மாஃபியா உதவியுடன் குற்றவழக்குகளை ஆராயும் கேம்பிரிட்ஜ் பட்டதாரி!

 









மை ரூம்மேட் இஸ் டிடெக்டிவ்

சி டிராமா

ராக்குட்டன் விக்கி


36 எபிசோடுகள் பார்க்க நன்றாகவே இருக்கின்றன. தலைப்பு சற்று பொருந்தி வரவில்லை. கொரிய டிராமாக்களைப் பார்த்து இப்படி தலைப்பு வைப்பார்கள் போல.

லூ யாவோ என்பவரைத் தேடி காவல்துறை நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். தூங்கி எழுந்தவர், ஐயையோ என தப்பி ஓடுகிறார். ஆனால் எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சியோவோ, லூவின் மூக்கில் குத்தி அவரை லாக்கப்ப்பிற்கு அழைத்து செல்கிறார். வழக்கு இதுதான். அவர் தொழிலதிபர் ஒருவரை கொன்றிருக்கிறார் என காவல்துறை சந்தேகப்படுகிறது. முன்தினம் நடந்த விருந்தில், லூ கடன் கொடுத்த தொழிலதிபரை திட்டியது  அனைவருக்கும் தெரிந்த செய்தியாகிவிடுகிறது. எனவே, காவல்துறை லூவை முக்கிய குற்றவாளியாக கருதுகிறது.

லூ, சாசோன் என்ற வெளிநாட்டு வங்கியில் பணியாற்றுகிறார். தனது மீதுள்ள குற்றத்தை அவரே துடைப்பதோடு குற்றவாளியையும் கண்டுபிடித்து கொடுக்கிறார். அதிலிருந்து இன்ஸ்பெக்ட்ர் சியோவோ, ஆலோசகர் லூ யாவோ, பத்திரிகையாளர் பாய் யூனிங் ஆகிய மூவரும் கூட்டணி போட்டு குற்றங்களை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள்.

கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற லூ, வாடகை கொடுக்க கூட தடுமாறுகிற அறிவுஜீவி. குடும்பத்தை விட்டு ஷாங்காயில் வந்து வேலை செய்து வருகிறார். அவரை போலீஸ் லாக்கப்பிற்கு கூட்டிச் சென்ற செய்தி நாளிதழில் வெளியாவதால், வங்கி வேலை பறிபோகிறது. அவரது வீட்டிற்கு பத்திரிகையாளர் பாய் யூனிங் வருகிறார். இந்த பெண் ஷாங்காயில் புகழ்பெற்ற க்ரீன் டிராகன் என்ற மாஃபியா தலைவரின் பெண். ஆணவமும், கோபமும், பிடிவாதமும் கொண்ட பெண்ணுக்கும், லூவுக்கு தொடக்கம் முதலே முட்டிக்கொள்கிறது. லூவுக்கு வேலை பறிபோக காரணமாக இருந்த செய்தியை எழுதியது இவர்தான்.

இன்ஸ்பெக்டர் சியாவோவை அந்தப் பதவிக்கு கொண்டுவருவதே மாஃபியா தலைவர் பாய்தான். அவரது ஆணைப்படிதான் சியாவோ வேலை செய்கிறார். அவருக்கு லூவின் டிடெக்டிவ் திறமை மீது மெல்ல நம்பிக்கை வருகிறது. ஒரு வழக்கிற்கு இத்தனை வெள்ளி நாணயம் என கூலி பேசி வேலை செய்து நண்பர்களாகிறார்கள். சியாவோ, முரடன் என்றால் லூ நிதானமான ஆள். இருவரும் சேர்ந்து நிறைய வழக்குகளை துப்பு துலக்குகிறார்கள். உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள். இவர்களின் செயல் மூலம் சீனர்கள் புகழ் ஆங்கிலேயர் உலகில் பரவுகிறது. இதை தடுக்க வெளிநாட்டு தொழிலதிபர்கள் கூட்டமைப்பின் தலைவர் நார்மன் நினைக்கிறார்.

லூ, சியாவோ வென்றுகொண்டே செல்லும்போது மாஃபியா தலைவர் பாயின் செல்வாக்கு அரசியலில் கூடி வருகிறது. தனது மகள் யாரோ பெயர் தெரியாத ஒருவனுடன் தங்கி இருப்பதைக்கண்டுபிடித்து கோபம் கொண்டாலும் மெல்ல அவன் பின்னணி தெரிந்து கோபம் தணிகிறது. கூடவே, வழக்குகளை துப்பறியும் லூவை மெல்ல பயன்படுத்தி அரசியல் வட்டாரத்தில் ஜெயிக்க நினைக்கிறார். எனவே, வருங்கால மருமகனை, மகளை பாதுகாக்க ஆட்களை நியமிக்கிறார். எப்போதும் போல மாஃபியா வேலைகளை செய்கிறார்.

தொடரின் சிறப்பே, இது பிரிட்டிஷார் சீனாவை கையகப்படுத்திய காலத்தில் நடப்பதுதான். ஷாங்காயில் ஆங்கிலேயர்களும், சமூகத்தில் வசதிவாய்ந்த சீனர்களும் ஒன்றாக சேர்ந்து வணிகம் செய்து வருகிறார்கள். வெளிநாட்டினருக்கு சீனர்கள் வணிகம், அரசியல் என எதிலும் வளர்ந்து வருவது பிடிப்பதில்லை. நாட்டை அடிமை நிலையில் வைத்திருக்க ஓபியத்தை பயிரிட்டு அதை தயாரித்து வெவ்வேறு வடிவங்களில் விற்க முயல்கிறார்கள். மாஃபியா தலைவர் பாய், கெட்டவர்தான். ஆனால் தன் நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து அதில் சம்பாதிப்பதை விரும்புவதில்லை. வெளிநாட்டினருக்கு முட்டுக்கட்டைகளை போடுகிறார். எனவே, அவரை அழிக்க வெளிநாட்டினர் பல்வேறு திட்டங்களை போடுகிறார்கள். அத்தனையையும் லூ தன்போக்கில் விசாரணை செய்யும் வழக்குகளால் ஊதித்தள்ளுகிறார். அந்த வழக்குகளால் பிரிட்டிஷாரில் மோசமான தொழிலகள் வெட்ட வெளிச்சமாகின்றன. நிறைய தொழில்கள் முடங்குகின்றன. இதனால் அவர்கள் லூ பயாவோ கொல்ல முயல்கிறார்கள்.

ஆனால் அவரது குடும்ப பின்னணி பெரியது என்பதால் அவரை முடக்கும், ஷாங்காயிலிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். அதை அறிந்த பாய், தனது மகள், மருமகனை தனது கூட்டத்தைச் சேர்ந்த சியாவோவை வைத்து தடுக்கிறார்.

லூ எப்படி வழக்குகளை துல்லியமாக கண்டுபிடித்து தீர்க்கிறார் என்பதில் நாம் கவனம் செலுத்தினாலே போதுமானது. அதுவே சுவாரசியமாக உள்ளது. விதவிதமான நுணுக்கமான புரிந்துகொள்ளவே தடுமாறும் வகையிலான வழக்குகள் உள்ளன. லூ பாத்திரத்தில் நடித்த நடிகர் உடல்மொழி நன்றாக இருக்கிறது. பார்க்க கோழை போல முட்டாள் போல நடந்துகொண்டு அனைத்து வழக்குகளையும் வேடிக்கையாக தீர்க்கிறார். ஜிம்கேரி, ராபின் வில்லியம்ஸ், ஜானி டெப் போன்ற உடல்மொழி கொண்ட டிடெக்டிவ் இவர்.

நாட்டை  அடிமையாக்கும் பிரிட்டிஷ், ஆஸ்திரேலியர்கள், ஜெர்மானியர்களை உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் ஆட்களாக தீய சக்தியாக காட்டுகிறார்கள். இவர்களை விட மாஃபியா தலைவர்களில் ஒருவரான பாய், சற்று தீமை குறைந்தவர். போதைப்பொருட்களை மட்டும் விற்க மறுக்கிறார். அது அவருடைய கொள்கை. ஷாங்காயில் அரசு என்பதை விட மாஃபியா கும்பல்களே ஆளுகின்றன என்று கூறலாம்.

குறிப்பிட்ட பீரியட் டிராமா என்பதே இந்த தொடரை தனித்துவமாக்குகிறது. அனைத்தும் செட்தான். உடை, வீடுகள் என அனைத்துக்கும் மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

நாயகனே வெளிநாட்டு தயாரிப்புகளை அதிகம் விரும்புபவர். அதை நேசிப்பவர். உள்நாட்டு அரசியல் விஷயங்களை லூ பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதையெல்லாம் அவரது தோழர் சியாவோ பார்த்துக்கொள்கிறார்.  பொம்மலாட்டக் கலைஞர் கொலை, சாசூன் என்ற வங்கிக் கொள்ளை என இரண்டையும் கண்டுபிடிப்பது சுவாரசியமாக உள்ளது. இதற்கடுத்து தங்கை அக்காவை குண்டுவைத்துக் கொல்லும் வழக்கும் யோசித்தாலே தலை சுற்றுவது…

இந்த வழக்குகளில் குற்றவாளிகள் எப்படி அதை செய்தார்கள் என லூ விளக்கி கூறியதும் பெரிதாக முரண்படுவதில்லை. ஆம் அப்படித்தான் என குற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் வரும் நாயகி பாய் யூனிங் பாத்திர நடிகைக்கு கண்களே சிரிக்கும்படியான முகத்தோற்றம். அவளது ஆர்வம், மகிழ்ச்சி அனைத்துமே அப்படியே வெளித்தெரிகிறது. இதில் மறைக்க ஏதுமில்லை. இந்திய நடிகர் தேவ் ரத்தூரி என்பவர் நடித்திருக்கிறார். அவரை சலீம் என்ற பாத்திரத்தில் பார்க்க நன்றாக இருக்கிறது. 

கோமாளிமேடை டீம்

Number of episodes: 36
First episode date: 24 March 2020 (China)
Directed by: Zhang Wei Ke
Original language: Chinese
Original network: iQiyi
Original release: March 24, 2020

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்