மோசமான குற்ற வழக்குரைஞருக்கு எதிராக வாளேந்தும் இளைஞன்! - பேட் பிராசிகியூட்டர்

 






பேட் பிராசிகியூட்டர்




பேட் பிராசிகியூட்டர்

கே டிராமா

ராக்குட்டன் விக்கி ஆப்

போஸ்டர் நன்றாக இருந்தால் தொடர் நன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லாம். அதற்கான எடுத்துக்காட்டு இந்த தொடர்.

இந்த தொடரில் நடிக்க ஜின் என்ற பாத்திரத்திற்கான நடிகரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிர்ச்சியான காட்சியில் கண்களை உருட்டி விழிக்கிறார். சண்டைக்காட்சிகளில்  துறுதுறுப்பாக இருக்கிறார். காதல் என்பதை பெண்களுக்கென ஒதுக்கிவிட்டனர். எனவே, நடிப்பு என்பதை ஜின் ஜூங் என்ற பாத்திர நடிகர் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இயக்குநரும் வராத ஒன்றை எதற்கு இழுத்துக்கிட்டு என நினைத்துவிட்டார்.

ஷின் ஆ ரா பாத்திரத்தில் நடித்த நடிகை நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து, கணினி ஹேக்கராக வருபவரின் காமெடியும், சுன் சுல் என்ற மோசடிக்காரரின் காமெடி வில்லத்தனமும் பரவாயில்லை. மீதி அனைத்துமே பரிதாபகரமான தோல்வியாக முடிகிறது.

சியோ என்ற வழக்குரைஞர். பெரும்புள்ளிகளின் சட்டவிரோத விஷயங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி கொரிய சட்டத்துறையையே கைக்குள் வைத்திருக்கிறார். எந்த வழக்கை விசாரிப்பது, யாருக்கு பதவி உயர்வு, சட்டத்துறை அமைச்சரின் மகளுக்கு ஆபரேஷன் செய்யலாமா வேண்டாமா என்பது வரையில் அதிகாரம் நீள்கிறது.

இந்த மனிதரை எதிர்த்து மரக்கத்தியை கையில் எடுத்துக்கொண்டு ஆபீஸ் வரும் இளைஞர் ஜின் போராட முடிவெடுக்கிறார். அவர், அவரது சீனியரான ஷின் ஆ ரா, ஜின்னின் நண்பர்கள் மூவர் என சேர்ந்து என்ன செய்து வழக்குரைஞர் சியோ என்ற குற்றவாளியை பிடித்து சிறையில் அடைத்தனர் என்பதே கதை.

சிவில் சர்வீஸ் டைரக்டர் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர், கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்து இருக்கிறார். ஆனால் கதையில் நினைத்த அளவுக்கு வேகம் இல்லை என்பதால் மெல்ல பார்க்கும் நமக்கும் சோர்வு தொற்றுகிறது.

வழக்குரைஞர் சியோவை நாயகன் ஜின் துரத்துவது அவரது அப்பாவைக் கொன்றதற்காக என தெரியும்போது, இதற்குத்தானா யூடர்ன் போட்டு டேபிளை உடைக்கணும் என தோன்றுகிறது. அவர் நேரடியாகவே அதை நோக்கி சென்றிருந்தால் பெரிய சிக்கல் ஒன்றும் ஆகியிருக்காது. ஏனெனில் வழக்குரைஞர் சியோ பலரையும் மிரட்டி காரியம் சாதிப்பதால், இத்தனை ஆண்டுகளில் அவருக்கு எதிரான கருத்து கொண்டவர்களும் இருப்பார்களே… அவர்களை ஒன்று திரண்டினால் வேலை முடிந்தது. அதற்கு அதற்கு எதற்கு இத்தனை முக்கல் முனகல் எல்லாம்….

நேரத்தை செலவிடலாம் தவறில்லை என்று தோன்றினால் இந்த கே டிராமாவை பார்க்கலாம். மற்றபடி தொடரில் கதையும், அதை சொன்னவிதமும் பொறுமைக்கு சோதனைதான்.

கேங்ஸ்டரின் மகளாக பிறந்து வந்து பிராசிகியூட்டர் ஜின்னுக்கு உதவும் பேக் யுன் ஜி (ஜூ போ யங்)பாத்திரத்தை சற்று விரிவுபடுத்தி இருக்கலாம். நல்ல பாத்திரம். வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. 

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்