செயற்கை நுண்ணறிவு மூலம் பணம் சம்பாதிக்கும் ஏழை மக்கள்! - கார்யா ஆப்பின் வறுமை ஒழிப்பு செயல்பாடு

 






கார்யா ஆப் பயன்பாட்டாளர்கள், கர்நாடகா



செயற்கை நுண்ணறிவு மூலம் வேலையிழப்பு பற்றிய பதற்றம் தரும் செய்திகளை தினந்தோறும் கேட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தின் சிலுகாவடி, ஆலஹல்லி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நிரந்தரமான வேலை என்று கூறமுடியாது. ஆனால், அங்குள்ள விவசாய நிலத்தில் செய்யும் கூலி வேலைக்கான ஊதியத்தை விட அதிகம்.

இதற்கு கார்யா  என்ற லாபநோக்கமற்ற அமைப்பின் அப்ளிகேஷனே காரணம். இந்த அமைப்பை டெல்லியை பூர்விகமாக கொண்ட மனு சோப்ரா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் என்ற நிறுவனத்தில்  வேலை செய்த மனு, தனது வேலையை கைவிட்டு கார்யா என்ற ஆப்பை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆப் மூலம், தாய்மொழியில் அதாவது கன்னடத்தில் குறிப்பிட்ட செய்தி பற்றிய டேட்டா மாடல்களை உருவாக்குகிறார்கள். குறிப்பிட்ட செய்தியை ஒருவர் துல்லியமான வட்டார வழக்கில் பேச வேண்டும். அவர் பேச்சின் துல்லியத்தைப் பொறுத்து அவருக்கு வருமானம் கிடைக்கும். ஒரு மணிநேர உழைப்பிற்கு 415.50 ரூபாய் (18/9/23படி) கிடைக்கிறது.  தகவல் துல்லியம் கூடினால் ஒருவர் 1250 டாலர்களைக் கூடசம்பாதிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது எளிதான காரியமல்ல.

கார்யா ஆப்பில், தற்போது காசநோய் தொடர்பான டேட்டா மாடலுக்கு கன்னட மொழியில் தகவல்களை பேசி பதிவு செய்து வருகிறார்கள். இந்த தகவல்களை தேடுபவர்களுக்கு கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு, கற்றவர்களுக்கு தாய்மொழியில் தகவல்களை அளிப்பதே திட்டம். மராத்தி, இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம் ஆகிய மொழிகளில் தகவல்களை தயாரித்து வருகிறார்கள். கார்யா அமைப்பு, லாபநோக்கமற்றது என்பதால் சந்தையில் எப்படியோ சமாளிக்கிறது. கிடைக்கும் வருமானத்தை தன்னிடம் பணியாற்றும் 30 ஆயிரம் பேர்களுக்கு அப்படியே பகிர்ந்து கொடுத்துவிடுகிறது. இதில் முக்கியமான அம்சம். ராயல்டி. தமிழில் ஆதாய உரிமைப்பணம் என்று கூறலாமா?

ஒருமுறை ஒரு தகவலை ஒருவர் பேசினால் போதுமானது. அதை செயற்கை நுண்ணறிவு நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. அதற்கான தொகையை கார்யா வழங்குகிறது. கன்னடமொழியில் பேசிய பேச்சு பல்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்படும்போது, அதை பேசிய கார்யா பணியாளருக்கு ஆதாய உரிமைப்பணம் கிடைக்கிறது. இதுதான் கார்யாவின் சிறப்பு அம்சம்.

ஏழைகள், மாணவர்கள், ஊனமுற்றோர் கூட கார்யா ஆப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளனர். மனு சோப்ரா, முதலில் ஆப்பை அனைவருக்குமானதாக மாற்றிதான் தொடங்கினார். ஆனால், அப்போது இதில் பங்கேற்றவர்கள் அனைவருமே மேல்சாதியைச் சேர்ந்தவர்கள். கல்வி கற்றவர்கள். இதனால் தான் செய்யும் முயற்சியால் கிடைக்கும் பயன், ஏழை மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் போய் சேரவேண்டுமென சோப்ரா நினைத்தார். எனவே, அவர்களை தவிர்த்துவிட்டு பல்வேறு உள்ளூர் தன்னார்வ நிறுவனங்களை இணைத்துக்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களை தேடத் தொடங்கினார். இன்று கார்யாவில் இணைந்துள்ள பலருமே இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்டவர்கள்தான். உயர்வர்க்கம், பெரும்பான்மையினர் என்றால் அவர்களின் தகவல்கள் பாகுபாடு கொண்டவையாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.

அமெரிக்காவில் லாபநோக்கற்ற நிறுவனமான பதிவு செய்யப்பட்டுள்ள கார்யா அமைப்பை எம்ஐடி, மைக்ரோசாஃப்ட், ஸ்டான்ஃபோர்ட்  ஆகிய நிறுவனங்கள் ஆதரித்து வருகின்றன. சந்தையில் நன்கொடை என்பதை இருபது சதவீதத்திற்குள்ளாகவே கார்யா போன்ற லாபநோக்கற்ற நிறுவனங்கள் பெற முடியும். இந்த இந்தியச்சட்டம் கார்யாவை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. கார்யா தனது செலவுகளை லாபநோக்கு, லாபநோக்கற்ற என இரண்டு வகையாக பிரித்து வைத்து இயங்குகிறது. கார்யாவின் அடிப்படை நோக்கம் செயற்கை நுண்ணறிவு மூலம் வறுமை ஒழிப்பதுதான்.

மனு சோப்ராவின் பெற்றோர் மேல்சாதியைச் சேர்ந்தவர்கள். படித்தவர்கள். ஆனாலும் டெல்லியில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டில் வாழ முடியாமல் உணவுக்கும் கஷ்டப்பட்டனர். தன்னார்வ அமைப்பு நடத்திய பள்ளியில் படித்த சோப்ரா, கல்வி உதவித்தொகை பெற்று அமெரிக்காவிற்கு சென்று ஸ்டான்ஃபோர்டில் பட்டப்படிப்பு படித்தார். ஏழை மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டியே யோசித்தார், எனவே, இந்தியா திரும்பி, சமூக செயல்பாடுகளை செய்து வந்த மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் அமைப்பில் இணைந்து  செயல்படத்தொடங்கினார். பிறகு சில ஆண்டுகள் கழித்து அங்குள்ள நண்பர்களோடு இணைந்து கார்யாவை தொடங்கினார்.

கென்யா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் செயற்கை நுண்ணறிவுக்காக டேட்டா மாடல்களை வேகமாக உருவாக்கி வருகின்றனர். இங்கும் கார்யாவைப் போன்றே தொடக்கத்தில் லாபநோக்கற்று தொடங்கிய நிறுவனங்கள் சந்தை சவால்களை எதிர்கொள்ள முடியாமல் லாப நிறுவனங்களாக மாறிவிட்டன. கார்யாவிற்கும் இதேபோன்ற சவால்கள் உள்ளன. கார்யா இதுவரை 30 ஆயிரம் பேர்களுக்கு 65 மில்லியன் டாலர்களை வருமானமாக வழங்கியுள்ளது. ஆனால் மனு சோப்ரா சவால்களை சந்தித்தாலும் கூட 2030ஆம்ஆண்டு நூறு மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைய நினைத்து உழைத்து வருகிறார்.

நிரந்தரமான வேலைவாய்ப்பு இல்லை என்றாலும் மக்கள் சோறு தின்று பிழைத்திருந்தால், நம்பிக்கையோடு இருந்தால்தானே அடுத்த வேலைவாய்ப்பிற்கு தங்களை தயார் செய்து நகர முடியும். அதைத்தான் கார்யா செய்துவருகிறது.

 

 டைம் வார இதழில் பில்லி பெர்ரிகோ எழுதிய கட்டுரையை மூலமாக கொண்டது.

 

 


கருத்துகள்