வசை, அவதூறு, சதி, துரோகங்களைக் கடந்து வெல்லும் தற்காப்புக் கலை தலைவனின் நெகிழ்ச்சியான கதை!

 











கிங் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் 

காமிக்ஸ்

380 அத்தியாயங்கள்..... நிறைவடையவில்லை

ரீட்மங்காபேட்.காம்


யேசென் என்பவன், ஸென்குயு இனக்குழுவைச் சேர்ந்தவன். தற்காப்புக்கலையில் சிறந்தவனாக இருப்பவனை அங்குள்ள சிலர் சதி செய்து அவன் தற்காப்புக்கலையை அழிக்கிறார்கள். மேலும் அவனை இனக்குழுவில் இருந்து நீக்குகிறார்கள். அவனது காதலிக்கு சுவாங்க்லிங் எனும் அழிவற்ற உடல் இருப்பது தெரிய வருகிறது. இதனால் அவளும் அவனை ஊதாசீனப்படுத்துகிறாள். காதலை கைவிடுகிறாள். அவனை அவமானப்படுத்த காத்திருந்தவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்கு பெற்றோரோ, உதவி செய்ய எந்த ஆதரவான சக்தியும் இல்லாத சூழ்நிலையில் காட்டு வழியே நடந்துசெல்கிறான். அப்போதுதான் விண்ணிலிருந்து விண்கல் ஒன்று காட்டில் வந்து விழுகிறது. அதிலிருந்து நெருப்பு அணையாமல் எரிகிறது. அவன் அதன் அருகில் சென்று நின்று, நெருப்பு ஜூவாலையைத் தொட்டு பார்க்க, அந்த நெருப்பு அப்படியே அவனது உடலுக்குள் புகுந்து இழந்த தற்காப்புக்கலையை மீண்டும் கற்கும் தன்மைக்கு உடலை மாற்றுகிறது. அந்த சக்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியால் மயக்குறுபவனை வயதானவர், அவரது பேரன் ஆகியோர் காப்பாற்றி வீட்டில் வைத்திருக்கின்றனர். இப்படித்தான் யேசென்னுக்கு ஒரு குடும்பம் உருவாகிறது. வயதானவரை ஹென்குயு இனக்குழுவில் உள்ள மூன்று தற்காப்பு பள்ளிகளில் ஒன்று சித்திரவதை செய்கிறது. இதற்காக மாணவர்களை அனுப்பி வைக்க, அவர்களை யேசென் அடித்து துவைக்கிறான். இந்த செய்தி பரவ நிறைய பேருக்கு யேசென் பெயர் தெரிய வருகிறது. ஹென்குயு இனக்குழுவில் அவனை மூன்று பள்ளிகளும் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன. யேசென் தானாகவே நூலகம் சென்று நூல்களை எடுத்து படித்து, தனது ஆன்ம ஆயுதமான டியான்க்குவை சமாதி நெருப்பில் வைத்து பல்வேறு வித்தைகளைக் கற்கிறான். ஆன்ம ஆற்றலை உருவாக்கும் மருந்துகளை, பழரசங்களை அவனே தயாரிக்கிறான். இதற்கு காசு வேண்டுமே. அதற்குத்தான் அவனை வம்பிழுக்கும் மூன்று தற்காப்பு பள்ளி மாணவர்களை பயன்படுத்திக் கொள்கிறான். அவர்களை சண்டையிடும் மைதானத்தி்ல் வைத்து அடித்து வீழ்த்தி அவர்களிடம் உள்ள பணம், ஆன்ம கற்கள், மருந்துகளை கைப்பற்றுகிறான். 


அவனை வம்புக்கு இழுக்கும் மாணவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களின் தற்காப்புக்கலை மேம்பட மருந்துகளை குடும்பமே வாங்கி தந்துவிடுகிறது. ஆதரவற்ற யேசென்னுக்கு அவன் மட்டுமே துணை. எனவே, அவன் தன்னை பகிரங்க சவால் விட்டு அவனை அடித்து உதைக்க கொல்ல முயன்ற ஆட்களை அடித்து உதைத்து அவர்களிடமுள்ள பொருட்களை கொள்ளையடிக்கிறான். இந்த வழியில் கிடைத்த பொருட்களை பயன்படுத்தி தற்காப்பு கலையைக் கற்கிறான். காமிக்ஸ் முழுக்க யே சென்னை அவமானப்படுத்தும் வார்த்தைகள் நிறைய உண்டு. அவனை கொலை செய்ய மூன்று தற்காப்பு பள்ளி மாணவர்களும் முயன்றுகொண்டே இருப்பார்கள். சண்டை மைதானத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. 

யேசென் சந்திக்கும் எதிரிகள் அனைவருமே கோழைகளாக, சதி செய்தால் கூட வென்றுவிடலாம் என நினைப்பவர்களாகவே இருக்கிறார்கள். 


இதில், சமூக அந்தஸ்து, பாகுபாடு என்பது குடும்ப பின்னணி இல்லாத ஆட்களை எந்தளவு பாதிக்கிறது. அவர்கள் எந்தளவுக்கு பணக்கார மாணவர்களால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதை கூறியிருக்கிறார்கள்.  ஒருவகையில் சமூகம் இன்றுகூட அப்படியேதான் தொடர்கிறது. வஞ்சகம், துரோகம் யேசென்னை தொடர்ந்தாலும் அவனை விரும்பும், காதலிக்கும் பெண்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். அவன், அவனுக்கு  தற்காப்புக்கலை கற்றுத்தரும் மாஸ்டரை விரும்புகிறான். அவரும் மனதளவில் விரும்பினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. இதற்கு யேசென்னின் சாமர்த்தியம், திறமை முக்கியமான காரணம். அவனை சுற்றியுள்ளவர்கள் வஞ்சகம், சதி செய்யும்போது வேறுவழியின்றி அவர்களை தோற்கடித்து உடைமைகளை கைப்பற்றுகிறான். இதை அவனது நண்பர்கள் மூவருக்கும் கற்றுத்தருகிறான். முதலில் புரியவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அதை ஏற்கிறார்கள். அதிலும் யேசென் ஒருவனை அடித்து துவைத்து நி்ர்வாணப்படுத்திவிட்டு அவமானப்படுத்திவிட்டு செல்லும் நுட்பம் இருக்கிறதே.... அதை ரசிக்காமல் இருக்கமுடியாது. 


சண்டையிடுவதில் தோற்று, உடைகளை பறிகொடுத்துவிட்டு மூன்று தற்காப்பு பள்ளி மாணவர்களும் எதற்கடா யேசென்னிடம் சண்டை போட்டோம் என்ற நிலைக்கு உள்ளாகிறார்கள். காட்டில் பல்வேறு பொறிகளை கடந்து மூன்று நாட்கள் சமாளித்து பிறகு  வெளியே வரும் சம்பவத்தை உதாரணமாக காட்டலாம். தற்காப்புக்கலை சண்டைகள் சற்று தீவிரமானவைதான். அதை நன்றாக வரைந்திருக்கிறார்கள். அதற்கு நிகராக யேசென், அவனுடைய குரு என இருவருக்குமான காட்சிகள் மனதை சற்று இலகுவாக்கும் தன்மையில் உள்ளன. ஜாலி, கேலியான இயல்பில் இருப்பது கதைக்கு சற்று நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. 


குருவைப் பற்றி மாணவர் தெரிந்துகொள்வது இயல்பானது. ஆனால் கதை நெடுக யேசென்னுக்கு தன்னை குரு என்று கூறிக்கொள்பவர்கள், அவனைப் பற்றி எதுவும் தெரியாமலேயே இருக்கிறார்கள். அதுவும் தற்காப்புக்கலை போட்டியில் யேசென் பல்வேறு மாணவர்களின் தற்காப்புக்கலையை அப்படியே நகல் எடுத்து செய்வதோடு, அதில் உள்ள சில பலவீனங்களையும் கூட மாற்றி மேம்படுத்துவான். அற்புதமாக காட்சி இது. அப்போது ஒட்டுமொத்த அரங்கமே பீதிக்குள்ளாகிறது. இப்போதுதான் தலைப்பை போடுகிறோம். கிங் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ்... 


ஒருகட்டத்தில் போட்டியில் ஆன்ம ஆயுதம் யேசென்னை தரையில் அழுத்தும். அப்போது அவனைக் காப்பாற்ற குரு, போட்டியை நடத்தும் தலைவரிடம் கேட்பார். ஆனால் அவர் அதை நீ மண்டியிட்டு நின்று கேட்டால் அதை ஏற்கிறேன் என்று கூறுவார். குருவும் அதை ஏற்று செய்ய முயல்வார். ஆனால் யேசென், குருவிடம் நீங்கள் யாருக்காகவும் எப்போதும் மண்டியிடக்கூடாது என்று சொல்லி ஆன்ம ஆயுதத்தை வெற்று கைகளாலேயே உடைத்து வெளியே வருவான். இந்த காட்சியில் குருவின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிடும். படிக்கிற நமக்கே இந்த இடம் நெகிழ வைத்துவிடும். ஒரு மனிதன் வயதானால் கூட கனியாமல் வஞ்சகமாக மாறி நிற்கிறான். ஆனால், இன்னொரு பக்கம் சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் கொண்டவன் தனது குரு அவமானப்படுவதை தனது திறமையால் தடுக்கிறான். 


அதுவும் வெல்லமுடியாத உடல் கொண்ட பெண்ணோடு சண்டையிடும் காட்சியைக் கூறவேண்டும். வானில் இருக்கும் கடவுள்களே யேசென் தாக்குபிடிக்கமாட்டான் என நினைப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் பத்து ரவுண்டுகள் என பந்தயம் கட்டுவார். ஆனால் போட்டி 500 ரவுண்டுகளை தாண்டி செல்லும். அதில், ஒரு இடத்தில் நீலநட்சத்திர காப்புகளை உடைக்கும் காட்சி உண்டு. அதை படிக்கும் வாசகர்கள் கூட அதிகம் கவனித்திருக்க முடியாது. 


1750 கிலோ எடை கொண்ட நீலநட்சத்திர காப்புகளை அணிந்தேதான் கடைசிகட்டங்கள் வரையிலான போட்டி முழுக்க யேசென் சண்டை போட்டிருப்பான். அவனது குரு அதை நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதை மறந்துபோய் செய்திருக்க மாட்டார். அப்பட்டை ஒருவரின் ஆன்ம சக்தியை, தற்காப்பு கலை வேகத்தை அறுபது சதவீதமாக அழுத்தி குறைத்துவிடும். இந்த சூழலில் ஒருவர் சண்டை போட்டு எதிரியை வெல்வது மிக கடினம். ஆனால் அதை யேசென் ஏற்றுக்கொள்வான். இதை இறுதியாகவே குரு அறிந்துகொண்டு திகைத்துப்போவார். அப்போது அவர் நினைப்பது இவன் நம் மாணவன்தான். ஆனால் அவனைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே.... என. 


கதை முழுக்க யேசென் கடுமையான அவனை விட சக்திவாய்ந்த எதிரிகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறான். ஜெயிக்க முடியாது, பலவீனம்,சக்தி குறைவு என எதிர்மறை வார்த்தைகள் அதிகம் அவனை நோக்கி கூறப்படுகின்றன. இதற்கெல்லாம் அவன் கூறுவது ஒன்றே ஒன்றுதான். முயற்சி செய்தால்தானே தெரியும்? அவ்வளவேதான். இறுதிப்போட்டியில் அவன் தனது குருவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு களத்திற்கு வருவான். ஏனெனில் அவன் உயிரோடு திரும்புவான், குறைந்தபட்சம் வெல்வான் என்று கூட அவனைச் சேர்ந்தவர்கள், சுற்றியுள்ள பார்வையாளர்கள் என யாருக்குமே நம்பிக்கை இருக்காது. ஆனால் யேசென் அதை சாதிப்பான். 



நல்ல மாணவர்களை குருக்கள் தேடி செல்லும் காலமிது. ஆனால் யேசென்னை குரு ஒரு போட்டியில்தான் தேர்ந்தெடுப்பார். ஆனால் பிறகுதான் தெரியும். அவன் மூலமாகத்தான் குருவே வெளித்தெரிவார். அவரின்  இனக்குழுவே வலிமையானது என்று வெளியுலகிற்கு தெரியவரும். குரு சொல்லித்தருவது கடந்து யேசென் தன்னை அணுஅணுவாக செதுக்கிக்கொள்வது படிக்கும் நமக்கு தெரியும், ஆனால் கதையில் உள்ள நிறைய பாத்திரங்களுக்கு தெரியாது. குறிப்பாக காயமடைந்த உடலை குணமாக்கும் வாள் மந்திர உத்தி.  அதைப் படித்து புரிந்துகொள்வதே பீதியாக உள்ளது. அதை போட்டிக்குப் பிறகு அறியும் ஹென்குயு இனக்குழு தலைவர்கள், வாயடைத்துப் போவார்கள். 



யேசென்னின் குணம் நேர்மறையானது. விதிகளின் படி சண்டை போடும் இயல்புடையவன். அதன் காரணமாகவே அவன் வாழ்க்கையில் ஏராளமான தந்திரமான ஆட்களை, துரோகிகளை, வஞ்சகர்களை சந்திக்கிறான். இத்தனைக்கும் ஸென்குயு மட்டுமல்ல அவன் சென்று சேரும் ஹென்குயு  இனக்குழுவிலும் அதே நிலைதான். அத்தனையையும் அவன் சமாளிக்கிறான். அவனுடைய நல்ல குணத்திற்கென சில வரங்கள் கிடைக்கின்றன. அப்படி கிடைப்பதுதான் துறவி ஒருவரின் சிக்ஸ் வீல் ஐ எனும் சக்தி. இதன் மூலம் ஒரு தற்காப்புக்கலையை எளிதாக அப்படியே நகல் எடுக்க முடியும். பார்க்கும் பொருளை ஆழமாக பார்த்து அதன் பின்னணி என்ன என்று அறியலாம். சில வரங்கள், நிறைய சாபங்கள், ஏராளமான வசைகள், அவதூறுகளோடு மாவீரனின் கதையை வாசிக்க நினைக்கிறீர்களா? யேசென்னின் கதையை நீங்கள் நம்பிக்கையாக தேர்ந்தெடுக்கலாம். ஏமாற்றமாட்டான்.


கோமாளிமேடை டீம் 










கருத்துகள்