சோசலிசத்திலிருந்து பாசிசம் பிறக்கிறதா? - விளக்குகிறார் எஃப்ஏ ஹயேக்

 


ரோட் டு செஃர்ப்டம் நூல் அட்டைரோட் டு செஃர்ப்டம்

எஃப்ஏ ஹயேக்

 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவவியலாளர், ஹயேக். இவர் நூலில்  அரசியல்  தத்துவங்களை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இந்த நூலை இடதுசாரி ஆதரவாளர்கள் படிக்கும்போது நிச்சயம் நெஞ்சுவலி வரும். அந்தளவு கம்யூனிசத்தை, இடதுகளுக்கான கருத்தை தாக்கியுள்ளார். நாம் கவனிக்க வேண்டியது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை எப்படி படிப்பவர்களிடம் கொண்டு செல்கிறார், ஏற்க வைக்கிறார் என்பதை மட்டுமே.

1941ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஆசிரியர். சோசலிசம் வழியாக பாசிசம், நாஜியிசம் உருவாகிறது என்பதை விளக்கி கூறுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளே பெரும்பாலான கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எப்படி சட்டப்பூர்வமாக உருவாகிறது, மக்களை அதற்கு தயார்படுத்துகிறது, ஊடகங்களை அதற்கேற்ப வலதுசாரி அரசியல்வாதிகள் எப்படி வளைக்கிறார்கள் என்பதை நூலாசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். நூலை படிக்கும்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி, ரஷ்யாவில் நடைபெற்ற லெனின், ஸ்டாலின் ஆட்சி ஆகியவை நினைவில் வந்துகொண்டே இருக்கின்றன. ஜெர்மனியில் தொழிலாளர் சோசலிசகட்சி ஆட்சியில் இருக்கும்போதுதான் யூதர்கள் களையெடுக்கப்பட்டனர். ரஷ்யாவில் குலாக்குகள் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

 சோசலிசம் பேசப்படும்வரை ஒரு கருத்தாக இருந்தாலும் செயல்பாட்டில் அரசாக அமையும்போது சர்வாதிகாரமாக மாறுகிறது. தனியார் சொத்துகளை கையகப்படுத்தி கட்டுப்படுத்தி அரசு தனித்த அதிகாரம் கொண்டதாக மாறுகிறது. அரசு ஏகபோகம் என இதைக் குறிப்பிடலாம். சமகால உதாரணம் சீனா. தனியார் ஏகபோகத்திற்கு அமெரிக்க டெக் நிறுவனங்களை உதாரணமாக கூறலாம். ஏகபோகம் என்பதன் விளைவுகளை ஆசிரியர் சிறப்பாக உதாரணங்களைக் காட்ட விளக்கியுள்ளார்.  

மக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து, சுதந்திரத்தை பயணம் வைத்து பாதுகாப்பை பலனாக பெற்றுத்தான் ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறார்கள். உண்மையில் அதன் விளைவாக மக்கள் எந்தளவு பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது என்பதை ஹயேக் அருமையாக விளக்கியிருக்கிறார். ஊழல் ஆட்சி பற்றிய செய்தியை படிக்கும்போது சர்வாதிகார ராணுவ ஆட்சியை, காலனி கால ஆட்சியே தேவலை என்று கூறுபவர்கள் இப்பகுதிகளை படித்தால் அப்படிப்பட்ட நாடுகளின் நிலைமை மக்களின் சமூக பொருளாதார நிலை என்னவென்று புரிந்துகொள்ளலாம்.

266 பக்கங்களில் சோசலிசம், முதலாளித்துவம், கம்யூனிசம்,சர்வாதிகாரம், ராணுவ ஆட்சி, தனியார் ஏகபோகம், அரசாங்கத்தின் பணி, கடமைகள், ஜனநாயகம், சுதந்திரம் என பல கருத்துகளையும் வாசகர்களுக்கு விளங்கும்படி தெளிவாக ஆசிரியர் ஹயேக் விளக்கியுள்ளார்.

அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கான நூல்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்