முப்பது ஆண்டுகளாக தேடப்படும் டீனேஜ் பெண்!
தாரா காலிகோ |
நெடுஞ்சாலையில்
காணாமல் போன டீனேஜ் பெண் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீளும் தேடல்
1988ஆம் ஆண்டு,
செப்டம்பர் 20ஆம் தேதி. தாரா காலிகோ என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பதாகியிருந்த்து.
தன் அம்மாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்மேன் பிளேயரை எடுத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே
வெளியே சென்றார். நியூ மெக்சிகோ பகுதியில் வாழ்ந்து வந்தவரான தாரா பிறகு சைக்கிளோடு
வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதோ முப்பதாண்டுகளுக்கு
மேலாகிவிட்டது. இன்னும் காவல்துறையினர் நம்பிக்கையை கைவிடவில்லை. குற்றவாளியை தேடிக்கொண்டே
தான் இருக்கிறார்கள்.
தாரா சைக்கிளில்
சென்று வந்த பகுதி பாலைவனத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. அவர் அடிக்கடி சைக்கிளில் முப்பதைந்து
கி.மீ. தூரம் சென்று திரும்புவது வழக்கம். போகும்போது, ‘’நான் குறிப்பிட்ட நேரத்தில்
வீட்டுக்கு திரும்பலைன்னா, சைக்கிளுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு என்னை கூட்டிக்கிட்டு
போறதுக்கு வந்துடுங்க’’ என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
இதை அவரது சகோதரி சரியாக நினைவில் கொண்டிருக்கிறார்.
அதுதான் தாரா
பேசிய கடைசி வார்த்தைகள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் அவரைப் பற்றி நல்ல
விஷயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டப்படிப்பு
படித்துக்கொண்டிருந்தவர் தாரா. 1989ஆம் ஆண்டு தாரா பற்றிய துப்பு ஒன்று கிடைத்தது.
புளோரிடாவில்
உள்ள பார்க்கிங் பகுதியில் கிடந்த புகைப்படம் ஒன்றை பெண்மணி ஒருவர் கண்டெடுத்து காவல்துறையில்
ஒப்படைத்தார். அதில் வேன் ஒன்றில் தாரா போன்ற சாயலில் ஒரு இளம்பெண் வாயில் டேப் வைத்து
ஒட்டியிருக்க, அவரின் கைகளை பின்புறமாக வைத்து கட்டப்பட்டிருந்தது. கூடவே, வாயில் டேப்
ஒட்டிய நிலையில் சிறுவன் ஒருவனும் இருந்தான். ஊடகங்கள் முழுக்க இந்த புகைப்படம் பரபரப்பாக
வலம் வந்துகொண்டிருக்க, காவல்துறை அது தாராவல்ல. தவறான புகைப்படம் என்று கூறிவிட்டு
அமைதியாகிவிட்டது.
2013ஆம் ஆண்டு
எஃப்பிஐ, உள்ளூர் காவல்துறை என இருவரும் சேர்ந்து
தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வேலை செய்யத் தொடங்கினர். உள்ளூர் அளவில் சந்தேகப்படும்
ஆட்களை கண்காணித்து அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டன. இதுபற்றி மேலதிக விவரங்களை அவர்கள் கூறவில்லை.
தாரா காணாமல்
போனது பற்றி காவல்துறை தெரிந்துகொண்டபிறகு அமைதியாக இருக்கவில்லை. நீர், நிலம், ஆகாயம் என பல்வேறு வழிகளில் இளம்பெண்ணைக் கண்டுபிடிக்க
முயன்றனர். ரியோ கிராண்டே ஆற்றுப்பகுதியில் தாரா பாட்டு கேட்க பயன்படுத்திய வாக்மேன்,
கேசட் டேப்பை கண்டறிந்தனர். ஆனால் சைக்கிளைப் பற்றிய எந்த தடயமும் தெரியவில்லை.
அவரது பெற்றோர்
காவல்துறையும், ஊடகங்களும் தனது மகளை மீட்டுக்கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள் என
நினைக்கவில்லை. தாராவின் அம்மா, வளர்ப்பு தந்தை ஜோயல் என இருவரும் சேர்ந்து பல்வேறு
குற்ற ஆவணங்களைத் தேடி மகளைக் கண்டுபிடிக்க முயன்றனர்.
மகள் காணாமல்
போய்விட்டாள், ஆனால், அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை என்பது எந்தளவு
கொடுமையான உண்மை. தாய் பேட்டி, தந்தை ஜான் ஜோயல் என இருவரும் சேர்ந்து தாராவின் பிறந்த
நாளுக்கென வாங்கி குவித்த பரிசுகள் அவளது அறையில் இன்று வரையிலும் சேர்ந்துகொண்டே இருக்கிறது.
2006ஆம் ஆண்டு
தாய் பேட்டி, பக்கவாதம் வந்து உடல்நிலை மோசமாகும் வரையில் மகள் திரும்பி வந்துவிடுவாள்
என்றே நம்பிக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். தாராவின் சகோதரி மிச்செலுக்கு இன்று வயது
ஐம்பதாகிறது. அவரும், சகோதரியின் பள்ளித்தோழி மெலிண்டா ஆகியோர் சேர்ந்து காவல்துறையின்
விசாரணை நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொண்டனர். 2017ஆம் ஆண்டு, மெலிண்டா வேனிஸ்டு
– தி தாரா காலிகோ இன்வெஸ்டிகேஷன் என்ற பாட்காஸ்டை தொடங்கினார்.
1996-2007
காலத்தில் வெலென்சியா ஷெரீஃப்பாக இருந்தவர் ரெனெ ரிவேரா. இவர் அந்த காலகட்ட வழக்குகளை
விசாரித்து வந்தார். பள்ளியில் தாராவுக்கு அறிமுகமான மாணவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர்
என ரிவேரா நம்புகிறார். அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர், இந்த உண்மையை மறைத்துவிட்டனர்
என அல்புகர்க்யூ ஜர்னல் என்ற பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்தார். தாராவை பிக் அப் டிரக்
ஒன்று சில நாட்களாக பின்தொடர்ந்து வந்திருக்கிறது. அந்த வண்டி. அதில் இருந்த மனிதர்
ஆகியோரை படமாக வரைந்து மக்களுக்கு காட்டியும் குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. தேடிக்கொண்டே
இருக்கிறார்கள்.
ஆடம் கார்ல்சன்
பீப்புள்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக