குருவுக்குத் துரோகம் செய்த நான்கு சீடர்களைக் கொல்வதற்கு முயலும் சிறுவனின் பயணம்!
கோசு
மாங்கா காமிக்ஸ்
ரீட்மாங்காபேட்.காம்
தற்காப்புக்கலையில் வித்தகரான குருவை அவரது நான்கு சீடர்கள் துரோகம் செய்து வீழ்த்துகிறார்கள். சண்டையில் குற்றுயிரான குரு எப்படியோ உயிர்பிழைத்து குகையில் வாழ்கிறார்.ஒரு சிறுவனை தனது சீடனாக்கி, தனது தற்காப்புக்கலைகளை சொல்லித்தருகிறார். இறக்கும்போது அவர் கேட்கும் வாக்குறுதி, எனது முன்னாள் மாணவர்கள் நால்வரையும் அழிக்கவேண்டும் என்பதுதான். அதை கேயங் என்ற சீடனும் ஏற்கிறான். அவனால் நான்கு மூத்த தற்காப்புக் கலை வல்லுநர்களை வீழ்த்த முடிந்ததா என்பதே கதை.
கோசு என்றால் தற்காப்புக்கலை வல்லுநர் என்று பொருள். இந்த காமிக்ஸில் அதிக வண்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரேமுக்கு பிரேம் தகவல்கள் துல்லியமாக உள்ளன. பழுப்பு,நீலமும் கலந்தது போலவே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது காமிக்ஸ் படிக்கும்போது புதுவித அனுபவத்தைத் தருகிறது.
பொதுவாக தற்காப்புக்கலை சார்ந்த காமிக்ஸில் நாயகன் கட்டுடல் காளையாக இருப்பான். இந்த கதையில் டம்ளிங்கை விரும்பிச் சாப்பிடுகிற தொந்திச் சிறுவனாக கேயங் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அதனால் அவனோடு சண்டை போடும் யாவருமே எளிதாக ஏமாறுகிறார்கள். அவனை தோற்கடித்து விடலாம் என அசட்டு தன்னம்பிக்கை கொள்கிறார்கள். ஆனால் சண்டையிடும்போதுதான் யங்கின் வீரம் தெரிய வருகிறது.தாக்குதல்களை தாங்கி நிற்பதுதான் அவன் பலம். இத்தனைக்கும் அவனுக்கான பயிற்சி என்பதே, ஹோட்டல் விற்கும் உணவுப்பொருட்களை கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொண்டு போய் கொடுப்பதுதான். அப்படி கொண்டு போய் கொடுப்பதையே உடற்பயிற்சி போல மாற்றிவிடுகிறான். அது யாருக்குமே தெரியாது.
கதையின் முதல் காட்சியே அவல நகைச்சுவையாக இருக்கும். நான்கு பேர்களை பழிவாங்கவேண்டும் என வெறியோடு ஹோட்டலில் சபதம் செய்துகொண்டிருப்பான். அங்கு உணவு பரிமாறும் உரிமையாளர் பெண் யெரின்,''நீ சொல்லும் நான்கு பேர் உயிரோடவே இல்லையே?'' என்று சொல்லிவிடுவாள். எனவே, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஹோட்டலில் உணவை டெலிவரி செய்யும் ஆளாக வேலைக்கு சேர்ந்துவிடுகிறான்.
கிராமத்தில் உள்ள புத்த மடாலய துறவி, வயதானவர்கள், மீனவர்கள் என அனைவருக்கும் யங்கை தெரியும்.பிடிக்கும். காரணம். அவன் வேலை அப்படி. சமைத்த உணவுகளை வேகமாக கட்டிக்கொண்டு சூடு ஆறுவதற்குள் பல குன்றுகளை தாண்டிக்கொண்டுபோய் ஆர்டர் கொடுத்தவர்களிடம் ஒப்படைத்துவிடுவான். ஹோட்டலில் பிறர் சாப்பிட்டு மிச்சமானதை எடுத்து வைத்து அதை உபோக் என்ற சகோதரின் மூன்று பிள்ளைகளுக்கு கொடுக்கிறான். இதனால் அந்த குழந்தைகள் அவனது வருகையை விரும்புகிறார்கள். உபோக் கடுமையாக வேலை செய்தாலும் மூன்று பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் பசி தீர்க்குமளவுக்கு உணவு சம்பாதிக்க முடிவதில்லை. யங்தான் அந்த பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கிறான். அப்பா இல்லாதபோது அவர்களை பாதுகாக்கிறான். அதற்கு நன்றிக்கடனாக உபோக்கின் மனைவி, அந்த ஹோட்டலில் வந்து வேலை செய்கிறாள்.
ஹோட்டலில் உள்ள யெரின், அவளது வயதான அம்மா என இரண்டு பேருக்குமே யங்கின் தற்காப்புக்கலை, அவன் டோ கோங் என்ற ஹெவன்லி டெஸ்ட்ரக்ஷன் இனக்குழு குருவின் மாணவன் என்ற தகவல்கள் தெரியும். எனவே, முடிந்தளவு ஹோட்டலில் அவன் தற்காப்புக்கலையை வெளிப்படுத்தக் கூடாது என கூறி வைத்திருக்கிறார்கள். அதையும் மீறி வம்பு செய்பவர்களை,யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து யங் அடித்து உதைப்பதுண்டு. இப்படியாக அவனது பெயர் பேக்மா வேலி என்ற இனக்குழுவிற்கு எட்டுகிறது.
அவர்களது இனக்குழுவில் வேலை செய்தவன்தான் உபோக். ஒரு தகராறில் அவனை அடித்து உதைத்து குடும்பத்தை வைத்து மிரட்டி கடத்திக்கொண்டு வந்துவிடுகிறார்கள். அப்பாவைக் காணோம் என குழந்தைகள் அழ, யங் பேக்மா வேலிக்கு செல்கிறான். அங்கு எதிரே வந்து தன்னை எதிர்க்கும் அத்தனை பேர்களையும் அடித்து உதைக்கிறான். ஏறத்தாழ பாதி இனக்குழுவே அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறது. அப்போதுதான் பேக்மா வேலி இனக்குழுவிற்கு தெரிகிறது. தேவையில்லாமல் ஒருவனை சீண்டக்கூடாது என.
பேக்மாவேலி கொலை செய்வதற்கும், கடத்தல் செய்வதற்கும் புகழ் பெற்ற ஆட்கள். யங்கின் திறமையைப் பார்த்து பீதியான கா யுங் என்ற இனக்குழு தலைவி, அவனுக்கு தகவல்களைக் கொடுத்து அதற்காக காசு வாங்கிக்கொள்கிறார்கள். இப்படியாக அவன் ஏற்படுத்திய இழப்புகளை ஈடுகட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறாள். சண்டைக்காட்சி பற்றிய ஓவியங்கள் எல்லாம் அட்டகாசம். கொலைவெறியும், ரத்தக்களறியும் பீதியூட்டுகின்றன. ராக், பேப்பர், சிசர் என்ற கொள்ளைக்கூட்டத் தலைவன் பற்றிய அத்தியாயம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
கேயங்கிற்கு மனிதர்கள் மேல் பெரிதாக கோபம் கிடையாது. ஆனால் அவனது குருவிற்கு செய்துகொடுத்த சத்தியம் காரணமாக நான்கு மூத்த தற்காப்பு வல்லுநர்களை கொல்ல வேண்டியுள்ளது. கொலைகளை அவன் மனப்பூர்வமாக செய்வதில்லை. பேக்மா வேலியில் கூட அவன் உபோக்கை கடத்தி வந்தவர்களை காயப்படுத்துவானே ஒழிய கொல்வதில்லை. கொல்வது பெரிய காரியமில்லை என்றாலும் அவன் அதை செய்வதில்லை. இதைப் பார்த்து பேக்மாவேலியிலுள்ளவன், இவன் போரில் பிழைக்கமாட்டான். இரக்கம் காட்டுகிறவன் எப்படி டோ காங்கின் மாணவனாக இருக்கமுடியும் என்று கூறுகிறான்.
கேயங்கின் மனதிற்குள்ளாகவே ஒரு போராட்டம் நடக்கிறது. நாம் ஏன் வன்மத்தை, பழிவாங்கும் வெறியை கைவிட்டு அமைதியாக வாழக்கூடாது என நிறையமுறை யோசிக்கிறான். ஆனால் சில சூழல்கள் அவனை உந்தித்தள்ளுகின்றன. நிறைய கொள்ளைக்கூட்டங்களை, சைக்கோ கொலைகாரர்களை அடித்து உதைத்து கொல்கிறான். உயிர் பிழைத்தவர்களை காவல்துறையில் சரணடையுமாறு செய்கிறான். ஒருவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அவரை மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார்கள் என்றால் அவர்களை கேயங் கொல்வதில்லை. குருவுக்கு துரோகம் செய்த முன்னாள் மாணவர் மிர்துக், என்ற முகமூடி அணிந்த ஒருவரை அந்த வகையில் உயிரோடு விட்டுவிடுகிறான். அவருக்கு முன்பாக, அவர் பயிற்சியளித்து அனுப்பிய வீரன் ஒருவனுக்கு ஆறு பிள்ளைகள் உண்டு. எல்லாமே தெருவில் கிடந்த பிச்சை எடுத்து வந்த பிள்ளைகள். அவர்களுக்காகவே அந்த கொலைகாரனை அடித்து நினைவிழக்கச் செய்கிறான். கொல்வதில்லை. எதிரிகளால் வீடு நெருப்பிட்டு கொளுத்தப்பட, அவர்களைக் கொன்றுவிட்டு குழந்தைகளை அங்கிருந்து தூக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாத்துவிட்டு, கையில் சாப்பிட காசும் கொடுத்துவிட்டு செல்கிறான்.
படுகொலைகளை அலட்சியமாக செய்தவர்கள், கடைசியாக கேயங்கின் கையில் சாகும்போது நீதி, அநீதி எதுவென கேள்வி கேட்கிறார்கள். அந்த இடம் சற்று பொருத்தமில்லாததாக தோன்றுகிறது. ஒரு இடத்திக் கே யங் கூட, வலிமை இருக்குறவன் சொல்றதைத்தான் எல்லோரும் கேப்பாங்க. அவன் தான் நெனைச்சத செய்யலாம். நானும் அப்படி இருக்கணும்னு நெனைக்கிறேன் னு பேசுவான். உண்மையில் அப்படி பேசும்போது, அவன் மனதில் அவனது குரு அப்பாவி மக்களை கொன்றாரா இல்லையா என்பது பற்றி கேள்வி இருக்கும்.
கேயங்கின் பலம் எதுவென பார்த்தால் எளியோரைக் கண்டு இரங்கும் குணம்தான். அவனோடு சண்டை போடுபவர்கள் அதை பலவீனம் என்று இகழ்ந்து பேசினாலும் கூட அவன் அப்படியேதான் இருக்கிறான். தன் இயல்பில் இருக்கிறான். யாரைக் கொல்லவேண்டுமென நினைக்கிறானோ அவர்களை மட்டுமே கொல்கிறான். இதற்கு இடையில் வருபவர்களை காயப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்கிறான். கேயங்கோடு சண்டையிட்டு உயிர்பிழைத்தவர்கள் என வாள் வீரன் சோஹாங், குத்தீட்டி வீரன் கோயும் என இருவரைக் கூறலாம். இந்த இரு வீரர்களுடனான சண்டையுமே கேயங்கிற்கு நினைத்துப் பார்க்க முடியாத படிப்பினைகளைக் கற்றுத் தரும். தான் நேசிக்கும் யெரினுக்கு கூட எந்த வாக்குறுதியும் தராமல்தான் வேலை செய்து வருவான். கேயங்கை நேசிக்க சில பெண்கள் இருப்பார்கள். ஆனால் கேயங் அவர்களை பெரிதாக பொருட்படுத்த மாட்டான். கதையிலும் அதற்கான பெரிய இடம் இல்லை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக