யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

 











ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே...


உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள். 


பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்தன்மை கூடும். பயிற்சி செய்யவும் எளிதாக இருக்கும். பயிற்சிகளின் பயனாக உடல் வலி குறைவதோடு, அதன் நிலைத்தன்மை/தாங்கும் திறன் கூடுகிறது. 


இந்தியாவின் அழிந்துபோன மொழியான சமஸ்கிருத வார்த்தைகள்தான் யோகாசனங்களுக்கு வைக்கப்பட்டன. பெயர்களை விட எந்த ஆசனங்களை எப்படி செய்வது என அறிந்தாலே போதுமானது. 


இந்துமத துறவி விவேகானந்தர், ராஜயோகா என்ற நூலை எழுதினார். அமெரிக்காவில் இந்த நூல் 1896ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்களை தழுவி எழுதப்பட்டது. ராஜயோகாவே வெளிநாட்டினர் யோகப்பயிற்சிகளை தழுவ முக்கியமான காரணம். 



2019ஆம் ஆண்டு யோகாவின் உலகளவிலான வணிகம் 37 பில்லியன் டாலர்களாகும். 2027ஆம் ஆண்டு வணிகம், 66 பில்லியனாக கூடும் என மதிப்பிடப்படுகிறது. யோகாவை விட அதை செய்யும் ஷில்பா ஷெட்டி பிரபலம். கவர்ச்சியான சினிமா, விளையாட்டு பிரபலங்கள் அணியும் யோகா பேண்டுகள் பலருக்கும் பிடித்தமானவை. 2022இல் இந்த வகை உடைகளின் விற்பனை 8 பில்லியனாக உள்ளது. யோகாபேன்டை உருவாக்கியவர், லூலூலெமன். இந்த பேண்ட்,1998ஆம்ஆண்டு கண்டறியப்பட்டது. 


யோகாதானே என எகத்தாளமாக கருதி அதை தவறாக செய்தவர்கள் அவசர சிகிச்சைக்கு போவது உறுதி. இந்த வகையில் 2001-2014 காலகட்டத்தில், 30 ஆயிரம் பேர் யோகா மூலம் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை செய்துகொண்டனர்.  தசைகிழிதல், எலும்பு இடம்மாறுதல் என்பது போன்ற காயங்களே அதிகம். பயிற்சியாளர் வைத்து செய்வது நல்லது. 


துபாயைச் சேர்ந்தவர் யாஷ் மொராதியா. வயது 22. ஐந்து ஆண்டுகளாக தினசரி மூன்று மணிநேரம் என பயிற்சி செய்து விருச்சிகாசனத்தை திறம்பட செய்தார். 29 நிமிடங்கள் அதே ஆசனத்தில் நிலையாக இருந்து கின்னஸ் சாதனை படைத்தார். யோக ஆசனங்களை சொல்லித்தரும் குருக்கள் காலத்திற்கேற்ப அதை மாற்றி வருகிறார்கள். அடிப்படையை தெரிந்துகொண்டு அதில் செய்யப்படும் மாற்றங்களை புரிந்து செய்தால் அனைத்துமே நலம்தான். 



ஸ்டெபானி கிரே

ரீடர்ஸ் டைஜெஸ்ட்

thanks -cartoonstock.com


கருத்துகள்