சட்டவிரோத சூதாட்ட வலைதளத்தை தடுக்க முயலும் ஹேக்கரும், சீனியர் இன்ஸ்பெக்டரும்!

 
போலீஸ் யுனிவர்சிட்டி - கே டிராமா

போலீஸ் யுனிவர்சிட்டி

கே டிராமா

ராக்குட்டன் விக்கி

ஹேக்கராக இருந்து சூதாட்ட வலைத்தளத்தில் பணத்தை திருடியவர், கொரிய காவல்துறை பல்கலைக்கழகத்தில் மாணவராகிறார். அவர் ஹேக்கர் என்று அங்கு பாடம் நடத்தும் முன்னாள் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவருக்குத் தெரியும். அந்த மாணவரை தனது சூதாட்ட வலைத்தள விசாரணைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். அவரைத் தடுக்க ஏராளமான முயற்சிகள் நடைபெறுகின்றன. மாணவரை குற்றவாளியாக்கவும் முயல்கிறார்கள். தடைகளை தகர்த்து ஹேக்கர் மாணவர் காவல்துறை அதிகாரி ஆனாரா என்பதே கதை.

தொடரின் நாயகன் யூ டாங்க் மன் என்ற சீனியர் இன்ஸ்பெக்டர்தான். இவர், சூதாட்ட வலைத்தளத்தை பிடிக்க பிளாக்நெட்டில் ஹேக்கர் ஒருவருடன் நட்பு வளர்க்கிறார். பேர்ட் என்ற பெயரில் பள்ளி மாணவராக உரையாடுகிறார். எதிர்முனையில் உள்ளவர் ஹேக்கர் யூன் என்ற கங்க் சியோன் ஹோ பள்ளி மாணவர்.

இவர் ஆதரவில்லாதவர். பெற்றோர் விபத்தில் இறந்துவிட, அவர்களின் நண்பர் எடுத்து வளர்க்கிறார். இவரது அண்ணன், இவரை தம்பியாக நினைப்பதில்லை. இதனால் கணினியே கதி என கிடந்து அதில் நிபுணத்துவம் பெறுகிறார். ஒருமுறை அப்பாவிற்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்வதற்காக  ஏழாயிரம் டாலர்களை சூதாட்ட வலைத்தளத்தில் இருந்து திருடுகிறார். பிறகு, அண்ணனின் செலவுக்கு 5 லட்சம் டாலர்களை கொள்ளையடித்து கொடுக்கிறார். இதைப்பற்றி யாருக்கும் சொல்லாமல் காவல்துறை பல்கலைக்கழகத்திற்கு சென்று சேருகிறார். இப்படி சேர்வதற்கு ஜூடோ போட்டியில் சந்தித்த கங்க் ஹூயி என்ற மாணவியே காரணம். அவள் அங்கு சென்று சேருகிறாள் என கங்க் சியோன் ஹோவும் காவல்துறை பல்கலைக்கலைக்கு விண்ணப்பித்து வெற்றி பெறுகிறான்.

வளர்ப்பு பையன் என்பதால், ரத்த உறவு இல்லாத ஒருவரை கல்வி கட்டணத்திற்காக கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைக்கிறான் கங்க் சியோன் ஹோ. காவல்துறை பல்கலைக்கழகத்தில் தேர்வெழுதி வென்றால் கல்விக்கட்டணம், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம். இதையும் அவனது பள்ளி ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார்.

பல்கலையில் சேரும் நேரத்தில் சூதாட்ட வலைத்தளத்தில் அவன் பணம் திருடியது காவல்துறை அதிகாரி யூ யங் மன்னுக்கு தெரிய வருகிறது. கங்க் சியோன் ஹோவை இழுத்து வந்து வழக்கு பதிகிறார். அவனுக்காக அவனது அப்பா, தரையில் மண்டியிட்டு கீழே அமர்ந்து தலை குனிந்து  மன்னிப்பு கேட்க  யூ யங் மன் அவரது இரு மகன்களையும் விட்டுவிடுகிறார். பிறகு, யூ யங் மன்னின் விசாரணையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாத காரணத்தால், அவரை அதிகார வட்டம் காவல்துறை பல்கலைக்கழகத்திற்கு பாடம் நடத்த அனுப்புகிறது. அங்கு பார்த்தால் அவர் பார்க்கவே கூடாது என நினைத்த காங்க் சியோன் ஹோ மாணவனாக வருகிறான். அவனை நேர்காணலில் வெளியேற்ற நினைத்தாலும், மற்ற மூவரும் அவனை உள்ளே அனுமதித்து விடுகிறார்கள்.

 இருவருக்கும் முட்டல், மோதல் என காட்சிகள் நகர்கின்றன. சூதாட்ட வலைத்தள வழக்கில் சியோன் ஜின் என்ற யூ யங் மன்னின் பார்ட்னர். தலையில் அடிபடுகிறார். இந்த சூழலில் அவர் காங்க் சியோன் ஹோ தான் ஹேக்கர் யூன் என அறிகிறார். .காவல்துறை இயக்குநரே, யூ மங்கை விசாரணை செய்ய விடாமல் தடுக்கிறார். எனவே, யூ யங், காங்க்கிடம் சைபர் உதவி கேட்கிறார். இருவரும் சேர்ந்து  குற்றவாளிகளை பிடித்தார்களா இல்லையா என்பதே தொடரின் இறுதிப்பகுதி.

காங்க் சியோன் ஹோ இவர்தான் நாயகப் பாத்திரம் வகிக்கிறார். .ஜூடோ போட்டியில் அண்ணனின் காதலுக்கு உதவ வந்து தன்னுடைய காதலை கண்டுபிடித்து அதை அங்கேயே ஊருக்கே கூறுவது தொடங்கி, நெகிழ்ச்சியான காட்சிகள் வரை நன்றாக நடித்திருக்கிறார். இவரது பாத்திரமும் நாயகி காங் ஹூயி பாத்திரமும் இளமையில் நிறைய அவமானங்களை எதிர்கொண்டு கடந்து வந்ததாக உள்ளது. இருவரிடமும் பணம் பெரிதாக இருக்காது. ஆனால்,

பிறரின் கஷ்டத்திற்காக தங்களையே பணயம் வைப்பவர்களாக இருப்பார்கள். காங் ஹூயி, கையில் அடிபட்டு போட்டியில் கலந்துகொண்டு  தோற்றுப்போவாள். அந்த சமயத்தில்தான் அவளை காதலிப்பதாக டிவி திரையில் காங்க் சியோன் ஹோ கூறுவான். முதல் காட்சியிலேயே அவனை ஜூடோ யுக்தியில் வீழ்த்துவாள். தொடர் நெடுக, காதல் வந்தபிறகு, அதில் ஊடல் வந்த பிறகு என காங்க் ஹூயிடம் காங்க் சியோன் ஹோ வாங்கும் அடி உதைக்கு அளவே கிடையாது.

காங்க் ஹூயி தைரியமாக பேசுபவள், எதிர்த்து நிற்பவள் என்றால் காங்க் சியோன் ஹோ மென்மையானவன். யாரைமும் பெரிதாக எதிர்த்து சண்டை போடுபவன் அல்ல. பிறரை வழிநடத்தும் அளவுக்கு திறமைசாலி. காங்க் சியோன் ஹோவுக்கு இரு நண்பர்கள் நேர்காணல் நடக்கும் நாளில் பழக்கமாகி அப்படியே அவன் வாழ்நாள் முழுக்க தொடர்கிறார்கள். இருவருமே வசதியான நண்பர்கள். காங்க் சியோன் ஹோவுக்கு எதிரியாக வருபவன் மிங்க் யூ. இவன், வசதியானவன். காவல்துறை வேலையை லட்சியமாக நினைத்து தயாராகி பல்கலைக்கு வந்தவன். இவனுக்கு காங் ஹூயி மீது ஒரு கண். அதாவது, காதல். இந்த காதல் போட்டியை சந்தித்து காங்க் சியோன் ஹோ குற்றவாளிகளை எப்படி வேட்டையாடிகிறான் என்பதே முக்கியானபகுதி.

 

யூ யங் மன் பாத்திரம்தான் தொடரை உயிர்ப்போடு வைத்திருககிறது. தகவல், ஆதாரங்கள் தனது மாணவனை, பார்ட்னரை அடையாளம் காட்ட அவனை கைது செய்ய முடியாமல் தவிப்பது, குற்றவாளி என பார்ட்னரே ஒப்புக்கொண்ட பிறகு கண்ணீர் விட்டு அழுவது, வதந்தி செய்தி எழுதும் செய்தியாளரை உண்மையான செய்தி எழுத கூறி,அதற்கான துப்புகளை கொடுப்பது, காங்க் சியோன் ஹோவை மெல்ல நல் வழியில் இழுத்து வழக்கு விசாரணையில் பார்ட்னராக சேர்த்து வேலைக்கு பழக்குவது, தனது கூடவே வேலை செய்யும் பேராசிரியர்களில் குற்றவாளிகளை தேடுவது என நன்றாக நடித்திருக்கிறார். நகைச்சுவை, சண்டை, கோபம், காதல், விரக்தி என அத்தனை உணர்வுகளையும் வெளிக்காட்டுகிற அற்புதமான நடிப்பு. 

இந்த தொடரை இவருக்காகவே பார்க்கலாம்.

ஒரே வழக்கு என்பதால் நிறைய இடங்களில் நட்பு, காதலை வைத்து பஞ்சர் ஒட்டுகிறார்கள். அது பொருந்தவில்லை. நாயகியை அழகாக காட்ட இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அவரை விட அவருக்கு தோழியாக வருபவர்கள் அழகாக இருக்கிறார்கள். மிடுக்காக இருக்கிறார்கள். சப்வே காசு கொடுக்கிறார்கள் சரி. அதற்காக அந்த உணவுகளை இளம் காவல்துறையினர் சாப்பிடுவது போல காட்டுவது தவறான முன்னுதாரணம். அது குப்பை உணவு. இயக்குநரே கவனியுங்க.

இன்னும் நிறைய குற்றங்களை கதையில் வைத்து, காதலை சற்று பின்னுக்கு தள்ளியிருந்தாலும் ஒன்றும் மோசமில்லை. சட்டப்படி தண்டனை என்பதை யூ மங் மன் விளக்குவது, அதை காங்க் சியோன் ஹோ ஏற்று பள்ளியை விட்டு விலகுவது ஆகியவற்றை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.

கோமாளிமேடை டீம்

First episode date: 9 August 2021 (South Korea)
Final episode date: 5 October 2021
Hangul: 경찰수업
Original language: Korean
Original network: KBS2
Original release: August 9 –; October 5, 2021

கருத்துகள்