அமெரிக்கர்களின் தூக்கத்தைக் கெடுத்து பீதிக்குள்ளாக்கிய ஸோடியாக் கொலைகாரன்!

 
ஸோடியாக் கில்லர்

இந்த பெயரை ஊடகங்களும், காவல்துறையினரும் மறக்கவே முடியாது. அந்தளவு அத்தனை பேரையும் பீதிக்குள்ளாக்கிய சீரியல் கொலைகாரர். அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் 60, 70 களில் ஏராளமான கொலைகளை செய்தார். பெரும்பாலும் ஜோடிகளாக உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு செல்வது ஸோடியாக் கொலைகாரரின் பாணி. பிறகு தனது கொலை பற்றி குறியீடாக கடிதம் எழுதி நகரின் முக்கிய பத்திரிகைகளுக்கு, காவல்நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்.

கணினியில் என்கிரிப்ஷன் டீகிரிப்ஷன் என்று கூறுவார்கள். குறியீடுகளை என்ன தகவல் என்று அறிந்துகொள்ள ஒருவர் அதை டீகிரிப்ஷன் செய்யவேண்டும். அதன்படி ஸோடியாக் கொலைகாரரின் செய்திகளை காவல்துறையினர், மக்களில் சில தன்னார்வலர்கள் டீ கிரிப்ஷன் செய்து குற்றங்களை புரிந்துகொள்ள முயன்றனர்.

37 கொலைகளை செய்தாலும் 5 கொலைகளை மட்டுமே அவர் செய்தார் என காவல்துறையால் நிரூபிக்க முடிந்தது. ஸோடியாக் கொலைகாரரைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள், நூல்கள் வெளியாகியுள்ளன.’’ எனது இறப்பிற்கு பிறகு அடிமையாக இருக்க மனிதர்கள் தேவை, சிறுமிகளை கொல்வது எளிதானது, மக்களைக் கொல்வது பிடித்திருக்கிறது. அது வேடிக்கையாக இருக்கிறது’’ என்று தனது செய்தியை குறியீடு வழியாக கூறினார்.

கொலையாளி துப்பாக்கி மூலம் இளம் ஜோடிகளை சுட்டுவிட்டு தப்பி சென்றதால், அதிக தடயங்கள் கிடைக்கவில்லை. எனவே, காவல்துறை கொலைகாரர் அனுப்பிய குறியீடுகளை மொழிபெயர்த்து விஷயங்களை அறிந்து ஸோடியாக் கொலைகாரனை அடையாளமறிவது மட்டுமே ஒரே வழியாக இருந்தது.

1968ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பள்ளி மாணவர்களான பெட்டி, டேவிட் ஆகியோர் காரில் இருந்தனர்.இரவு பதினொரு மணிக்கு இவர்களை ஸோடியாக் கொலைகாரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். டேவிட் இறந்துவிட்டாலும், பெட்டி தப்பிக்க முயன்றதால் அவர் மீது கோபமுற்று தலையில் துப்பாக்கியால் இடித்ததில் கோரமாக தலையில் அடிபட்டு இறந்துபோயிருந்தார்.

வாலேஜோவின் ப்ளூ ஸ்பிரிங் பார்க் ஒன்றில் டார்லின், மைக்கேல் என்ற இளம்ஜோடி காரில் இருந்தார். அவர்களை நெருங்கிய ஸோடியாக் கொலைகாரர் 9 மி.மீ. கொண்ட துப்பாக்கியால் ஜோடிகளை துப்புரவாக கொன்றார். இதில் ஆண் மட்டும் வலியால் முனக, அவர்களைக் கடந்து சென்றவர் உயிரோடு இருக்கிறானே என திரும்பி வந்து துப்பாக்கியால் மீண்டும் சுட்டுவிட்டு சென்றார்.

இதில், மைக்கேல் மட்டும் எப்படியோ உயிர்பிழைத்தார். அவர்தான் கொலைகாரனைப் பற்றிய சில அடையாளங்களைக் கூறினார்.  ஆண், குட்டையானவர், பழுப்பு நிற சுருட்டை முடி என்பதை காவல்துறையினர் குறித்துவைத்து படம் வரைந்தனர். இப்படி நடந்த இந்த தாக்குதலுக்கு கேஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் போன் செய்து தான்தான் அதை செய்தேன் என கூறி குழப்பினார்.

இதைப் பற்றியெல்லாம் ஸோடியாக் கொலைகாரர் கவலைப்படவில்லை. காரியகர்மமாக அடுத்த கொலைக்கு நகர்ந்துவிட்டார். 1969ஆம் ஆண்டு செப்.27ஆம் தேதி, பெரிசா நபா கவுன்டி ஏரி அருகே காதலர்கள் ஒன்றாக இருந்தார்கள். அவர்களை குறிவைத்து நகர்ந்த ஸோடியாக் கொலைகாரர் கத்தியால் இருவரையும் தாக்கினார். இதில்  சீசிலியா ஆன் ஷெப்பர்ட் அங்கேயே இறந்துவிட்டார். பிரையன் மட்டும் படுகாயங்களுக்கு உட்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று பிழைத்தார். குற்றவாளி காயமுற்றவர்களிடமிருந்து காரின் சாவியை வாங்கிக்கொண்டு சென்றிருந்தார். காரில், தாக்குதலை நடத்திய தேதியை எழுதி வைத்துவிட்டு சென்ற வினோத கொலைகாரர், ஸோடியாக்காகவே இருக்க முடியும். தாக்கப்பட்ட ஹார்ட்னெலுக்கு இன்று எழுபது வயதுக்கு மேலாகிறது.

அதே ஆண்டில், அக்.11 அன்று, சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பால் லீ ஸ்டைன் என்பவரை தலையில் பின்புறமிருந்து சுட்டார் ஸோடியாக். பிறகு, குரோனிக்கல் என்ற பத்திரிகைக்கு குறியீடு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. கூடுதலாக, ரத்தக்கறை படிந்த ஸ்டைன் என்பவரின் சட்டையும் உடன் இருந்தது. பிற கொலைகாரர்களுக்கும், ஸோடியாக்குக்கும் உள்ள வேறுபாடு, அவர் தொடர்ச்சியாக பத்திரிகைகளோடு உரையாடிக்கொண்டே இருந்தார். தான் செய்த கொலைகளைப் பற்றிய குறியீடுகளை அனுப்பி வைத்து வந்தார்.

இந்த வழக்குகளில் குற்றவாளியே இல்லை என்று கூறமுடியாது. தொடக்க பள்ளி ஆசிரியரான ஆர்தர் லெய் ஆலன் என்பவரை, ஸோடியாக் கொலைகாரர் என முடிவு செய்து காவல்துறை பலமுறை அழைத்து விசாரித்தது. அதற்கும் நிறைய காரணங்கள் இருந்தன. அவர், பள்ளியில் மாணவர்களிடையே ஒழுக்கமாக நடந்துகொள்ளவில்லை என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்டிருந்தார். மக்களில் சிலரை கொல்லவேண்டும் என கோபத்தில் அவர் கூறியிருந்ததை அவருக்கு எதிராக பயன்படுத்தி காவல்துறை அவரை விசாரித்தனர். அவர் வீட்டில் டைப்ரைட்டர் ஒன்று இருந்தது. ஜோடியாக் கடிகாரத்தையும் பயன்படுத்திவந்தார். 1974ஆம் ஆண்டு எட்டு வயது சிறுவனை பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவானது. ஆனால் அதற்கும் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் ஆலனை விட்டுவிட்டார்கள். 1992ஆம் ஆண்டு அவர் காலமாகிவிட்டார்.

ஸோடியாக் கொலைகாரரின் குறியீடுகளைப் பற்றி இன்றும் ஆராய்ச்சி செய்து தகவல்களைக் கண்டுபிடித்தபடி இருக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிப்டோகிராபர்கள், இதற்காக குரோனிக்கல் பத்திரிகைக்கு வந்த குறியீடுகளை எடுத்து வைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.

‘’என்னைப் பிடிக்க நீங்கள் செய்யும் முயற்சிகள் வேடிக்கையாக உள்ளன. என்னை கேஸ் சேம்பருக்கு தள்ள நீங்கள் முயற்சிக்கிறீர்கள். சொர்க்கத்திற்கு செல்ல நான் பயப்படவில்லை. எனக்கு அடிமையாக இருக்க ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இறப்பை நினைத்து பயப்பட்டவர்கள்’’ என்று ஸோடியாக்கின் குறியீடுகளை மொழிபெயர்த்திருக்கின்றனர். நவீன காலத்தில் ஸோடியாக் கொலைகாரர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை டிஎன்ஏ வைத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டனில் ஜாக் தி ரிப்பர் என்ற கொலைகாரரைக் கூறுவார்கள். அந்த வகையில், அவருக்கு நிகராக அமெரிக்காவல் ஸோடியாக் கொலைகாரரை ஒப்புமைபடுத்துகிறார்கள்

ரிச்சர்ட் ஜெரோம்

பீப்புள் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்