பால்புதுமையினரான மார்ஷா கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?

 








மார்ஷா பி ஜான்சன் கொல்லப்பட்டது ஏன்?

1992ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம்தேதி நாற்பத்து ஆறு வயதான மார்ஷா ஹட்சன் ஆற்றில் பிணமாக மிதந்தார். அப்போதுதான் பால்புதுமையினருக்கான நகர பேரணி நியூயார்க்கில் நடைபெற்று முடிந்திருந்தது. பால்புதுமையினரன மார்ஷாவின் இறப்பை காவல்துறை தற்கொலையாகவே கையாண்டது. ஒரு கும்பல், மார்ஷாவை அடிக்க துரத்திச் செல்வதை மக்கள் பார்த்து சாட்சி சொன்னபிறகே அவரின் தலையின் பின்புறம் அடிபட்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.

பிறகுதான் தற்கொலைக்கோண விசாரணை மாறி, கொலை என்ற ரீதியில் விசாரிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான மார்ஷா, பால்புதுமையினரின் உரிமைக்காக போராடியவர். ஸ்டோன்வால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தோழி சில்வியா ரிவேராவுக்கு உதவியவர். சில்வியா 2002ஆம் ஆண்டு காலமானார். இவருடன் சேர்ந்து மார்ஷா ஸ்ட்ரீட் டிரான்ஸ்வெஸ்டைட் ரிவெல்யூஷனரிஸ்  - ஸ்டார் என்ற அமைப்பை  தொடங்கினார்.

இந்த அமைப்பு நியூயார்க் நகரில் வீடற்று தெருவில் திரியும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கானது. 2021ஆம் ஆண்டு மார்ஷாவின் நேர்காணல் பே இட்  நோ மைண்ட் என்ற ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டு வெளியானது. அதில், நீங்கள் அனைவரின் உரிமைக்காக போராடவேண்டும். அதில் ஒருவர் விடுபட்டு போனாலும் உரிமைப் போராட்டம் முழுமையாக நிறைவடையாது என்று கூறியிருந்தார்.

1945ஆம் ஆண்டு மார்ஷா பிறந்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தந்தை வேலை பார்த்தார். சிறுவயதிலேயே பால்புதுமையினர் என்பதை உணர்ந்து பெண்களின் உடையை அணியத் தொடங்கி அவமானப்பட்டார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். க்ரீன்விட்ச் கிராமத்திற்கு வந்தார். பாலியல் தொழிலாளியாக மாறி தெருவில் வாழத் தொடங்கினார். ஏராளமான முறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.

ஹாட் பீச்சஸ் என்ற இசைக்குழுவில் இணைந்தவர், தனது உடையணியும் விதம் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். கிறிஸ்டோபர் தெருவின் மேயர் என்று புகழப்பட்டார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று கூட மதவாத கும்பல்களால் ஓரினச்சேர்க்கையாளர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் 1960களில் நிலைமை எப்படி இருந்திருக்கும் என நினைத்து பாருங்கள். பால்புதுமையினர் ஒன்றுகூடுவதற்கு, கைகளை கோத்துக்கொள்ளக்கூட தடை நிலவியது.  அதற்காக ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான பார் நடத்தப்படவில்லை என்று அர்த்தமல்ல. அதை மாஃபியா குழுக்கள் நடத்தி வந்தனர். ரெய்டை தடுக்க காவல்துறைக்கு பணம் இறைக்கப்பட்டது. மார்ஷா, ஸ்டோன்வால் இன் என்ற பாருக்கு அடிக்கடி சென்று வந்தார். 1969ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று நடைபெற்ற ரெய்டில் ஸ்டோன்வால் பார் மாட்டியது. பதிமூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மார்ஷாவின் பங்கு பற்றி அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரியவில்லை. ஆனால், சிலர் அவர் மதுபான குவளைகளை கண்ணாடி மீது தூக்கி எறிந்து உடைத்தார். கலவரத்தில் அவரும் ஈடுபட்டார் என்று கூறுகிறார்கள்.

1980ஆம் ஆண்டு வரை மார்ஷா தங்குவதற்கு வீடு என்று ஒன்று இருந்ததில்லை. சாப்பிடுவதற்கே பாலியல் தொழில் செய்து பிழைக்கும் நிலை. இதில் வீடு வாடகைக்கு பிடித்து வாழ்வது எப்படி சாத்தியம்? விக்கர் என்ற பெண்மணி ஹோபோகென் என்ற தனது அபார்ட்மென்டில் தங்க வைத்தார். அங்கு தரையில் படுத்து மார்ஷா தூங்கி வந்தார். இப்படித்தான் பனிரெண்டு ஆண்டுகள் அந்த அபார்ட்மென்டில் தோழியுடன் வாழ்ந்திருக்கிறார். பால்புதுமையினர் என வெறுப்பில் ஒருவர் சுட்டதில் தோட்டா அவரின் முதுகில் எடுக்க முடியாதபடி புதைந்துவிட்டது. மழைக்காலத்தில் தோட்டாவின் நகர்வு மார்ஷாவை வேதனைப்படுத்தியது. எனவே, உறுதியான தரைப்பரப்பில் படுத்து தூங்குவதை பழக்கமாக்கிக்கொண்டார்.

2012ஆம் ஆண்டு நியூயார்க் சபை உறுப்பினர் தாமஸ் டுவான் விடுத்த கோரிக்கை பெயரில் மார்ஷா கொலை வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பேட் இட் நோ மைண்ட், தி டெத் அண்ட் லைஃப் ஆப் மார்ஷா பி ஜான்சன் என்ற ஆவணப்படங்கள் அவரைப்பற்றி உலகிற்கு கூறி வருகின்றன. எப்படி இறந்தார் என்பது இன்னும் தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது.

ரிச்சர்ட் ஜெரோம்

பீப்புள் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்