தனிநபர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக செல்வாக்கும், அழுத்தங்களும்!
மக்கள் கருத்தே நமது கருத்து
இயக்குநர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனால் அவரது படங்களில் பிராமணர்கள் விதியை மீறாத அப்பாவிகளாக நல்லவர்களாக வருவார்கள். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் சேரியில் இருப்பவர்கள் தவறான செயல்களை செய்பவர்கள் என காட்சிரீதியாக வலுவாக மக்களது மனதில் பதிய வைக்க முயல்வார். கூடவே ஊழல் என்றால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் லஞ்சம் வாங்குபவர்களாக, நேர்மை இல்லாதவர்களாக காட்டப்படுவார்கள். மிக மேலோட்டமான அரசியல் பார்வை கொண்ட படங்கள் அவை. மக்கள் கருத்துகளின்படி அரசு இயங்குவதாக காட்டுவார்கள். இதன் பின்னணி பற்றிய உளவியல் ஆய்வைப் பார்க்கலாம்.
பொதுவாக ஒருவரின் செயல்பாடு என்பது காலத்தை கடந்ததாக இருந்தால், அதை அடையாளம் கண்டு அங்கீகரிப்பவர்கள் மிக குறைவானவர்கள்தான். தொலைநோக்காக யோசித்து புதுமை செய்பவர்களை சமூகம் எப்போதும் கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து வந்திருக்கிறது. புதிய செயலை செய்கிறோம் என்றால், அதை செய்யும்போது அதில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தனிப்பட்ட கருத்து, அதைப்பற்றிய மக்களின் பொதுக்கருத்து என நிறைய விஷயங்கள் உள்ளே வரும். முன்னர் சினிமாவைப் பார்த்தோம். இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை சம்பவத்தைப் பார்ப்போம்.
இளம்பெண் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். ஊடகங்கள் இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்துகின்றன. விளம்பர இடைவேளைக்குப் பிறகு கொலை செய்யப்பட்டதை எப்படி என்று கூறுகிறோம் என டிவி சேனல்கள் அலறுகின்றன. கொலைகள், கொள்ளைகள் நடக்கலாம். ஆனால் அவை அரசுக்கு ஆளும் உள்ளூர் நிர்வாகத்திற்கு தொந்தரவாக மாறிவிடக்கூடாது. காவல்துறையின் மீது நம்பிக்கையின்மை வந்தால் என்ன செய்வது? எனவே, விசாரணை, நீதிமன்றம் என்பதையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு துப்பாக்கியை எண்ணெய் இட்டு துடைத்து தோட்டாக்களை நிறைத்து சந்தேகப்படும் ஆட்களை, குற்றம்சாட்டப்படுபவர்களை படுகொலை செய்கிறது காவல்துறை. இதை கொலைக்கான நீதியாக மக்களும் ஊடகங்களும் கொண்டாடுகின்றனர். இந்த சம்பவம், நடந்த கொலைக்கு தீர்வு அளிக்காது. கொலைகாரன் யார், அவனின் நோக்கம் என்ன, அவனின் பின்னணி பற்றி ஆராயாமல் உடனே அவன் கொல்லப்படுவது அறமல்ல. ஆனால் மக்கள் கருத்து, ஊடகங்களின் அழுத்தம், சமூக நெருக்கடி இந்த மோசமான சூழலை உருவாக்குகின்றன. வளர்க்கின்றன.
1955ஆம் ஆண்டு சமூக உளவியலாளர் சாலமன் ஆச், 'ஒப்பீனியன் அண்ட் சோசியல் பிரஷர்' என்ற ஆய்வறிக்கையை எழுதி வெளியிட்டார். இதன்படி, மனிதர்கள் எடுக்கும் முடிவு, அக்கருத்தை ஆதரிக்கும் பெரும்பான்மையான மக்களால் எப்படி வலுவாகிறது என்பதை விளக்கியது. அதாவது, மனிதர்கள் தானியங்கியாக இயங்குவார்கள் என்ற கருத்தை தவறு என சாலமன் நிரூபிக்க நினைத்தார். சமூகம் நம்புகிற ஒரு விஷயம் அல்லது செல்வாக்கு, தனிப்பட்ட மனிதரின் கருத்து, நம்பிக்கை, முடிவு, செயல்பாடு என அனைத்தையும் பாதிக்கிறது.
குழுவாக உள்ளவர்களின் கருத்து, தனிப்பட்ட மனிதர்களின் கருத்து என இரண்டுமே சமூகம் சார்ந்த செல்வாக்கு காரணமாக பாதிக்கப்படுகிறது. செயல்படுத்தும்போது தாக்கம் பெறுகிறது என்பதே சாலமனின் ஆய்வு முடிவு.
கருத்துகள்
கருத்துரையிடுக