த மோசமான அனுபவம் இருக்கிறது. அதுவும் அவளின் மாமா மூலமாகவே. இதையெல்லாவற்றையும் மறக்க வைப்பதாக காதல், லூக்காவின் கலை இருக்கிறது.

இப்போது சொன்னதெல்லாம் படத்தின் பின்பகுதியில் நாம் அறிவது. படத்தின் தொடக்கமே லூக்கா அவனது வீட்டில் இறந்துகிடக்கிறான். அவன் எப்படி இறந்தான், அவனது பின்னணி, அவனது நட்பு, எதிரிகள் என காவல்துறை அதிகாரி தேடிவருகிறார். அப்படி தேடும்போது நிஹா என்ற பெண் எழுதிய டைரி அவருக்கு கிடைக்கிறது. அதன் வழியாக கதை நகர்கிறது. இதில், காவல்துறை அதிகாரிக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. அதையெல்லாம் கடந்து அவர் ஒரு பெண்ணை மணம் செய்திருக்கிறார். ஆனால் கடந்த கால காதலை அவரால் மறக்க முடியவில்லை. எனவே, மனைவியை விவாகரத்து செய்ய தீர்மானிக்கிறார். லூக்காவின் கதை வழியாக அவருக்கும் ஒரு தீர்ப்பு கிடைப்பதோடு கதை முடிகிறது. என்ன தீர்வு என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கொலை வழக்கு சார்ந்த கதைகளில் காவல்துறை அதிகாரியின் சொந்த வாழ்க்கை உள்ளே வருவது இப்போது பழைய டெக்னிக் ஆகிவிட்டது. ஏராளமான கதைகளில் அதே சேர்மானங்களை போடுகிறார்கள். மேகி என்றால் எம்எஸ்ஜி இருப்பது போல எதுவுமே மாறுவதில்லை.

லூக்கா வாழ வேண்டுமென நினைப்பவன்தான். ஆனால் இளம் வயதில் ஏற்பட்ட பெற்றோரின் மரணங்கள், அவனது மனதை பாதிக்கிறது. அதுவே பின்னாளில் குறைபாடாக மாறுகிறது. இறந்துபோனவர்களைக் கண்டால் தீவிரமான பதற்றம் ஏற்பட்டு மூர்ச்சையடைவது அவனது பிரச்னை. இதெல்லாம் தாண்டி அம்மா வழியாக ஏற்படும் நோய் அவனது காதலை உடைத்துப்போடுகிறது.

நிஹாவுக்கும் இதுபோல மோசமான பாலியல் சீண்டல், வல்லுறவு வரலாறு இருக்கிறது. அதை லூக்கா பார்த்தவுடனே கண்டுபிடித்து அதை ஓவியமாக்குகிறான். அதற்கு அவன் சொல்லும் விளக்கம் அருமை. துயரார்ந்த ஓவியத்தை நீண்டநேரம் பார்ப்பது போன்ற அனுபவத்தை படம் தருகிறது.

வலி, வேதனை, அவமானங்கள், தனிமை என வாழ்ந்து வந்து முதன்மையான பாத்திரங்கள் இருவருமே மரணத்தை தங்களது இறுதியான முடிவாக தேர்ந்தெடுக்கிறார்கள். நிஹாவுக்கு, லூக்கா மீது ஏற்படும் காதல் என்பது ஏறத்தாழ பித்து பிடித்த நிலை போன்றதுதான். அம்மா இருந்தாலும் அவளிடம் பகிர முடியாத அத்தனையையும் மிகச்சில நாட்களில் பழகிய லூக்காவிடம் அவள் பகிர்கிறாள். மனம், உடல் என இரண்டையும்தான். ஆனால் லூக்காவின் மனம் உடைந்திருப்பதை சரிசெய்ய முனைபவள், அவனது உடலும் விரைவில் நொறுங்கப்போவதை அறியும்போதுதான் அதீத முடிவை எடுக்கிறாள். அதையும் காதலின் பெயரால் செய்கிறாள். லூக்காவிற்கு முன்னதாகவே அவள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்கிறாள். அவள் இறந்த ஒரு வாரத்திற்கு பிறகு லூக்கா மரணமடைகிறான்.

இந்த இரண்டு முதன்மை பாத்திரங்களுமே மனிதர்கள் சூழ இருந்தாலும் தனிமையை உணர்கிறார்கள். சுற்றி நடக்கும் சூழலும், குடும்ப அமைப்புமே அவர்களது மனச்சிதைவுக்கு காரணமாக அமைகின்றன. லூக்காவிற்கு சிவன் வழிகாட்டியாக அமைகிறார் என்றாலும் அது அவனது குறைபாட்டிற்கு தீர்வாக அமைவதில்லை. இருவித மனநல குறைபாடுகள், புற்றுநோய் என இரண்டுமே அவனை தின்றுவருகிறது. இதில் நிஹாவிற்கு சிறுவயதில் நடந்த பாலியல் வல்லுறவு மனதின் வளர்ச்சியை சிதைக்கிறது. புதிய உறவுகளை வளர்ப்பது, அதை நம்புவது என்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் அவளுக்கு லூக்காவின் நட்பு கிடைக்கிறது. அதுதான் தனக்கு எல்லாமே என்ற நிலையில் அவனின் இறுதிநாள் பற்றி மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். எனவே, மனமொடிந்து போகிறாள். காதலுக்கும், காதலனுக்கும் சேர்த்து அவளே முடிவெடுக்கிறாள்.

அந்த முடிவை அறியும்போதுதான் பதைபதைப்பாக இருக்கிறது.

திரைப்படம், மனிதர்களின் அவல வாழ்க்கைக்கான விடுதலை மரணம்தான் என்று சொல்லி முடிகிறது.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்