தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி

 




யூமா வாசுகி




யூமா வாசுகி கவிதைகள்

தன்னறம் வெளியீடு

 விலை 300

யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார்.

 வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது.

இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து  மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே  என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் குழந்தையை ஆசிர்வாதமாக  நினைத்து கொஞ்சுவது என கவிஞரின் மனத்தையும் அதில் புரண்டோடும் சொற்களை நினைக்கும்போது  ஆச்சரியமாக உள்ளது. மனதில் இனம்புரியாத குளிர்ச்சியை தருகிற சொற்கள்.  

‘’அறியாத்தனங்களை

கண்டுகொள்ளாமலிருப்பதற்கும்

ஒரு எல்லை இருக்கிறது’’

 

‘’நான் நடக்க தரையிருக்கிறது

என்னுடைய காற்றிருக்கிறது’’

 

‘’இரவின் குளம்புகள்

வெற்றுக்குடல் மிதிக்கும்

குப்பைத்தொட்டி பச்சிளம் சிசுவை

குதறும் நாயாகிறது பசி’’

 

‘’மரணச்சுவை பழகும்

மயான இதயம் எனக்கு’’

 

‘’இழப்பின் வலியின்

சிதைவின் சுவையறியும் திருப்தி’’

 

‘’உரியதை எடுத்துக்கொள்ள

கொடுத்தவர்கள் வரவேண்டும்’’

 

‘’எதுவானாலும் மிக சீக்கிரம்

அடுத்தகணம் நிகழ்ந்தால் நல்லது’’

 

‘’இரண்டு சிகரெட்டுகளிலிருந்தால்

எந்த கவலையுமின்றி

ஒன்றைப் புகைக்கலாம்’’

 

‘’அச்சத்தின் துடிப்புகளுக்குள் எப்படி என்

ஆறுதலின் முத்தங்களைக் கடத்துவேன்’’

 

‘’என் நட்சத்திரங்களைத்தான்

உங்கள் வானுக்கு கொடுத்திருக்கிறேன்’’

 

‘’பிய்ந்த சிறகுகளுக்கான ரத்தம்

உன்னிடமிருந்து ஒழுகுவதைப்

பார்க்கவேண்டும் நான்’’

 

இந்த கவிதைத் தொகுதியில் இவையெல்லாம் நான் ரசித்த வரிகள். தனது மனதிலுள்ள இழப்புகளை, வலியை, அவநம்பிக்கையை யூமா வாசுகி சொல்லும் இடங்களில் சொற்கள் படிக்கும்போதே கூரிய கத்தியாக நெஞ்சை துளைக்கத் தொடங்கிவிடுகின்றன. எனவே, கவிதையை உள்வாங்கிக்கொண்டு யோசித்துப் பார்த்து சற்று இடைவெளி விட்டே நூலை படிக்க முடிந்தது. நூலில் உள்ள உள்பக்க ஓவியங்களையும் கவிஞரே வரைந்திருக்கிறார். 

நல்ல கவிதை நூலை படிக்கவேண்டும் என விரும்புபவர்கள் தவறாமல் யூமா வாசுகி கவிதைகள் நூலை வாங்கி வைத்து படிக்கலாம். கொண்டாடப்பட வேண்டிய கவிஞர்.

கோமாளிமேடை டீம்


நன்றி - புகைப்பட கலைஞர் வினோத் பாலுச்சாமி

நூலை வாங்க...

https://thannaram.in/product/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்