வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

 









அல்காரிதம்

ஹில்கே செல்மன்

ஹாசெட் புக்ஸ்


வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார். 


இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த தகவல்களை சேமிப்பதும் நடக்கிறது. இதுபோன்ற ஏராளமான தகவல்களை நூல் ஆதாரப்பூர்வமாக கூறுகிறது. 


ஹியர்வூ,பிளம், பைமெட்ரிக்ஸ் என்ற அல்காரித நிறுவனங்கள் பெருநிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வேலைதேடுவோர்களை நேர்காணல் செய்கின்றன. வீடியோ நேர்காணலில் எதிரில் யாரும் இருக்கமாட்டார்கள். வேலைக்கு விண்ணப்பித்தவர் கேட்கப்படும் கேள்விக்கு தானே பதில் கூறவேண்டும். அதில் வென்றால் அடுத்தடுத்த அல்காரித தேர்வுகள் நடக்கும். இதற்கான முடிவுகள் பயனருக்கு நேரடியாக அளிக்கப்படுவதில்லை என்பதே முக்கிய குறை. மதிப்பெண்களை அல்காரித நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு அளிக்கின்றன. அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றனர். 


உண்மையில் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் ஒருவரின் ஆளுமையை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை பைமெட்ரிக்ஸ் என்ற அல்காரித நிறுவனம் பற்றிய அத்தியாயத்தில் ஆசிரியர் எழுப்புகிறார். இதற்கு ஆதாரமாக விளையாட்டுகளை விளையாடியவர்களின் அனுபவங்களை பகிர்கிறார். இதை வாசிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. பெரும்பாலான அமெரிக்க வங்கிகளில் ஒருவர் பணிபுரிய பைமெட்ரிக்ஸ் அல்காரிதத்தோடு மல்லுக்கட்ட வேண்டும். விளையாட்டுகளை விளையாட வேண்டும். அதை வைத்தே ஒருவர் வேலைக்கு தகுதியான திறமை கொண்டவரா என கணிக்கிறார்கள். 


இதெல்லாம் அறிவியல் ரீதியான முறை என அல்காரித நிறுவனங்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் கடுமையான மன அழுத்தம், சிக்கலை சந்திக்கிறார்கள். வேலையின் தொடக்கம் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் பணியாளரின் தொழில்வாழ்க்கை, சொந்தவாழ்க்கை என பின்தொடர்ந்து தகவல்களை கண்காணிக்கிற நிறுவனங்களும் பெருகிவருகின்றன. இப்படி பெறும் தகவல்களை அமெரிக்க நிறுவனங்கள் பணத்திற்காக விற்றுக்கொள்ளக்கூட அந்த நாட்டின் சட்டம் அனுமதிக்கிறது. எனவே, பணியாளர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க போட்டியே நிலவுகிறது. 


முழுமையாக அல்காரித கட்டுப்பாட்டில் வந்துவிட்ட நிறுவனங்களில், பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் கூட யாரும் உதவுவதில்லை. பணிவிலக்கம் என்றால் கூட மின்னஞ்சலில் சுருக்கமாக காரணம் விளக்கப்பட்டிருக்கும். மேற்படி தகவல்கள், விவரங்களை எளிதில் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. நூலில், அல்காரிதம் மூலம் ஒருவரின் வேலைவாய்ப்பு எந்தளவு சிக்கலுக்குள்ளாக மாறுகிறது. அதன் பிழைகள், பிரச்னைகள் என பலவற்றையும் நூல் பேசுகிறது. 


வேலைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவை எதிர்த்து எப்படி நிற்பது, சமாளிப்பது, ரெஸ்யூமை தயாரிப்பு என்ற பல்வேறு ஆலோசனைகள் நூலில் உள்ளன. அதெல்லாம் காலத்திற்கேற்ப ஒருவருக்கு உதவக்கூடும். எதிர்காலத்தில் அல்காரிதம் இன்னும் தீவிரமாக அனைத்து துறைகளிலும் உட்புகலாம். அதன் விளைவாக, பணியாளர்கள் திறன்களும் மாறலாம். அதற்கான எச்சரிக்கையை இந்த நூல் வழங்குகிறது. 


கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான எதிர்காலத்தை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு அல்காரிதம் நூல், தெளிவான சிந்தனைகளை வழங்குகிறது. பெருநிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொண்டு வருகின்றன என்பதையும் அறிய முடிகிறது. 

கோமாளிமேடை டீம் 



நன்றி 
கூடோ ரீடர்

கருத்துகள்