4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்க உலகிற்கு வரும் வாள் போராளி!
கிரேட் மேக் ரிடர்ன் 4000 இயர்ஸ் எகோ
காமிக்ஸ்
ரீட்மங்காபேட்.காம்
தொன்மைக்கால வீரர்களின் தலைவன் லூகாஸ் ட்ராமன். இவர் தலைமையில் ஐந்து வீரர்கள் இணைந்து வேலை செய்து தீயசக்திகளை அழிக்க முயல்கிறார்கள். ஒரு சண்டையில், டெமிகாடின் தலைவரான லார்ட் மூலம் லூகாஸ் சிறைபிடிக்கப்படுகிறார். 4 ஆயிரம் ஆண்டுகள் சிறைவாசம் கழித்து விடுவிக்கப்படுகிறார். அவரது ஆன்மா, பிளாக் குடும்ப மூன்றாவது பிள்ளையான ஃபிரே பிளாக்கின் உடலில் புகுகிறது.
ஃபிரே பிளாக், மந்திரவாதம் கற்க முயன்று அதில் தோற்று, பள்ளி நண்பர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். அவனது குடும்பத்தாரால் ஊதாசீனம் செய்யப்படுகிறான். அவன் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தபிறகே, லூகாஸின் ஆன்மா அவனது உடலில் புகுகிறது. அதற்குப் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள்தான் கதை.
இந்த காமிக்ஸ் கதையில் சுவாரசியம் என்னவென்றால், ஃபிரே பிளாக் உடலில் லூகாஸ் புகுந்தபிறகு செய்யும் நகைச்சுவைதான். பள்ளி செல்லும் சம்பவங்களில் இந்த நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஃபிரே பிளாக் தனது பெண் ஆசிரியை மீது காதல் கொள்ளும் சம்பவம். ஃபிரே பிளாக், வகுப்பில் உள்ள இசபெல்லா என்ற நன்றாக படிக்கும் பெண்ணை ஆசிரியர் செய்யும் பாலியல் சீண்டலிலிருந்து காப்பாற்றுகிறான். அதனால் அந்த பெண், அவனை பின்தொடரத் தொடங்குகிறாள். இந்த உறவு ஃபிரே பிளாக் லார்டால் வயிற்றில் காயமாகி கீழே விழும் கடைசி அத்தியாயம் வரை தொடர்கிறது. இது ஒருவகையான சொல்ல முடியாத, சொல்லத் தெரியாத காதல் என்று வைத்துக்கொள்ளலாம். கதையில் வரும் ஏராளமான பெண்கள் பிளாக்கை விரும்புகிறார்கள்.
ஃபிரே பிளாக்கிற்கு (லூகாஸ்)ஒரே லட்சியம், லார்டை தேடிக் கண்டுபிடித்து கொல்வதுதான். எனவே, முதலில் அவர் ஃபிரே பிளாக்கை அடித்து உதைத்தவர்களை பழிவாங்குகிறான். அதுவும் கூட அவனுக்கு வருத்தமாகவே இருக்கிறது. இருந்தாலும் வேறு வழியில்லை. அவர்கள், அவனுக்கு உடல் கொடுத்த ஃபிரே பிளாக்கை தற்கொலை செய்ய தூண்டினார்கள் அல்லவா?
ஃபிரே பிளாக் மங்குனியாக இருந்து மாவீரனாக மாறியதைப் பார்த்து பள்ளியில் உள்ள ட்ராமன் ரிங்க்ஸ் என்ற கிளப்பில் அவனை சேரச் சொல்லுகிறார்கள். அவனுக்கு தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி கிளப் வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதில் சின்னஞ்சிறிய மாணவர்கள் என்ன செய்வார்கள் என கருதி அதில் சேருவதில்லை. ஆனால், அந்த அமைப்பின் தலைவரான பெருவன், ஃபிரே பிளாக்கை மனதில் கவனித்து வைத்துக்கொள்கிறான்.
பெருவன், ஜூன் என்ற புகழ்பெற்ற பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறுவயதில் தற்காப்பு ஆற்றலை அடையாளம் கண்டு மேதாவி என பாராட்டப்பட்டு வளர்ந்தவன். பள்ளியில் படிப்பில் முதலிடம் பெறுவதில் அவனுக்கும் இசபெல்லாவுக்கும் போட்டி. கூடவே தற்காப்புக் கலை போட்டிகளிலும் அவன் முதலிடம் பெற்றவன். ஆனால் இவனது அமைப்பில் பிளாக் சேருவதில்லை.
தற்காப்புக்கலை பயிற்சிக்காக மலைப்பகுதி ஒன்றுக்கு இசபெல்லாவும், பிளாக்கும் செல்கிறார்கள். அப்போது கப்பலில் கொள்ளைக்காரர்கள் புகுந்து தீயசக்தி துணையுடன் மக்களை, மாணவர்களை சிறைபிடிக்கிறார்கள். அதை பெருவன் நாயகன் போலவே வந்து தடுக்கிறான். ஆனால் அவன் ஆற்றலின் லிமிட் கடக்க, ரத்தம் கக்கி தடுமாறி கீழே விழுகிறான். கொள்ளைக்காரர்கள் அவனைக் கட்டிப்போடுகிறார்கள். பிளாக்கையும், இசபெல்லாவையும் கட்டிப்போட முயல்கிறார்கள். அங்கு பிளாக் சண்டைபோட்டு அத்தனை கொள்ளையர்களையும், தீயசக்தியையும் ஒழித்துக்கட்டுகிறான். கொலை மாஸான ரத்தம் தெறிக்கும் காட்சி. இதே சம்பவத்தில் பணக்கார பிள்ளைகள் தங்களை காப்பாற்றுவதற்காக பணம் கொடுக்கிறோம் என பேரம் பேசும் காட்சி அட்டகாசம். ஏறத்தாழ உயிர் போகும் சூழலில் அவர்களின் மனம் எப்படி இருக்கிறது என நமக்கு காட்டுகிறது. அவல நகைச்சுவை காட்சி எனலாம். இச்சம்பவமே பெருவன், பிளாக் மீது நம்பிக்கை வைக்கவும் தவிர்க்கமுடியாத நண்பனாகவும் மாற்றுகிறது.
இசபெல்லாவுக்கு பிளாக், கசாஜின் என்ற தொன்மை தற்காப்புக்கலை மாஸ்டரின் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கிறான். அவனும் அதை பயில்கிறான். அவனைத் தேடி அங்கு வரும் காயம்பட்ட பீனிக்ஸ் பறவைக்கு உதவும் பிளாக், கொள்ளையர்களிடம் படுகாயமுற்று மாட்டிய அக்வாரீட் என்ற புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணையும் காப்பாற்றுகிறான். இந்த பெண் வேறு யாருமில்லை. அவளைத்தான், பெருவனுக்கு மணப்பெண்ணாக பேசி வைத்திருக்கிறார்கள்.
அக்வாரீடின் உயிரைக் காப்பாற்றியதால், அவளுக்கு பிளாக் மீது காதல் பிறக்கிறது. தான் பெருவனை மணக்கப்போகிறோம் என்பதைக் கூட அவள் பெரிதாக மனதில் கொள்வதில்லை. இசபெல்லா, பிளாக் யாரென்று மெல்ல தெரிந்துகொள்கிறாள். அப்போதும் அவளுக்கு அவன் மீது காதல் குறைவதில்லை. அவளுக்கு பிறரை குணமாக்கும் திறன் உண்டு. அதை வைத்து பிளாக்குடன் சுற்றி வந்து காயம்பட்டால் உதவுகிறாள்.
ஸ்வெய்சர் என்ற தொன்மை நண்பனின் இடத்தை சென்று பார்த்து அங்குள்ள உண்மையை அறிய பிளாக் முயல்கிறான். அதாவது, லூகாசாக இருந்தபோது அவன் காணாமல் போனபிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். அதை எப்படி என அறிய நினைக்கிறான் பிளாக். அதை வெற்றிகரமாக செய்தபிறகு அவனை டிரேக் கிங் எனும் விலங்கு தாக்கி அவனிடம் உள்ள ஆன்ம ஆற்றலை அதிகரிக்கும் மருந்தை பிடுங்க முயல்கிறது. பிளாக் அந்த அரிய மருந்தை குடித்தபிறகு தலைமுறை சாம்பல் நிறத்திலிருந்து முழுக்க வெள்ளையாக மாறுகிறது. அவனுக்கு உதவிக்கு வரும் பீனிக்ஸ் பறவையை டிரேக் கிங் அடித்து வீழ்த்துகிறது. பிளாக், அந்த விலங்கை கொல்கிறான். பிறகு டிரேக் கிங்கின் சக்தியை அப்படியே பீனிக்ஸிற்கு மடை மாற்றி பிழைக்க வைத்துவிட்டு கிளம்புகிறான்.
நண்பன் பெருவனின் வீட்டில் அவரது அப்பாவைச் சந்தித்த பிறகுதான் அவனுக்கு லார்ட் எனும் தீயசக்தியை ஒழிப்பதில் ஏராளமான மனிதர்கள் இயக்கங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. குறிப்பாக பிளாக்கின் அப்பா இசகாதான் முக்கியமான குற்றவாளி என புரிந்துகொள்கிறான். அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதை 180 அத்தியாயங்களில் தெரிந்துகொள்ளலாம்.
இதில் வரும் ரிக்கி பாத்திரம் முக்கியமானது. இந்த பாத்திரம் மூலம்தான் லார்ட் எனும் தீயசக்தியை எதிர்ப்பதில் முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வான் பிளாக். கூடுதலாக, லார்ட் சந்திப்பிற்கு பிறகுதான் கதை சற்று வேகமாக மாறுகிறது.
அபோஸ்லெஸ், இவர்களை கட்டுப்படுத்தும் டெமிகாட், இவர்களுக்கு தலைவர் லார்ட், இந்த நிலைக்கும் மேல் காட் உள்ளார். இதுபற்றி கதை நெடுக நிறைய விளக்கங்களை கூறி தலையை கிறுகிறுக்க வைக்கிறார்கள்.பிளாக் தொன்மைக் காலத்தில் ஒன்பது ஸ்டார்களைப்பெற்ற சிறந்த மந்திரவாதி. ஆனால் நவீனத்தில் அத்தனை பலசாலி இல்லை. இதற்கு காரணம். லூகாசின் ஆன்மாவோடு ஃபிரேக் பிளாக்கின் உணர்ச்சிகரமான நினைவுகளும் உள்ளன. பல்வேறு அமைப்புகளை ஒன்றாக்கி, நண்பர்களுடன் இணைந்து லார்ட்டை எப்படி வெல்ல முயன்றான் என்பதே கதை
மாஸ்டர் பெனியாங், இவான், ரிக்கி பாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. ஏராளமான பெண் பாத்திரங்கள் உண்டு. அதில் இசபெல்லா, எல்ப் ராணி ஸ்னோ, பெனியாங், எலியா, ஐரிஸ் ஆகியோரின் பாத்திரங்கள் ஈர்க்கக்கூடியதாக உள்ளன. ஆன்மிகத்தன்மை கொண்ட காமிக்ஸை படிக்கவேண்டும் என்று தோன்றினால் இக்கதையைப் படிக்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக