தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

 









தனிநபர் சுதந்திரம் 


வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு. 


தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெக்கார்த்தி. இவரது செயல்பாடுகளை, காலத்தை வரலாற்று அறிஞர்கள் மெக்கார்த்தியிசம் என்று கூறுகிறார்கள். 


இந்த செயல்பாடு 1950களில் பரவலாக நடைபெற்றது. ஜனநாயகத்திற்கே நெருக்கடியான காலம் எனலாம். அதற்குப்பிறகு இருபது ஆண்டுகளில் நிலைமை மாறியது. தாராளவாத சுதந்திர சிந்தனை உருவாக குழுக்களை விட தனிப்பட்டவர்களின் கருத்துகளுக்கு அதிக மதிப்பு அளிக்கப்பட்டது. ஆய்வாளர் சாலமன் ஆச், குழுக்களின் கருத்துகளை விட அதில் உள்ள தனிநபர்களின் கருத்துகளுக்கே அதிக மதிப்பு அளித்தார் என அவர் மீது உளவியலாளர்கள் தம் விமர்சனத்தை வைத்தனர். பெரும்பான்மையினர் கொண்டுள்ள கருத்து, சிறுபான்மையினர் செயல்பாடு மீது செல்வாக்கை செலுத்துகிறது. இதை உளவியலாளர் ஆச் பொருட்படுத்தவில்லை என பல்வேறு விமர்சனங்களை கிளப்பினர். ஆச், செய்த சோதனையில் பெரும்பாலானோர் சுதந்திரமான மனநிலையைக் கொண்டவர்களாகவே இருந்தனர். இதனால்தான் சாலமன் ஆச் இன்றும் கூட மனித இனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவராக கருதப்படுகிறார். மதிக்கப்படுகிறார். 



சாலமன் ஆச்


சமூக உளவியலில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர். 1907ஆம் ஆண்டு வார்சாவில் யூதக்குடும்பத்தில் பிறந்தார். பதிமூன்றாவது வயதில் அமெரிக்காவிற்கு சென்றவர், உளவியலை பாடமாக எடுத்து படிக்கத் தொடங்கினார். முனைவர் படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது அவருக்கு சிந்தனையில் மேக்ஸ் வெர்த்தெய்மரின் செல்வாக்கு இருந்தது. 


1947ஆம் ஆண்டு, ஆச், ஸ்வார்த்மோர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அதே காலத்தில் ஆய்வுகளுக்காக உளவியலாளர் வோல்ஃப் கோஹ்லரிடம் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். எம்ஐடி, ஹார்வர்ட் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியராக சென்று வந்துகொண்டிருந்தார். எண்பத்தெட்டு வயதில் காலமானவருக்கு அமெரிக்க உளவியல் சங்கம் ஆய்வு சாதனைகளுக்காக விருதளித்துள்ளது. 


முக்கிய படைப்புகள் 


1951 எஃபக்ட்ஸ் ஆஃப் குரூப் பிரஷர் அப்ஆன் தி மாடிஃபிகேஷன் அண்ட் டிஸ்டார்ஷன் ஆஃப் ஜட்ஜ்மென்ட்


1952 சோஷியல் சைக்காலஜி 


1955 ஒப்பீனியன்ஸ் அண்ட் சோஷியல் பிரஷர் 


1956 ஸ்டடிஸ் ஆஃப் இண்டிபென்டன்ஸ் அண்ட் கன்ஃபார்மிட்டி

கருத்துகள்