தீயசக்தி வாட்களை உருவாக்கும் குருவுடன் மோதும் சீடன்! தி சீலர்

 

தி சீலர் - ஜே டிராமா
தி சீலர்

ஜே டிராமா

ராக்குட்டன் விக்கி ஆப்

 

நகரில் சில மனிதர்கள் திடீரென ஒரு வாளால் தாக்கப்பட்டு  வீழ்கிறார்கள். அப்படி விழுந்து  எழுந்தால கையில் வாளின் கைபிடி உள்ளது. அதை கையில் இறுக்கிப்பிடித்தால் கருப்பு நிற புகை வெளிவரும் தீயசக்தி வாள் உருவாகிறது. அதை பயன்படுத்துபவரின் உருவம் சாதாரண மக்களின் கண்களுக்கு தெரியாது. இந்த வாள், வெறுப்பை, கசப்பை, வலியை, வேதனையை செரித்து வளர்கிறது மனதில நினைத்துப் பார்க்க முடியாத கோபத்தை, வலியை, பழிவாங்கும் வெறியை வைத்திருப்பவர்கள் இந்த தீய சக்தி வாளை பயன்படுத்தி தங்கள் வாழ்வைக் கெடுத்தவர்களைக் கொல்கிறார்கள். இதை தடுப்பவன்தான் காக்கேறு எனும் நாயகன்.

தி சீலர் தொடரின் பெரும் பலமே வாள் சண்டைக் காட்சிகள்தான். எதிரியிடம் வாள் இருக்கும். நாயகனிடம் வாளை மூடி உறையிடுவதற்கான வாளுறை மாத்திரமே உண்டு. அதை வைத்து அவர் எப்படி சண்டையிடுகிறார், எதிரிகளை வெல்கிறார் என்பதே கதை.

தீயசக்தியை அடக்கும் இனக்குழு தொன்மைக்காலத்தில் இருந்து இருக்கிறது. இவர்கள், தனி இனக்குழுவாக சமூகத்தைக் காக்க அமைதியாக இயங்கி வருகிறார்கள். காக்கேறு, தீயசக்தி வாளை உறையில் போட்டு அடக்கியபிறகு அதை ஒருவர் வந்து பாதுகாப்பாக பெட்டியில் வைத்து எடுத்துச்செல்கிறார். காக்கேறு, தீயசக்தியை அடக்கும்போது, அதன் பாதிப்பு அவனது உடலிலும் பரவுகிறது. இடதுகையில் தொடங்கிய தீய சக்தி விஷம் மெல்ல உடலில் பரவி வருகிறது. இது வாளை உறையிடும் பணிசெய்யும் வீரர்களின் தவிர்க்க முடியாத சாபம்.

பத்திரிகையில் வேலை செய்யும் பெண்,  தீயசக்தியை அடையாளமறியும் குழுவை பின்தொடர்ந்து உண்மையைக் கண்டறிகிறாள். ஏறத்தாழ அவளது விசாரணை வழியாகவே நாம் அந்த இனக்குழு பற்றி அறிகிறோம். இந்த குழுவில் மொத்தம் நான்கு பேர் இருக்கிறார்கள். ஒருவர் அதன் நிறுவனர். அடுத்து தீயசக்தி வெளியான இடத்திற்கு வாள்வீரரை கூட்டிச்செல்லும் நிறுவனரின் மகன், வாள்வீரன் காக்கேறு, வாள் உறைகளை செய்து தரும் இளம்பெண்மணி. இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் தீயசக்திக்கு எதிராக போராடுகிறார்கள்.

நகரில் தீய சக்தி வாட்கள் திடீரென நிறைய பெருகுகின்றன. அதை கட்டுப்படுத்த ஒரு வாள்வீரன் காக்கேறு திணறுகிறான். எங்கு பிரச்னை என வாளுறை இனக்குழுவிற்கு தெரிவதில்லை. அதற்கான தகவல்களை பத்திரிகைப் பெண்மணி கொடுக்கிறாள். எனவே, அவளையும் அவர்கள் தங்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள்.

 தீயசக்தி வாள்களை உருவாக்குவது, வாளுறை இனக்குழுவில் இருந்த முன்னாள் வாள் வீரர் ஷின் என்பவர்தான் என காக்கேறுவிற்கு தெரிய வருகிறது. அவர்தான், அவனது வாள்வீச்சுக்கான வழிகாட்டு குரு. அவர் உடலில் விஷம் அதிகமாகி, வாளுறை இனக்குழு அமைப்பின் நிறுவனரால் கொல்லப்படுகிறார். ஆனால், எப்படியே உயிர் பிழைத்து தீயசக்தியை நம்பி மீண்டும் இயங்கத் தொடங்குகிறார். அவரை காக்கேறு தலைமையில் வாளுறை இனக்குழு எப்படி கட்டுப்படுத்தி அழித்தது என்பதே கதை.

தொடர் நெடுக, காக்கேறு பாத்திரத்தில் நடித்த நடிகரின் வாள்வீச்சு சண்டை பிரமிக்க வைக்கிறது. அந்தளவு வேகம் எதிர்பார்க்கவே முடியாது. உக்கிரமான சண்டை. அதுவும் மாஸ்டர் ஷின்னுடன் நடக்கும் சண்டை அனைத்துமே பீதியூட்டக்கூடியவை.

மனதில் பெருகும் வெறுப்புணர்வு ஒருவரை கெடுதலாக காரியங்களைச் செய்ய வைக்கிறது. எப்படி மகிழ்ச்சியை  ஏற்கிறோமோ அதேபோல துன்பத்தை துயரத்தை, வலியை இயல்பானதாக ஏற்கலாம். ஆனால், பிறரால் உருவாக்கப்படும் துயரங்களை ஒருவர் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தால் அது அவரை மெல்லக்கொல்லும் விஷமாகிறது. மனம் நச்சாகிறது. அதைத்தான் தீயசக்தி வாள் என புரிந்துகொள்ளுங்கள். இந்த வாள் தீண்டினால் ஒருவர் இறந்துபோனதற்கு ஒப்பானவர். அப்போது அவர் மனதில் உள்ள எண்ணம், வெறுப்பு மட்டுமே. அவரது வாழ்வில் சிக்கல்களை சீண்டல்களை கேலிகளை உருவாக்கியவர்களை தேடி சென்று போட்டுத்தள்ளுகிறார்கள். இந்த கொலைகள் நிற்பதில்லை. நிறுத்தவும் முடியாது என்பதே விஷயம். தீயசக்தி வாளை உறையிலிட்டால் அவர்களை அழிப்பதோடு  வேலை முடியும்.

தொடரில் இறுதியாக நடைபெறும் சண்டைக்காட்சியில் காக்கேறு செய்யும் தியாகம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. டிவி தொடர் என்றாலும் அதற்காக இந்த தொடர் இயக்குநர் எடுத்த முயற்சியும், மெனக்கெட்ட உழைப்பும் அசாதாரணமானது.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்