25 ஆண்டுகளாக மறக்கமுடியாத இனவெறி கொலை - கல்லறையை சேதப்படுத்தி வரும் வெள்ளையின இனவெறியர்கள்

 







ஜேம்ஸ் பைர்ட்

ஜேம்ஸ் பைர்டின் கல்லறை




டெக்ஸாஸில் பெருகும் இனவெறி- மறக்க முடியாத இனவெறி கொலை

1998ஆம் ஆண்டு. ஜேம்ஸ் பைர்ட் என்பவர் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு ஜாஸ்பர் கவுன்டிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று வெள்ளையினத்தவர்கள் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி ஏறியவரை அடித்து உதைத்து இரும்புச்சங்கிலியில் கைகளைக் கட்டி, பிக் அப் டிரக்கோடு பிணைத்து சாலையில் இழுத்து சென்றனர். மூன்று கி..மீ. தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட ஜேம்ஸ் பைர்டின் எலும்புகளை அடுத்தநாள் காவல்துறை வந்து பொறுக்க வேண்டியிருந்தது. உயிர் போனதோடு, அவமானகரமான இறப்பு. அவரை அடித்துக்கொன்ற வெள்ளையர்கள் வெள்ளை இனவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

விவகாரம் தேசிய அளவில் பேசப்பட வேறுவழி இல்லாமல் ஜேம்ஸ் பைர்ட்டைக் கொன்ற குற்றவாளிகளில் இருவருக்கு மரணதண்டனை, ஒருவருக்கு ஆயுள் சிறை கிடைத்தது. அவரது பெயரில் இனவெறுப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனாலும் கூட ஜேம்ஸ் பைர்ட் இன்று வரையில் நிம்மதியாக இல்லை. அவரது கல்லறை இருமுறை வெள்ளை இனவெறியர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்காக அவரது கல்லறைக்கு கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.

இன்றும் கூட டெக்ஸாஸில் நிலைமை மாறவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க இன மக்களை வெள்ளையினத்தவர்கள் முறையாக மதிப்பதில்லை. நட்போடு பார்க்க மறுக்கிறார்கள் என்ற செய்தியே நமக்கு கிடைக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள் ஆன பிறகும் கூட ஜேம்ஸ் பைர்ட்டின் வரலாறு, டெக்ஸாஸ் நகரின் வரலாற்று நூலில் இடம்பெறவில்லை.  2008ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஜாஸ்பர் கவுன்டி அருங்காட்சியகத்தில் அவரைப் பற்றிய சம்பவம் இடம்பெறவில்லை.

கடந்தகாலத்தில் நடைபெற்ற அநீதிகளை அறிந்தால்தான் அவை நிகழ்காலத்தில் நடைபெறாமல் தடுக்கலாம்  என்று கூறுவார்கள். ஆனால், உள்ளூரைச் சேர்ந்த மக்களில் இனவெறி கொண்டவர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜேம்ஸ் பைர்ட் பற்றிய எந்த செய்தியும் பள்ளி மாணவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜேம்ஸ் ஃபிளாய்ட்டிற்கு என்ன நடந்ததோ, அதே அநீதிதான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ் பைர்ட்டிற்கும் கூட நடந்தது.

2020ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஃபிளாய்ட், மின்னபோலீஸ் பகுதி காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டார். இந்த கொலை, அமெரிக்காவில் இனவெறி சார்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உலகளவில் அமெரிக்காவிற்கு பெரும் செல்வாக்கு சரிவு ஏற்பட்டது. ஜேம்ஸ் பைர்ட் சம்பவத்தை அவரது ஊரான ஜாஸ்பர் கவுன்டியில் கூட பேசுவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். அதை மறக்க நினைக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தில் இருக்கும்போது சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டால், அதை மறைப்பது எளிது. அந்த வகையில் ஜேம்ஸ் பைர்ட் பற்றிய சம்பவத்தை அதிகாரிகள், அரசு என அனைவருமே மறைக்க, வரலாற்றில் இருந்து நீக்குவதற்கு முயல்கிறார்கள். இத்தனைக்கும் ஜேம்ஸ் பைர்ட் இறந்தபோது, நகர மேயராக இருந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான  ஆர் சி ஹார்ன் என்பவர்தான். இவர்தான் அங்கு முதல் ஆப்பிரிக்க அமெரிக்க மேயர்.

ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமைகளை, அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை பேசிய பிளாக் லிவ்ஸ் மேட்டர் அமைப்பிற்கான செல்வாக்கு தற்போது குறைந்துவிட்டது என ப்யூ ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கை கூறுகிறது. கருப்பின மக்களின் பிரதிநிதிகளே, நடந்தது நடந்துவிட்டது. அடுத்த வேலையைப் பார்ப்போம் என பேசி வருகிறார்கள். உண்மையில் இது அதிர்ச்சிகரமான ஒன்று.

ஆனால் அங்கு வாழும் வெள்ளையினத்தவர்கள். நகருக்கு இனவெறி களங்கம் ஏற்படுவதை, அதனால் அங்கு வளர்ச்சி தடைபடுவதை விரும்பவில்லை. அதேசமயம்.மிகச்சிலர் மட்டும்  நடந்த விஷயம் நல்லதோ கெட்டதோ அதை மக்களுக்கு வரும் தலைமுறையினருக்கு கூற வேண்டும் என நினைக்கிறார்கள். அதேசமயம், 2021ஆம் ஆண்டு, அமெரிக்க கல்வித்துறை இனவெறி சார்ந்த விஷயங்களை பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்படி கூறவேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதே சட்டம் கல்லூரிகளுக்கும் மெல்ல நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.  ஜாஸ்பர் கவுன்டியின் புதிய மேயர், ஆண்டர்சன் லேண்ட். இவர் ‘’ஜேம்ஸ் பைர்ட்டிற்கு ஏற்பட்ட துயரத்தை அவர்களது குடும்பம் நினைவில் வைத்திருக்கட்டும். நகரமாக நாம் அதை நினைத்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. நகர்ந்து முன்னே செல்லவேண்டும்’’ என மலர்ச்சியாக பேசுகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் இவர்.

ஆனால், அங்கு வாழும் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்கள் தங்களுக்கு இன்னும் கூட சரியான வேலை , கல்வி கிடைக்காமல் இருப்பதற்கு வெள்ளையர்களே காரணம் என நினைக்கிறார்கள். மேலும், வெள்ளையர்கள், கருப்பினத்தவரை நட்பு, திருமணம் என்பதில் பொருட்படுத்துவது கூட கிடையாது. இதனால் ஜாஸ்பர் கவுன்டி என்றாலே இனவெறி தாக்குதல் அதிகம் நடக்கும் இடம் என புகழ் உள்ளது. இங்கு புதிதாக வரவிருந்த தொழில் வாய்ப்புகள் கூட வெள்ளையர்களின் இனவெறி காரணமாக தூரமாகி போய்விட்டன.

ஜேம்ஸ் பைர்ட், தனது 49 வயதில் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் வெள்ளையர்களின் இனவெறி அமைப்பான கு கிளக்ஸ் கிளானைச் சேர்ந்தவர்கள். ஜேம்ஸ் கொல்லப்பட்டு நிலைமை கலவரமானபிறகு, அந்த அமைப்பு, அவர்களுடனான தொடர்பை முழுமையாக துண்டித்துக்கொண்டது. மூன்று வெள்ளை இனவெறியர்களால் ஜேம்ஸ் பைர்ட் கொல்லப்பட்டு ஆப்பிரிக்க அமெரிக்க தேவாலயம் அருகே சாலையில் கிடந்தார். அவர் இறந்துவிட்டார். இனவெறியால் கொல்லப்பட்டார் என்றதும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் எட்டாயிரம் பேர் அங்கு திரண்டனர். கிழக்கு டெக்ஸாஸில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

சம்பவ இடத்திற்கு கு கிளக்ஸ் கிளான் அமைப்பு வந்து சாமர்த்தியமான இனவெறி பேச்சை பேசிவிட்டு சென்றது. கலவரம் தொடர்ந்து நடைபெற்றது. பிறகு, அரசு காவல்துறை அதிகாரிகள் இருநூறு பேர் வந்து, ஜாஸ்பரில் இனவெறி வெள்ளையர்களுக்கும் , பலியாடான ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் இடையே சமாதான பேச்சை நடத்தினர். தேவாலயத்தில் ஜேம்ஸ் பைர்டிற்காக 200 பேர் அஞ்சலி செய்தனர். வெள்ளையர்களின் இனவெறி தாக்குதல், அப்போது நாடெங்கும் பரபரப்பு ஏற்படுத்திய செய்தியாக மாறியிருந்தது.

ஜேம்ஸ் பைர்டின் இளைய மகள் ரெனி முல்லின்ஸ் , எனது அப்பாவைக் கொன்றவர்கள் , வன்முறையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களை சட்டம் தண்டிக்கட்டும் என கூறி பேசினார். 2001ஆம் ஆண்டு, டெக்ஸாஸைச் சேர்ந்த  சட்ட வல்லுநர்கள் ஜேம்ஸ் பைர்ட் வெறுப்பு வன்முறை சட்டம் என்பதை உருவாக்கினர். 2009ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா, மேத்யூ ஷெப்பர்ட், ஜேம்ஸ் பைர்ட் ஜூனியர் வெறுப்புவாத தடுப்பு சட்டம்  என்பதை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தி கையெழுத்திட்டார்.

ஜேம்ஸ் பைர்ட்டின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டும் அதற்கு தேவையான நிதி இல்லாத காரணத்தால் அந்த முயற்சி தடைபட்டுவிட்டது. இப்போதைக்கு அவரது கம்பி வேய்ந்த கல்லறை மட்டுமே நடந்த இனவெறி அவலத்திற்கு சாட்சியாக உள்ளது. ஜாஸ்பர் கவுன்டி, பருத்தி, மரம் உற்பத்திக்கு புகழ்பெற்றது. ஆனால், இங்கு வாழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்களில் 40 சதவீதம் அடிமையாகவே இருந்தனர் என்பது வரலாற்று உண்மை. ஜாஸ்பர் கவுன்டி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜேம்ஸ் பைர்டிற்கு இடம் மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அதில் பகுதிநேர இயக்குநராக உள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர், வரலாற்றை பாகுபாடு இல்லாமல் பார்க்கவேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கு முறையாக கூறவேண்டும் என பேசுகிறார்.

கல்வித்துறையே முறையான உத்தரவை இட்டாலும் கூட டெக்ஸாஸில் உள்ள அதிகாரிகள், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவருக்கு நேர்ந்த கொடுமைகளை வரலாற்றை பள்ளி நூலில் சேர்க்காமல் இருக்க மெனக்கெடுகிறார்கள். உண்மையில் ஒருவருக்கு நேர்ந்த இனவெறி கொடுமையை செய்தியாக மாணவர்கள் தெரிந்துகொள்வதை விட பாடத்தில் தெரிந்துகொள்வது அவர்களை மேலும் தெளிவானவர்களாக மாற்றலாம். ஜாஸ்பர் கவுன்டியில் உள்ளவர்களுக்கு தாமதமாக தெரிந்தாலும் கூட சில மாணவர்கள் அதைப் பற்றி பெற்றோர்களிடம் விவாதித்து வருகிறார்கள். இதெல்லாம் கூட விதிவிலக்காகவே நடைபெறுகிறது.

ஜாஸ்பர் கவுன்டியில் 45 சதவீதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 38 சதவீதம் வெள்ளையர்கள் இருக்கிறார்கள். மீதியுள்ளவர்களாக பிற மக்கள் உள்ளனர். நகர மேயர் அவையில் மூன்று கருப்பினத்தவர்கள், இரண்டு வெள்ளையர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் கூட இரண்டு இனத்தவர்களின் சமாதிகளுக்கு இடையில் கம்பிவேலி தடுப்பு உள்ளது. அதேசமயம், வெள்ளையர்களால் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்களின் கல்லறைகளை பாதுகாக்க அரும்பாடுபட வேண்டியதிருக்கிறது. இன்றுவரையும் ஜேம்ஸ் பைர்ட் கல்லறையில் கூட நிம்மதியாக உறங்கமுடியவில்லை என்பதே உண்மை.

இம்மானுவேல் ஃபெல்டன்

வாஷிங்டன் போஸ்ட்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்