குரோம்புக்கால் எந்த பயனும் இல்லை - காலாவதி தேதியால் குப்பைக்குச் செல்லும் கணினி

 




குரோம்புக்


இ குப்பையாகும் குரோம் புக்

அமெரிக்க பள்ளிகளில் குறைந்த விலை காரணமாக வாங்கப்பட்ட குரோம்புக், தற்போது இ குப்பையாக மாறத் தொடங்கிவிட்டன. இதற்கு காரணம், கூகுளின் காலாவதி அறிவிப்புதான். குரோம் புக் மடிக்கணினி வன்பொருட்கள் நன்றாக இயங்கி வந்தாலும் கூட அதற்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொண்டால் அதை மாணவர்கள் பயன்படுத்த முடியாது. குறைந்த விலை, எளிதாக பயன்படுத்துவது காரணமாகவே  பள்ளிகள் கூகுளின் குரோம் புக் கணினியை வாங்கின. நடப்பு ஆண்டில் பதிமூன்று மாடல்கள், அடுத்த ஆண்டு 51 மாடல்களுக்கான  காலாவதி தேதியை கூகுள் அறிவித்துவிட்டது.

அமெரிக்க அரசு, கூகுள் குரோம் புக் மடிக்கணியை வாங்குவதற்கு மட்டும் 1.8 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. ஆனால், இக்கணினிகளுக்கான பயன்பாடு குறைந்த கால வரம்பே கொண்டிருந்தால், செலவழித்த பணத்திற்கான மதிப்பே இருக்காது. இதற்கு எதிர்மறையாக விண்டோஸ், மேக் ஆகிய நிறுவனங்களின் ஆதரவு நிறுத்தப்பட்டாலும் அதை ஒருவர் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம். உடனே தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டியதில்லை. ஆனால் குரோம்புக்கில் இந்த வசதி இல்லை.

 பெருந்தொற்று காலத்தில் குரோம் புக் மாணவர்களுக்காக வாங்கப்பட்டது. பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தே பாடம் கற்பதற்கான ஏற்பாடு இப்படி நடைமுறையானது. இதன் வழியாக குரோம் விற்பனை அதிகரித்தது. வர்ஜீனியாவில் உள்ள அரசுப்பள்ளி டெல் குரோம்புக்கை 2018/19 காலகட்டத்தில் வாங்கியது என்றால், நான்கே ஆண்டுகளில் கணினி காலாவதி ஆகிவிட்டது என்று கூறினால் அதன் பயன்பாடு, அதற்கு செலவிட்ட தொகை என்னவாகும்?

குரோம் புக் தனது காலாவதி தேதியை அறிவித்துவிட்டால், அதிலுள்ள வேறு மென்பொருட்களையும் பயன்படுத்த முடியாது. இதை விற்கும் நிறுவனங்கள் கணினி எப்போது காலாவதி ஆகும் என்பதை சொல்வதில்லை. இதனால், வாங்கிய சில ஆண்டுகளிலேயே கணினியை பயன்படுத்த முடியாமல் போவது சகஜம். இதை கூகுளின் வலைத்தளத்தில் சென்று சோதித்துவிட்டுத்தான் ஒருவர் வாங்கவேண்டும். இல்லாதபோது அவருக்கு பணம்தான் சேதாரம்.

குரோம் புக் விலை குறைவு. காரணம், அதில் உலோகம் குறைவு. அனைத்துமே பிளாஸ்டிக்தான். கீழே விழுந்தால், அதை எடுக்க வேண்டியதில்லை. அப்படியே அள்ளிக் கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் கொட்டிவிடவேண்டியதுதான். வேறுவழியில்லை. மேலும், அதில் எந்த மென்பொருட்களும் இருக்காது. அதை பள்ளிகள்தான் தனியாக காசுக்கு வாங்கி இன்ஸ்டால் செய்யவேண்டும். குரோம்புக்கிற்கான உரிமத்தொகையை 2021ஆம் ஆண்டு 38 டாலர்களாக கூகுள் உயர்த்தியுள்ளது. குரோம்புக்கை பெரும்பாலும் எழுபது சதவீதத்திற்கும் மேலாக கல்வி நிறுவனங்களே வாங்குகின்றன. காரணம். அதை பயன்படுத்துவது எளிது என்பதற்காகவே.

குரோம்புக்கிற்கு மேக் கணினி போல விற்க முடியாது.  இரண்டாவது முறையாக விற்கும்போது, விற்பனை விலை கிடைப்பது இல்லை.  இ குப்பை தொட்டியில்தான் போட வேண்டும். பழைய கணினிகளை குரோம்புக்காக மாற்றிக்கொள்ளும் வசதியை கூகுள் வழங்குகிறது. கூகுள் குரோம் ஃபிளெக்ஸ் எனும் ஓஎஸ்ஸை, இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஐடியா நன்றாக இருந்தாலும் இதை அதிகம் யாரும் பயன்படுத்துவது இல்லை.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல்

நிக்கோல் குயென்


கருத்துகள்