பாலியல் வல்லுறவை அறிந்து தடுக்க முயன்ற கன்னியாஸ்த்ரீக்கு நேர்ந்த கொடூரம்!

 


சிஸ்டர் கேத்தி

பாதிரி ஜோசப் மாஸ்கெல்


பாலியல் வல்லுறவை அறிந்து தடுக்க முயன்ற கன்னியாஸ்த்ரீ- மர்மமாக இறந்துபோனவரை ஐம்பது ஆண்டுகளாக தேடும் காவல்துறை

 

குங்குமத்தில் ஆசிரியர் கே என் சிவராமன் வைக்கும் பெரிய தலைப்பு போல இருக்கிறதா? விஷயம் அந்தளவு நீளமானது.  1969ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று கன்னியாஸ்தரீ கேத்தரன் செஸ்னிக் சுருக்கமாக கேத்தி தனது அபார்ட்மென்டில் இருந்து கடத்தப்பட்டார். பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 1970ஆம்ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி, இரண்டு வேட்டைக்காரர்கள் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் கடந்த கேத்தியின் உடலை கண்டுபிடித்தனர். காவல்துறையும் உடலைப் பெற்றது.

கேத்தியின் சகோதரி, தனது சகோதரி இன்னும் உயிரோடு இருக்கிறாள். அவள் திரும்ப வந்துவிடுவதாக எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். கேத்தி, பெண்கள் படிக்கும் ஆர்ச்பிஷப் கியோஹ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மர்மமாக கொல்லப்பட்ட காரணம், அங்கு பெண் மாணவிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவை, சீண்டல்களை அடையாளம் கண்டதுதான் என்று கேத்தியின் சகோதரி மர்லின் செஸ்னிக் ராடாகோவிக் கூறுகிறார். மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்த கேத்தி அதை தடுத்த  நிறுத்த முயன்றிருக்கிறார். மேலும், தனது கன்னியாஸ்த்ரீ வாழ்வையும் கூட மாற்றிக்கொள்ள நினைத்திருக்கிறார். ஆனால், அதற்குள் எதிரிகள் முந்திக்கொண்டு அவரது மூச்சை நிறுத்திவிட்டனர்.

கேத்தி கொல்லப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. உண்மையான குற்றவாளியை பிடிக்க காவல்துறை  இன்னும் முயன்று வருகிறது. வார்த்தை அளவிலேனும் இந்த நம்பிக்கை மர்லினை சற்றே நிம்மதி அடையச்செய்து வருகிறது. ‘’கேத்தி, பள்ளியில் ஆங்கில வகுப்பு நடத்தி வந்தார். அவருக்கு அங்கு நடந்த பாலியல் சீண்டல்கள், வல்லுறவு குற்றங்களின் வரலாறு தெரிய வந்த்து. எனவே, அதை காவல்துறைக்கு தெரிய வைக்க முயன்றார். ஆனால் அதை தடுக்க அவரைக் கொன்றுவிட்டனர்.’’’ என்று அவரது முன்னாள் மாணவர்களில் ஒருவரான ஜீன் வெஹ்னர் கூறினார்.

கேத்தி இறந்துபோனதை வைத்து நெட்பிளிக்ஸில் தி கீப்பர்ஸ் என்ற ஆவணப்படம் கூட எடுத்திருக்கிறார்கள். இந்த குற்ற ஆவணப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. பாதிரியார் ஏ ஜோசப் மாஸ்கெல் என்பவர்தான்  பாலியல் குற்றங்களை செய்தவர். இவர் பள்ளி தேவாலயத்தில் பணிபுரிந்ததோடு, ஆலோசகராகவும் இயங்கி வந்தார். 1967-1975 காலகட்டத்தில் எத்தனை மாணவிகளை மாஸ்கெல் சீரழித்தார் என்ற கணக்கு வழக்கே இல்லை.

பலருக்கும் காசு கொடுத்து விவகாரம் வெளியே செல்லாமல் தடுத்திருக்கிறார்கள்.

ஆவணப்பட இயக்குநர் ரியான் வொயிட், மாஸ்கெலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாற்பது பேர்களை சந்தித்திருக்கிறார். இதில், முன்னர் பேசிய ஜீன் வெஹ்னர்  கூட உண்டு. உடல் மனரீதியாக மாணவர்களை கடுமையாக சீரழித்த மாஸ்கெல் இறக்கும்வரை தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. வல்லுறவு செய்வது, போதைமருந்துக்கு பழக்குவது, துப்பாக்கியை வைத்து மிரட்டுவது என பலவகையில் மாணவர்களை சீரழித்திருக்கிறார். இந்த செயல் நடைபெற சில கூட்டாளிகளும் உதவியிருக்கிறார்கள். மாஸ்கெல் செய்த தவறுகளை அறிந்த இன்னொரு பாதிரியார் நெய்ல் மேக்னஸ். தவறுகளை அநீதிகளை பார்த்தாலும் அதை அமைதியாக நடக்கட்டுமே என வேடிக்கை பார்த்திருக்கிறார்.

மேரிலாண்டு அட்டர்னி ஆய்வு செய்து, 1940-2022 காலகட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பாதிரிகள் அறுநூறுக்கும் அதிகமான மாணவர்களை பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் என 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கிறிஸ்தவ அமைப்புகள், தேவாலயங்கள் தங்கள் சீர்கேடுகளை எப்படி புனிதம் என்று கூறுவது என அமைதி காத்தனர். செல்வாக்கை பயன்படுத்தி தவறுகளை மறைத்திருக்கிறார்கள்.

அட்டர்னி அறிக்கை வெளியானபிறகு வேறு வழியில்லாமல் பால்டிமோர் ஆர்ச்பிஷப் வில்லியம் இ லோரி, அதுவரை நடந்த பாலியல் வல்லுறவுகளுக்கு மன்னிப்பு கோரினார். ஆனால் இதனால் என்ன மாறிவிடப்போகிறது.?

மாஸ்கெல் தவறுகளை செய்தபோது கத்தோலிக்க அமைப்புகளைச் சேர்ந்த  அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் தெரபிக்கு அனுப்பியிருக்கின்றனர். பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்கினர். ஆனால் இதெல்லாம் நடைபெற்றது 2002க்குப் பிறகு. 2001ஆம் ஆண்டு இறக்கும்வரை பாதிரி மாஸ்கெல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரது கூட்டாளி மேக்னஸ் 1988ஆம் ஆண்டு இறந்துபோனார். அலட்டிக் கொள்ளாத பால்டிமோர் தேவாலயம் கள்ள மௌனம் சாதித்துவிட்டது.

கேத்தி இறந்துபோன இடத்தில் மாஸ்கெலுடைய டிஎன்ஏ இருக்கிறதா என சோதிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவரின் அடையாளம் ஏதும் இல்லை. இதற்காக 2017ஆம் ஆண்டு, மாஸ்கெலுடைய உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மர்லினுக்கு வயது எழுபதாகிவிட்டது. ‘’பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கூறியிருக்கிறார்கள். இதுபோலவே பாதிக்கப்பட்ட பிறரும் தங்கள் மனதில் வைத்துள்ள உண்மையைக் கூற வேண்டும்’’ என்று கூறினார்.

‘’பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற் செய்வேன்’’  என

பைபிளில் கூறப்பட்டுள்ளதுதான் அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என காத்திருப்பவர்களுக்கு  ஒரே ஆறுதலாக உள்ளது.

 ஆடம் கார்ல்சன், பீப்புள் இதழில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.


கருத்துகள்