தாய்நாடு திரும்பி அதனோடு பொருந்திக்கொள்ள முடியாமல் தவிப்பவர்களின் வாழ்க்கை!
மாயமீட்சி
மிலன் குந்தேரா
காலச்சுவடு
செக் நாட்டை
விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பிழைத்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பி அங்கு வாழமுடியாமல்
சூழலுக்கு பொருந்தமுடியாமல் தவிக்கிறார்கள். இதுபற்றிய அனுபவங்களை விவரிக்கிறது மாய
மீட்சி நாவல்.
இரினா, செக்
நாட்டைச் சேர்ந்தவள். அவளுக்கு மார்ட்டின் என்பவருடன் அம்மா ஏற்பாட்டின்படி திருமணமாகிறது.
திருமணமோ, மணமகனோ இரினாவின் தேர்வல்ல. முழுக்க அம்மாவின் தேர்வு. பிறகு உள்நாட்டில்
பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு வருகிறது. இதனால் இரினாவின் கணவர் மீது ரகசிய போலீசார் விசாரணை
நடத்துகிறார்கள். அங்கு நிலைமை ஒன்றுதான். ஒன்று, பொதுவுடமை கட்சியில் உறுப்பினராக
சொத்துகளை அரசின் வசம் ஒப்படைத்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வது. அல்லது கட்சியை
எதிர்த்து பேசி அரசை விமர்சித்து சிறைப்படுவது. மார்ட்டின் மூன்றாவதாக நாட்டை விட்டு வெளியேற முயல்கிறார். அவருடன் இரினாவும் செல்கிறாள். பிரான்சில் சென்று வாழும்போது, இரினா அந்த நாட்டு
வாழ்க்கைக்கு பழகுகிறாள். பிரெஞ்சு சரளமாக பேச பயில்கிறாள். ஆங்கிலம் அவளுக்கு கடினமாகவே
இருக்கிறது.
இதற்கிடையில்
அவளது கணவன் மார்ட்டின் இறந்துவிட, தனியாகவே தனது குழந்தைகளை வளர்க்கத் தொடங்குகிறாள்.
அப்போது கஸ்தாவ் என்பவர் மீது ஆர்வம் பிறக்கிறது. இருவரும் பழகிப் பார்த்து திருமணம்
செய்துகொள்கிறார்கள்.
இரினாவின்
அம்மா, சொந்தங்கள், உறவுகள் செக் நாட்டில்தான் வாழ்கிறார்கள். அவளுக்கு தனியாகவே பிரான்சில்
வாழ்வது பிடித்திருக்கிறதுதான். ஆனால் கஸ்தாவுக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை பிடித்திருக்கிறது.
அதாவது அவன் இரினாவின் அம்மா, அவர்களது உறவினர்களுடன் வாழ விரும்புகிறான். எனவே, தனது
அலுவலக கிளை செக் நாட்டில் தொடங்கியவுடனே அங்கு தனது மனைவியுடன் செல்கிறான். அது இரினாவுக்கு
பிடித்தமானதாக இல்லை. ஏனெனில் அவள் தாய்நாட்டை
விட்டு வெளியேறி வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது.
மீண்டும்
அங்கு சென்று வாழ்க்கையை எப்படி தொடங்குவது என தெரியவில்லை. இருந்தாலும் அவளது தோழி
சில்வி கூறியதன் பேரில் தன்னை சமாதானம் செய்துகொண்டு அங்கு செல்கிறாள். இங்கு ஒடிஸி
புராணத்தை எடுத்துக்காட்டாக எழுத்தாளர் அடையாளம் காட்டுகிறார். அதில் வரும் நாயகன் இருபது ஆண்டுகள் போர் காரணமாகவே
தனது நாட்டுக்கு வராமல் இருப்பான். இந்த சூழலில் அவன் தன்னை எப்படி பொருத்திக்கொள்கிறான்
என்பதை கூறுகிறார். இதுபற்றி யோசேப், இரினா பேசிக்கொள்ளும் உரையாடல் பகுதி சிறப்பாக
உள்ளது. புராணக்கதையை, அதில் வரும் பெனலோப்பின் மனைவியை பகடி செய்யும் பகுதி இது.
தாய்நாடு,
சுதந்திரம், புணர்ச்சி, சமூக அங்கீகாரம் என பல விஷயங்களை படம் பேசுகிறது. இதில் நிறையப்பேருக்கு
கருத்து வேறுபாடுகள் எழலாம். நூலை இலங்கை தமிழில் மொழிபெயர்த்து எழுதியிருக்கின்றனர்.
இதனால் தொடக்கப்பக்கங்களில் நூலைப் படிக்க சற்று தடுமாற்றமாக இருக்கலாம். ஆனால், நூலின்
தன்மை புரிந்தபிறகு சூழல் சற்று இளக்கமாக மாறி கதையில் பயணிக்கத் தொடங்கிவிடலாம். பிரச்னையாக
இருக்காது.
நாவலில் வரும்
பாத்திரங்களை தனியாக பிரித்தே தனி நூல்களை எழுதலாம். அந்தளவுக்கு அழுத்தமான பாத்திரங்களாக
மைலதா, இரினாவின் அம்மா, யோசேப், அவரின் அரசியல் நண்பர் ஆகிய பாத்திரங்கள் உள்ளன. யோசேப்
கால்நடை மருத்துவர் படிப்பை படித்துவிட்டு
டென்மார்க்கில் வேலை செய்பவன். அவன் அங்கேயே ஒரு பெண்ணை மணக்கிறான். வாழக்கை நன்றாக
போகிறது. ஆனால், அவன் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறாள். அந்த நேரத்தில் அவனை,
தாய்நாட்டிற்கு சென்று வருமாறு கோருகிறாள். அவனுக்கு அதில் பெரிய ஆர்வம் இல்லை.
ஏனெனில் தாய்நாட்டில்
அவன் கற்ற செக் மொழி தவிர வேறு அடையாளங்கள் ஏதும் இல்லை. அவன் தனது இறந்துபோன மனைவியை
மட்டும நினைத்துக்கொண்டிருக்கிறான். மற்றபடி அவனது காதலிகளை, ஒருமுறை உறவு கொண்ட பெண்களைக்
கூட நினைவில் இருத்துவதில்லை. அவன் விமானநிலையத்தில் பார்க்கும் இரினாவைக் கூட அப்படியே
கருதுகிறான். பெயரைக் கூறாமல் போனில் பேசுகிறான்.
அப்போதைய
நிலையில் இரினாவுக்கு தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் ஆவல் எழுகிறது. உண்மையாக அவளது
வாழ்வில் காதல், புணர்ச்சி என்பது கனவாக மாறும்போது யோசேப்பை பார்க்கிறாள். அவனோடு
உறவு கொள்வது என முடிவெடுக்கிறாள். அந்த நேரத்தில் கஸ்தாவ் அவளோடு பிரெஞ்சு பேசாமல்
ஆங்கிலத்தில் பேசுகிறான். ஆனால் இரினா அவனோடு பிரெஞ்சு மொழி பேசுகிறாள். அவளுக்கு அவனின்
ஆங்கிலம் பாதிதான் புரிகிறது. இதனால் இருவருக்கும் பேச்சுவார்த்தையே குறைந்துபோகிறது.
இரினாவின்
அம்மா, கஸ்தாவோடு அதிக நேரம் செலவழிக்கிறாள். அது அவர்களை நெருக்கமான உடலுறவுக்கு அழைத்துச்செல்கிறது.
அந்த உறவை அவள் சுதந்திரம் என்று குறிப்பிடுகிறாள். இன்னொருபுறம் இரினா ஒடிஸி புராணக்கதையை
பேசியபடி ஆவேசமாக யோசேப்போடு உடலுறவு கொள்கிறாள். மைலதா, முன்னர் யோசேப்பை காதலித்தவள்.
ஆனால் அந்த உறவு உடைந்தபிறகு செய்த தற்கொலை முயற்சியால் அவளது வாழ்க்கை மாறுகிறது.
இதன் விளைவாக தனது உடல் உறுப்பு ஒன்றை ஊனப்படுத்திக்கொள்கிறாள்.
மாய மீட்சி
நாவலில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் நிறைய போதாமைகள் உள்ளன. அவற்றை எப்படி
அவர்கள் நிறைவு செய்துகொள்கிறார்கள், அதற்கு என்ன செயல்களை செய்கிறார்கள், அதன் விளைவுகள்
என்னவாக இருக்கின்றன. சமூக அங்கீகாரம் இல்லாத
செயலாக இருந்தாலும் அதை என்னவிதமாக சமாதானம் கூறி ஆறுதல் தேடுகிறார்கள் என்பதை அறிவது
சுவாரசியமாக உள்ளது.
இழந்த ஆண்டுகளை
அறிந்துகொள்வதன் வழியாக மனிதர்களுக்கு என்ன கிடைக்கிறது, கடந்த காலம் எப்படி மனிதர்களை
அலைகழிக்கிறது. இறந்தகாலத்தின் அலையில் நிகழ்காலம் ஆடுகிற ஊசலாட்டம், நினைவுகள் வழியாக
மனிதர்கள் பெறுகிற நிம்மதி அல்லது அவநம்பிக்கை, துக்கம் ஆகியவற்றைப் பற்றி நாவல் மறைமுகமாக
ஏராளமான விஷயங்களை யோசிக்க வைக்கிறது.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக