வெறுப்பேற்றினால் கொலை செய்ய ரெடியாகும் நாயகி! ஜோல்ட் - கேட் பெகின்சோல்

 
ஜோல்ட் 2021 - கேட் பெகின்சோல் 

ஜோல்ட்

ஆங்கிலம்

யூட்யூப்

விஆர் ஃபிலிம்ஸ்

ஒரு குழந்தைக்கு இயல்பாகவே மூளையில் கார்டிசோல் என்ற வேதிப்பொருள் அதிகம் சுரக்கிறது. இதனால், அவளுக்கு யாராவது வெறுப்பேற்றுவது போல தோன்றினால், சீண்டினால் அவர்களை அடித்து உதைக்க தொடங்குகிறாள். சமூகமே ஏராளமான முட்டாள்களை கொண்டதுதான் என்பதால், அவளை வார்த்தையால், உடலால் சீண்டுபவர்களை விட்டுவைப்பதில்லை. அடித்து கை கால்களை முறிக்கிறாள். இதனால் அவளை மருத்துவர்கள் சோதித்து ஆய்வக எலி போல பாதுகாக்கிறார்கள்.

மனிதர்கள் இப்படியான வன்முறை எண்ணம் கொண்டிருந்தால், யார் வருகிறார்களோ இல்லையோ  சிஐஏ வந்துவிடும். அவர்கள்தான் நாயகி கேட் பெகின்சோலுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பணத்தை கொடுத்து வருகிறார்கள். கண்காணிக்கிறார்கள். அவளை தங்களது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள்.

இந்த நேரத்தில் நாயகி, அவர்களிடமிருந்து விலகிப் போகிறாள். தனக்கான வாழ்க்கையை தானே தேடுகிறாள். அந்த முயற்சியில் ஜஸ்டின் என்பவன் டேட்டிங் காதலனாக கிடைக்கிறான். அவனுடன் அவளுக்கு சிக்கல் ஏற்படாததால் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் பார்த்தால், காதலனை கொன்றுவிட்டார்கள் என தகவல் கிடைக்கிறது. தனக்கு கிடைத்த ஒரே காதலனும் இறந்துவிட்டான் என தெரிந்து நாயகி எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம்தான் கதையின் முக்கியமான பகுதி. ஆனால் இறுதியில் அவள் ஏமாற்றப்படுகிறாள். அப்போது அவள் எடுக்கும் முடிவு, அட்டகாசம்.

 ஒருவருக்கு உடல்ரீதியாக ஏற்படும் குறைபாடு அவரை சமூக ரீதியாக புழங்கவிடாமல் தடுக்கிறது. இதனால் அவர் எப்போதும் தனியாகவே இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கிடைக்கும் பாசம், அன்பு, காதல் என்பது எந்தளவு முக்கியத்துவமானது. அதை அவர் இழக்கும்போது ஏற்படும் விரக்தி, கோபம் ஆகியவற்றை நாயகி சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையில் இது ரத்தம் தெறிக்கிற சண்டைப்படம்தான். ஆனால், அதிலும் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த கிடைத்த இடத்தை நாயகி நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நாயகி வேதிப்பொருள் உடலில் அதிகரிப்பதால் ஆவேசம் கொண்டவராக மாறுகிறார். தான் கற்ற தற்காப்புக்கலைகளை அசுர வேகத்தில் பயன்படுத்தி எதிரிகளை சாய்க்கிறார். இதில் சிக்கல் என்னவென்றால், நாயகிக்கு பிரேக் கிடையாது. அவரால் கொலை செய்யத் தொடங்கினால் தாக்குதலை தொடங்கினால் நிறுத்த முடியாது. எதிரி சாகவேண்டும் அல்லது நாயகியை மயக்கம் போடவைக்கவேண்டும் அல்லது கொல்ல வேண்டும்.

கேலி, கிண்டல், பகடி என்பதை நாயகியிடம் பேசும் பலரும் உயிரிழக்கிறார்கள். அல்லது கை கால்களை இழக்கிறார்கள். அந்தளவு வன்முறை அவரது மனதில் ஓடுகிறது. சில சமயங்களில் அதை செயல்படுத்துகிறார். பல சமயங்களில் அதை கட்டுப்படுத்துகிறார். இதற்காக மார்பில் மின்சார ஷாக் தரும் ஜாக்கெட் ஒன்றை அணிகிறார். அதுவும் கூட தற்காலிக ஏற்பாடுதான். அதிகளவு அவர் உணர்ச்சிவசப்படும்போது மின்சார ஜாக்கெட்டும் கூட கைவிட்டுவிடும் நிலைதான் ஏற்படுகிறது. இதுபற்றிய காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள். படம் வயதுக்கு வந்தோர் மட்டும் என்ற பிரிவில் வரும். தனது செக்ஸ் அனுபவத்தை தெரபிஸ்ட்டிடம் கேட் விளக்கும் காட்சியே  இதற்கு எடுத்துக்காட்டு. அதிகம் டெம்ப்ட் ஆகாமல் படத்தை பாருங்கள்.

கார்டிசோல் அதீதமாக சுரக்கையில் அவரால் வேகமாக செயல்பட முடிகிறது. இதைக்கட்டுப்படுத்த ஜாக்கெட் ஒன்றை அணிகிறார். இதன் பக்கவிளைவு என்ன என்பதை காட்சிபடுத்தவில்லை.

அறிவியல் சார்ந்த சண்டைப்படம் ஒன்றை பார்க்கவேண்டும் என நினைத்தால் ஜோல்ட் உங்களை ஏமாற்றாது. இந்த படத்தை அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கலாம். படத்தில் சொல்வதற்கு நிறைய  விஷயங்கள் உள்ளன.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்