செம்மரக்கடத்தலில் கொல்லப்படும் நபர்களை தேடிப்போகும் உதவி கலெக்டர்!

 








ராமாராவ் ஆன் டூட்டி 2022 தெலுங்கு




ராமாராவ் ஆன் டூட்டி

தெலுங்கு

ரவிதேஜா, நாசர்,திவ்யான்சா கௌசிக்

 

படத்தின் தொடக்க காட்சியில் வயதான முதியவர் இறந்துபோன ஆளை யாருக்கும் தெரியாமல் மண்ணைத் தோண்டிப் போட்டு புதைக்கிறார். இதற்கடுத்து, உதவி கலெக்டரான ராமாராவின் அதிரிபுதிரி அறிமுக காட்சி.

படம் முழுக்க குற்றச்சம்பவங்கள், அதை எப்படி செய்கிறார்கள், அதில் காவல்துறையின் ஈடுபாடு என ஆழமாக சென்று பேசுகிறது. படத்தில் ராமாராவின் மனைவி, அவரது முன்னாள் காதலி என இரண்டுபேர் இருந்தாலும் நடிப்பதற்கான வாய்ப்பு முன்னாள் காதலியான மாலினிக்கே உள்ளது. சற்று உள்ளடங்கிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய நடிப்பு என்றாலும் அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். ராமாராவ் பாத்திரம், மாலினியின் கட்டாய திருமணத்தை புரிந்துகொள்ளும் விதம் முதிர்ச்சியானது.

பின்னணி இசை என்றாலே ஒருவர் கர்ண கடூரமாக அலறுவது என சாம் சிஎஸ் புரிந்துகொண்டிருக்கிறாரா என்ன? இசைக்கருவிகளை சிறப்பாக பயன்படுத்தினாலே போதுமானது என தோன்றுகிறது. காதில் அந்தளவு இரைச்சல் கேட்கிறது. சமகால இசைக்கலைஞர்கள் எல்லோருமே இசைக்கலைஞர் அனிருத்தைப் பின்பற்றுகிறார்கள் போல… படத்தில் பின்னணி இசையை வாசித்து தள்ளிவிட்டார்கள். தலையே கிறுகிறுத்து போகிறது.

ராமாராவ் உதவி கலெக்டராக உள்ளார். அவருக்கும் எம்எல்ஏவுக்கு முட்டிக்கொள்ள, எம்எல்ஏ ராமாராவை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டு அவர் வேலை செய்த அலுவலகத்திற்கு வந்து அதை தீயிட்டு கொளுத்த முயல்கிறார். அதை செய்ய அவரது தொண்டர் படை நிற்கிறது. அவர்களில் இருவரை உதவி கலெக்டரான ராமாராவே கொளுத்துகிறார். இதுதான் அறிமுக காட்சி. ஊழலுக்கு, அதிகாரத்திற்கு நாயகன் பயப்பட மாட்டார் என்று கூற வருகிறார் படத்தின் இயக்குநர்.

இதற்குப் பிறகு அங்கு தொடங்கிய தொழில்திட்டம் ஒன்றுக்கு உதவி கலெக்டர் ராமாராவ் காரணம் என பேசுகிறார்கள். அப்போதே விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்த வருகிறார்கள். இந்திய ஜப்பானிய திட்டத்திற்கு குறைந்த விலையில் நிலத்தை அரசு வாங்கிக்கொடுத்திருப்பதும், அதில் கட்சி, அரசு என இரண்டும் காசு லாபமாக பகிரப்பட்டிருப்பதும் நமக்குத் தெரிய வருகிறது. பின்னர் உதவி கலெக்டரான ராமாராவ் மீது அரசியல்வாதிகள் பதினேழு வழக்குகளை தொடுக்கிறார்கள். அதற்கென தனி விசாரணைக்குழு அமைத்தது விசாரிக்கிறார்கள். அதில் ராமாராவ் மீது எந்த குற்றமும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்போதுதான் அவர் விவசாயிகளுக்கு நிலத்திற்கு தேவையான இழப்பீட்டை பெறவே போராட்டம் நடத்தச்சொல்லி தூண்டிவிட்டிருப்பது தெரிகிறது. தான் நேர்மையாக இருப்பதோடு தான் வேலை செய்யும் அலுவலகத்தையும் மெல்ல வளைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிற சாமர்த்தியம் ராமாராவுக்கு உள்ளது.

அவரை வேறு இடத்திற்கு அரசியல்வாதிகள் திட்டமிட்டு இடமாற்றம் செய்கிறார்கள். அங்குதான் படத்திற்கான கதை தொடங்குகிறது. அது செம்மரம் கடத்தும் ஏரியா. இன்னொரு விஷயம், ராமாராவின் சொந்த ஊரும் கூட. ராமாராவ் தனது மாமனார், மாமியார், மனைவி, ஆண்பிள்ளை ஆகியோருடன் தனது பூர்விக வீட்டுக்கு சென்று வசிக்கிறார். வேலையும் செய்யத் தொடங்குகிறார். சில மாதங்களிலேயே அலுவலக வேலையை தன்னுடைய கொள்கைக்கு ஏற்ப மாற்றிவிடுகிறார். அங்குள்ள பணியாளர்களும் அதற்கேற்ப மாறிவிடுகிறார்கள்.

அப்போது அவரின் மேசைக்கு மாலினி என்ற பெண் எழுதிய சொத்து மாற்றம் பற்றிய மனு வருகிறது. கணவர் காணாமல் போய்விட்டார். இதனால், அவரை காணாமல் போய்விட்டார் என பதிவு செய்து அவரின் சொத்துக்களை தனது  பெயருக்கு மாற்றுவது தொடர்பாக மனைவி மாலினி இடையறாது மனு போட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ராமாராவ் தொடர்புடைய மனுதாரின் வீட்டுக்கே செல்கிறார். அங்கு சென்று பார்த்தால்தான் தெரிகிறது, மனுதாரர் வேறு யாருமல்ல அவரோடு பள்ளியில் படித்த முன்னாள் காதலி மாலினி என.

மாலினியின் கணவர் சரக்கு போக்குவரத்தை நடத்தி வந்திருக்கிறார். அவர், இன்னொரு நண்பரை சந்திக்கச் சென்று பிறகு காணாமல் போயிருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும்போது அந்த கிராமத்தில் இப்படி காணாமல் போனவர்கள் மட்டும் 20 பேர்களுக்கும் அதிகம் என அறிகிறார். இதுபற்றிய புகாரை காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கிறார். ஆனால் அவருக்கும் ராமாராவுக்கும் முன்பகை இருப்பதால், அதை ஏற்காமல் தட்டிக்கழிக்கிறார்.

மாலியின் கணவர் காணவில்லை என விசாரிக்கத் தொடங்கி, பார்த்தால் அந்த வழக்கு ஏராளமான இளைஞர்களை பலி கொண்டிருக்கிறது என அறிந்து அதில் தனது நண்பர்களை ஈடுபடுத்துகிறார். மாலினி அவரது முன்னாள் காதலி என ராமாராவின் மனைவி அறிந்து உடைந்துபோகிறார். தன்மேல் காதல் குறைந்துவிட்டதோ என பயப்பட்டு, வழக்கிலிருந்து கணவரை விலகுமாறு கூறுகிறார். ஆனால் ராமாராவ்  விரைவில் வழக்கு முடிநதுவிடும் என கூறுகிறார. அவரது மாமனார் தொடங்கி அப்பா வரை யாருமே அதை ஏற்பதில்லை.

படத்தில் நகைச்சுவை, காதல், நெகிழ்ச்சி என்பதெற்கெல்லாம் அதிக இடம் இல்லை. முழுக்க விசாரணை, சண்டைக்காட்சிகள் கொண்ட படம்.

செம்மரக்கடத்தல், அதிலுள்ள நுட்பங்கள், அந்த கடத்தல் வியாபாரத்தின் பின்புலம் என நிறைய விஷயங்களை படம் ஆராய்கிறது. செம்மரக்கடத்தலால் பாதிக்கப்படும் மனிதர்கள் வழக்கு தொடுக்கவோ, காணவில்லை என்று கூறி காவல்நிலையத்தில் புகார் செய்வதற்கு கூட பயப்படும் மனிதர்களாக இருக்கிறார்கள் என்பதை காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர்.

காவல்துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் காட்சிகள் படத்தில் அதிகம். காவல்துறையிலுள்ள எஸ்பியே முக்கிய குற்றவாளி, செம்மர கடத்தல்காரர்களை விசாரிக்காமல் அவர்களை கொன்று தன் மீதான விசாரணையை திசைதிருப்புகிறார் என ரீதியில் கதை செல்கிறது.  

நாயக துதி சண்டையில் வெளிப்பட்டாலும் கூட செம்மரக் கடத்தல் பற்றிய தீவிரத்தன்மை கொண்ட கதை, துல்லியமான தகவல்களுக்காக படத்தைப் பார்க்கலாம். அடுத்தடுத்த பாகங்களுக்காக காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். ராமாராவ் ஆன் டூட்டி வென்றால் மட்டுமே அடுத்த பாகங்கள் உருவாகும்.

படம் யூட்யூப்பில் தமிழில் பார்க்க கிடைக்கிறது.

கோமாளிமேடை டீம்

Initial release: 29 July 2022
Director: Sarath Mandava
Music director: Sam C. S.Ovais Singstar
Distributed by: B4U
Budget: ₹39−41 crore
Produced by: Sudhakar Cherukuri

கருத்துகள்