விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

 












பகடையாட்டம்


தத்துவ சாகச நூல்

யுவன் சந்திரசேகர்

375 பக்கங்கள்


தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள். 


சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது. 


க்ருஷ் எதையும் பிறரிடம் சொல்லாத ஆள். ரகசியம் பேணுகிற ஆள். நானாவதி அவருக்கு சற்று மாறுபட்ட குணங்களைக் கொண்டவன். ஆனால், எத்தகைய துன்பத்திலும் நகைச்சுவையை கைவிடாத ஆள். அவனுக்கு நேர்ந்த விபத்தால் அவனது குணம் திரிந்துவிடவில்லை. அவன் தொடக்கம் முதலே அப்படித்தான் இருப்பான். தான் சந்திக்கும் பல்வேறு மனிதர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்வது க்ருஷின் வழக்கம். அதுவே க்ருஷூக்கு பெரிய பாதகமாகிறது. மீள முடியாத குற்றவுணர்ச்சியில் வீழ்த்துகிறது. 


கதையில் நேபாளம், சீனாவுக்கு இடையில் ஸோமியாட்ஸியா என்ற நாடு உள்ளது. கதையில் பெரும்பகுதி இந்த நாடு, இங்குள்ளவர்கள் கடைபிடிக்கும் பூர்வ கிரந்த கொள்கைகள், சிறுவயது மன்னன், அவனை பொம்மையாக வைத்துக்கொண்டு இயங்கும் சர்வாதிகாரி பதினேழாவது ஈனோங், அப்பாவி மக்கள், முன்னாள் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் பாங் டூ கிராமம் ஆகிய விஷயங்களைப் பற்றி நாவல் பேசுகிறது. ஒருவகையில் இந்த நாட்டின் பழக்க வழக்கங்களை இந்தியாவுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். அப்படியே அனைத்து விஷயங்களும் பொருந்தும். 


அரசு, அதன் சர்வாதிகாரம் என்ற விஷயங்களுக்காக மனிதர்களின் இயற்கையான இயல்பை முடமாக்கும் செயல்பாட்டை ஈனோங் செய்கிறார். பிரம்மச்சரியம் என்பது குறிப்பிட்ட லட்சியத்தை கொண்டது என்றாலும் அதை வலிந்து விருப்பமின்றி திணிப்பது ஒருவரின் உடல், மனம் என இரண்டையும் குலைக்க கூடியது. அதுவே ஸோமியாட்சூ என்ற இளம் வயது மன்னருக்கு நேருகிறது. இரண்டரை வயது சிறுவனாக கடத்தி வரப்பட்டு ஒருநாளுக்கு பதினான்கு மணிநேரம் பாடங்களை, மொழிகளை கற்பிக்கிறார்கள். ஆனால் இயற்கையான வளர்ச்சி குழந்தைக்கு தேவைதானே. அது அந்த சிறுவனுக்கு மறுக்கப்படுகிறது. 


அவனுக்கு விளையாடவோ, பிறரிடம் பேசிப் பழகவோ வாய்ப்பே இருப்பதில்லை. சிறுவயதில் அம்மா மீது உருவாக்கும் நேச உணர்ச்சி, சிறுவன் இளம் வயதை எட்டும் போது பாலுணர்வாக மாறுகிறது. இதை ஆசிரியர் அம்மாவின் வயது குறைந்துகொண்டே வருவதாக கூறுவது சிறந்த எடுத்துக்காட்டு. வெய்ஸ்முல்லர் இதை பகடியாக ஈனோங்கிற்கு மண்ணாசை, மன்னருக்கோ பெண்ணாசை என கிண்டல் செய்து சிரிக்கிறார். 


க்ருஷ், நானாவதி, டீ தயாரிக்கும் தோர்ஜி, இல்சுங், லோக்கி, ஈனோங், இருபத்தியாறாவது ஸோமியாட்சூ, நிருபமா, வெய்ஸ்முல்லர், லும்பா, வாங் போ என கதையில் வரும் அத்தனை பாத்திரங்களுக்கும் அவரவர் நியாயங்கள் உள்ளன. இதில் நிறையப் பேர் அரசியல் களத்தில் அதிகார வெறியில் சதுரங்க காய்களாக வெட்டப்படுகின்றனர். சிலர் அதிலும் தப்பித்து நகர்கிறார்கள். கதையின் நிறைவில் ஈனோங் கொல்லப்படுகிறார். நாலைந்து பேர் மட்டும் அங்கிருந்து காணாமல் போகிறார்கள். வெய்ஸ்முல்லர்,ஸோமியாட்சூ, நிருபமா, வாங் சுக் ஆகியோர்தான் சட்டென மறைகிறார்கள்.  அவர்கள் நால்வருக்குமே ஈனோங்கை கொல்வதற்கான காரணங்கள் உள்ளன. யார் என்பதை வாசகர்களே யோசித்து தெரிந்துகொள்ளலாம். முடிவு செய்யலாம். அதைத் தெரிந்துகொள்ளாவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிப் போகாது. 


இந்த விவகாரத்தில் பலியாடாக சிக்குபவர், மேஜர் க்ருஷ். பலரின் கதைகளை தானாக வலியச்சென்று கேட்டு தெரிந்துகொள்பவர், ஈனோங் கொல்லப்பட்டதில் இருந்து குற்றவுணர்ச்சியில் மாட்டிக்கொள்வார். ஸோமியாட்சூவை வளர்ப்புமகன்  போல  கருதிவிடுவதால் வரும் வினை. ஈனோங் இறப்பதால் அவரது பெருமைக்குரிய ராணுவ வாழ்க்கை என அவர் நினைத்த அத்தனையும் நொடியில் அழிந்துவிடும். சிறுமைக்குள்ளாகி அலைந்து திரிந்து மனம், உடல் சிதைந்து ஊர் திரும்புவார். 


உண்மையில் மனதில் நாம் ஆணவமாக அகங்காரமாக நினைத்துக்கொள்ளும் விஷயங்களின் மதிப்பு என்ன, பெருமை, புகழ், உயர்வு, இகழ்ச்சி இதற்கான பொருள் என்பது கதை நெடுக பார்க்கலாம். அவை மனிதர்களின் மனதில் மாறி மாறி ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. கதையில் சில சம்பவங்களை ஆசிரியர் விளக்கிவிடுகிறார். ஆனால் அதன் விளைவுகளை இன்னொருவரின் கதை வழியாக சட்டென கூறி விளக்குகிறார். குறிப்பாக லும்பாவுக்கு் ஈனோங்குக்கும் நடக்கும் சண்டை. அதன் வழியாக உருவாகும் குரோதம். 


வெய்ஸ்முல்லர் ஜெர்மனி நாட்டு குடிமகன். நாஜிப்படையில் வேலைசெய்த ஒரே காரணத்திற்காக  வாழ்க்கை முழுக்க புறக்கணிப்பு, வேட்டையாடப்படுதல், தண்டிக்கப்படுதல் என விரட்டப்படுகிறான். இந்தியாவுக்கு வந்த சூழல்தான் அவனுக்கு ஆசுவாசத்தை தருகிறது. அதுவும் கொஞ்ச காலம்தான். வெய்ஸ் லும்பாவை சந்தித்து உரையாடும் சம்பவம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. கதையில் சற்று சுதந்திரமான மனிதன், விதிகளை எதிர்ப்பவன் தன்போக்கில் வாழ்பவன் என்றால் அது லும்பாதான். அவன் மனதில் உள்ள கொள்கை, நேர்மைக்காகவே விரைவில் காடு நீங்கிய சில காலங்களிலேயே கொல்லப்படுகிறான். இந்த கொடூர கொலை காரணமாக ஒட்டுமொத்தமாகவே அதை செய்தவன் சார்ந்த ஒரு குடும்பம் மெல்ல சிதைந்து அழிந்துபோகிறது. ஸோமியாட்சுவில் சதியும் கொலைகளும் நிற்பதேயில்லை. அரசதிகாரம் நிற்கவிடுவதில்லை. 


 

பகடையாட்டம் இயற்கை, சுதந்திரம், அரசியல், தனிமனித இயல்புகள்,அதிகாரம்,உடல், மனம்,புகழ், பெருமை, இகழ்ச்சி என பல்வேறு விஷயங்களுக்குள் பயணிக்கிறது. இந்த பயணம் நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களைக் கொண்டுள்ளது. வாசகர்களை அதை மனமார உணர முடியும். அனுபவிக்க முடியும். 



கோமாளிமேடை டீம் 

கருத்துகள்