போலீஸ் அதிகாரியான தம்பியைக் காப்பாற்ற தன்னை பணயம் வைக்கும் மாஃபியா தலைவன்!
பாய்
தெலுங்கு
நாகார்ஜூனா, ரிச்சா, சோனு சூட்
சிறுவயதில் செய்யாத தவறுக்காக சிறை சென்று பிறகு மாஃபியா தலைவான மாறுபவன் மீண்டும் தனது குடும்பத்தைக் காக்க முயலும் கதை.
பெரிய சிக்கலான கதைக்கரு கிடையாது. வெளிநாட்டில் உள்ள பாய் எனும் நாயகன், ஆந்திராவுக்கு வருகிறான். அவனது மாஃபியா ஆட்களை போலீஸ் அதிகாரி ஒருவர் வேட்டையாடுகிறார். ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அவர்களது ஆட்களைப் பற்றி யாரோ ஒருவர் மறைமுகமாக தகவல்களை அனுப்புகிறார்கள். அந்த கறுப்பு ஆட்டைப் பிடிக்கவே பாயை மாஃபியா தலைவர் அனுப்பி வைக்கிறார். மாஃபியா குழுவில் பாய் செல்வாக்கான ஆள். தலைவருக்கு அடுத்தபடியாக பிறர் மதிக்கும்படியான திறமை கொண்டவர். அடி உதையில் மட்டுமல்ல புத்தியிலும் கூர்மை அதிகம். இதனால், மாஃபியா தலைவருக்கு தனது இரு மகன்களை விட பாயை பிடித்திருக்கிறது. அவரையே அதிகம் புகழ்கிறார்.
பாய், இந்தியா வந்து மாஃபியா குழுவில் இருந்து விலகியவர்களை தேடிப்பிடித்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் அவரைக் காதலிப்பதாக கூறுகிறாள். அவள் நர்சரி ஒன்றை நடத்தி வருகிறாள். பாய், சிலமுறை சிக்கலான நேரத்தில் அவளுக்கு உதவியிருப்பார். அவ்வளவுதான். அவளுக்கோ காதல், வெள்ளம் போல மனதில் அலைபுரள தொடங்கிவிடும். எப்படியென்று கேட்டால், பாட்டு எப்படி கேட்பது?
மாஃபியா ஆட்களை கொன்றது யார் என்று பார்த்தால், மஸ்தான் என்பவன் தான் இறந்ததாக செட்டப் செய்து போலீஸ் இன்ஃபார்மராக மாறி இருப்பான். அதை பாய் கண்டுபிடிக்கிறார். மர்ம போலீஸ் அதிகாரியைக் கொல்ல நினைக்கும்போதுதான். அது தனது தம்பி எனத் தெரிய வருகிறது. ஓகே இதுதான் கதை. இதற்குமேல் கதை எப்படி போகும் என்று உங்களுக்கே தெரியுமே?
நாகார்ஜூனா நன்றாக நடித்திருக்கிறார். ரிச்சாவுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் இல்லை. தம்பி அர்ஜூனாக வரும் பிரசன்னாவுக்கு விறைப்புடன் துப்பாக்கியை தூக்கி திரியும் பாத்திரம். பெரிதாக புத்திசாலித்தனமாக யோசிக்கும் ஒரு காட்சி கூட இல்லை. பரிதாபம்.
பாய் என்பவரை அவரை சுற்றியுள்ள நண்பர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் பெற்ற அப்பா, ஊராரின் பேச்சைக் கேட்டு அவனை வீட்டுக்கு வராமல் தடுக்கிறார். மூத்த மகனாக ஏற்காமல் விலக்குகிறார். இறுதியில் அவர் மனம் மாறினாரா என்பதே கதை.
ஆனால் பார்வையாளர்களுக்கு பாய் எப்போது தனது மாஃபியா தலைவரை போட்டு குத்தி கொல்வார், படத்தை முடித்துக்கொள்ளலாமே என்றுதான் தோன்றுகிறது. பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. பிரம்மானந்தம் கூட இந்த படத்தில் பெரிதாக காமெடி செய்யமுடியவில்லை. எம்எஸ் நாராயணா படம் தொடங்கி இறுதிவரை இருக்கிறார். ஆனால் எந்த காமெடியும் இல்லாமல் படம் நகர்கிறது. தமிழில் டப் செய்தால் மாஃபியா அண்ணா என பெயர் வைப்பார்கள். இதில் வரும் ரிச்சா, கிங் நாகார்ஜூனா காதல் காட்சி(ஐ லவ் யூ என சிறுசெடிகள் வளர்வது) அப்படியே தம்பி என்ற சீமான் இயக்கிய படத்தில் வருகிறது. படத்தில் பெரிதாக லாஜிக் எதிர்பார்க்கவேண்டியதில்லை. அதை இயக்குநர் எதிர்பார்க்கவும் இல்லை. நாகார்ஜூனாவின் கால்ஷீட் கிடைத்ததால் எடுத்த படம். வேறெதுவும் சொல்வதற்கு இல்லை.
சுமாரான அண்ணன்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக