பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி தப்பிக்கும் சமூக மனநிலை - மெல்வின் லெர்னர்
மனிதர்கள் தங்களுடைய பாதுகாப்பை அதிகம் விரும்புபவர்கள். அவர்களுடைய சொகுசு குறையாமல் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள். இதன் எதிரொலியாக, அவர்கள் எதை நம்புகிறார்கள். எதை மறுக்கிறார்கள் என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஒருவருக்கு தனது வாழ்க்கை மீது கட்டுப்பாடு இருந்தாலே, மனதில் நிம்மதியை உணர்வார். கெட்டவர்களுக்குச் செய்த தவறான செயல்களின் அடிப்படையில், தண்டனை கிடைக்கும். நல்லவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என பலரும் நம்புகிறார்கள். இப்படி நடக்கிறதோ இல்லையோ நம்புவதன் மூலம் தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்பாடுகளின் மேல் கட்டுப்பாடு உள்ளதாக ஒருவர் நம்புகிறார்.
இதை 'ஜஸ்ட் வேர்ல்ட்' எனும் கருத்தாக உளவியலாளர் மெல்வின் லெர்னர் வரையறுக்கிறார். மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ்வதாக நினைத்து, மக்களுக்கு அவர்களின் தகுதியைப் பொறுத்தே அனைத்தும் கிடைக்கும் எனும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மெல்வின், மக்கள் இப்படி தவறான நம்பிக்கையை உறுதியாக நம்புவதால், உண்மையான தகவல்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஒருவர் தனது சுயநலனுக்காக உண்மையை புறக்கணிப்பது என்று கூறலாம்.
ஒருவர் அரச பயங்கரவாதத்தால் கைதானால் கூட அவர் தவறான செயல்களை செய்திருக்கிறார். அதனால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என நினைப்பதோடு அதை பேசுபவர்களும் இதுமாதிரியான சுயநலமான மனநிலை கொண்ட ஆட்கள்தான். இப்படி பேசுவதன் வழியாக ஒருவருக்கு நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை கட்டுப்படுத்துவது போல ஒரு தோற்றம் கிடைக்கிறது. மனதில் நிம்மதி உருவாகிறது. நான் நல்லவன் எனக்கு நல்ல விஷயங்களே நடக்கும் என நம்புகிறார்கள். வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏதும் அப்படி நடப்பதில்லை. ஆனால் இப்படி நினைத்துக்கொள்வது, பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் தருகிறது. வறுமையில் சிக்கினால் அல்லது வீடு இழந்து நடுத்தெருவில் நின்றால் கூட அவர்களுக்கு அப்படி நடக்கவேண்டுமென இருக்கிறது. நடந்துவிட்டது என தாவோ தத்துவத்தை கூறுவார்கள்.
'தி பிலீஃப் இன் எ ஜஸ்ட் வேர்ல்ட்'' என்ற நூலை வில்லியம் லெர்னர் எழுதினார். அதில், பெற்றோர்கள் குழந்தைகளின் இயல்புகளோடு வாழவிடாமல் நல்ல செயல்களை செய்யவேண்டும். அப்போதுதான் நல்ல விளைவுகள், பயன்கள் கிடைக்கும் என அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆனால் உலகில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியும் நன்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டதல்ல. எனவே, இப்படியான நல்ல செயல், நல்ல முடிவு என கறுப்பு வெள்ளை சிந்தனையுடன் பிள்ளைகள் வளரும்போது ஒட்டுமொத்த சமூகமே சிக்கலாக மாறுகிறது.
வல்லுறவு, பாலியல் சீண்டல் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஏராளமான வழக்குகள் உண்டு, ஆனால் இதில் உண்மையைப் பேசினால் அரசுக்கு பிரச்னை வரும் என்பதால், அதை மடைமாற்ற சில உத்திகளை பயன்படுத்துகின்றனர். அதாவது, வல்லுறவுக்கு உட்பட்டு உயிர்பிழைத்தவர் அல்லது இறந்தவர் மீதே பழியைத் தூக்கிப் போடுவது. வல்லுறவுக்கு உள்ளான பெண் மோசமாக உடை அணிந்திருந்தார். ஃபிராக் போட்டிருந்தார். குட்டையான ஷார்ட் போட்டிருந்தார். அணிந்த ஜீன்ஸ் பேண்ட் அங்கே கிழித்து விடப்பட்டிருந்தது என பல கம்பி கட்டும் கதைகளைக் கூறுவார்கள். அவருக்கு நேர்ந்த துயருக்கு அவரின் குணநலனே, பழக்கவழக்கமே, அவர் வளர்ந்து வந்த இடம், சாதி, மதமே காரணம் என மாற்றிப பேசுவார்கள். இப்படி கருத்துகளை மாற்றி தவறான பக்கம் திருப்பிவிட்டால் பொதுமக்களின் இயல்பான சூழல், பாதுகாப்பு, சொகுசு மாறாமல் இருக்கிறது. வெளி உலகமே போரில் அழிந்தாலும் கூட மூடிய அறைக்குள் ஒருவர் நிம்மதியாக இருக்கிறேன் என நினைத்துக்கொண்டு உறங்குவது போலத்தான் இதுவும்.
ஒருவருக்கு சமூகத்தில் உள்ள சிக்கல்களால் பிரச்னை எழுகிறது என்றால் கூட அதை 'நல்ல' மக்கள் தனிப்பட்ட துரதிர்ஷ்டம் அப்படி ஆகிவிட்டது என புரிந்துகொள்வார்கள். சமூகத்தின் சீர்கேடுகளை புனிதமாக்கி வருகிறார்கள் அல்லவா? அதை ஊக்கமூட்டி ஆதரிப்பவர்கள் இவர்கள்தான். வில்லியர் லெர்னரின் ஆய்வு ஒருவகையில் சமூக நீதிக்கானது. சமூகத்தில் நடைபெறும் செயல்களுக்கான எதிர்வினை எப்படி உள்ளது, அதை மக்கள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பதை லெர்னர் விவரிக்கிறார்.
மக்கள் செய்யும் செயல்பாடு சிறியதாக, குறிப்பிட்ட உள்நோக்கம் அற்றதாக, தவறான செயலை தூண்டும்விதமாக உள்ளதா, இல்லையா, இந்த செயல்கள் சமூகத்தில் பேரிடரை உருவாக்குமா என்பதைப் பற்றி உளவிலாளர் டோரத்தி ரோவே ஆராய்ந்தார். இந்த விதமாக யோசிப்பவர்கள் விரைவில் மன அழுத்தம் கொள்கிறார்கள் என தெரியவந்தது.
மெல்வின் லெர்னர்
சமூகநீதி பற்றிய உளவியல் ஆய்வுகளைச் செய்தவர். 1975ஆம் ஆண்டு நியூயார்க் பல்கலையில் சமூக உளவியல் பாடத்தில் முனைவர் படிப்பு முடித்து பட்டம் பெற்றார். அடுத்து, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் சென்றவர் அங்கு கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை படித்து முனைவர் பட்டம் வென்றார். 1970ஆம் ஆண்டு தொடங்கி 1994 காலகட்டம் வரை கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில், சமூக உளவியல் பாடத்தை கற்பித்து வந்தார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 'சோசியல் ஜஸ்டிஸ் ரிசர்ச்' என்ற இதழை ஆசிரியராக இருந்து வழிநடத்தினார். 2008ஆம் ஆண்டு மெல்வினின் பங்களிப்புக்காக சர்வதேச நீதித்துறை ஆராய்ச்சி சங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தது.
முக்கியமான படைப்புகள்
1980 தி பிலீஃப் இன் எ ஜஸ்ட் வேர்ல்ட் எ ஃபன்டமென்டல் டெலுசன்
1981 தி ஜஸ்டிஸ் மோட்டிவ் இன் சோசியல் பிஹேவியர் - அடாப்டிங் டு டைம்ஸ் ஆஃப் ஸ்கேர்சிட்டி அண்ட் சேஞ்ச்
1996 கரன்ட் கன்செர்ன்ஸ் அபவுட் சோசியல் ஜஸ்டிஸ்
Lorain, Ohio
கருத்துகள்
கருத்துரையிடுக