வெறுப்பும் கொலைவெறியும் மனதில் ஊற உருவாகிறான் ஊனக்கால் கொலைகாரன்!

 









ஃபிஸ்ட் டிமோன் ஆஃப் மவுண்ட்குவா 


மாங்கா காமிக்ஸ் 


ரீட்மாங்காபேட்.காம்.


மனம் நிறைய வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்த நாயகனின் கதை. 


கொள்ளையர்கள் ஒரு ஊரை வந்து தாக்குகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவைக் கொல்கிறார்கள். மகனையும் அடித்து உதைத்து குற்றுயிராக்கிவிட்டு அவன் தங்கையைக் கடத்திச்செல்கிறார்கள். அந்த சிறுவனை மவுன்ட் குவாவைச் சேர்ந்த கல்வியாளர் ஹியூன் சோ காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார். கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாக அவனுக்கு இடதுகால் ஊனமாக மாறுகிறது. இடதுகால் தொய்ய, வலது காலால் அடியெடுத்து வைத்து நகர்வதுதான் அவனது பாணி. அவனுக்கு சியோயங் என பெயர் வைக்கிறார். 


தற்காப்புக்கலைக்கு கால்கள் முக்கியம். அதுவே பழுதானதால், ஹியூன் சோவின் மாணவனாக இருந்தாலும் நொண்டி, அவமானச்சின்னம், நாய் என மவுன்ட் குவா இனக்குழுவில் அனைவருமே அவனை கேலி செய்கிறார்கள். உனக்கெல்லாம் தற்காப்புக்கலை எதற்கு என இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், சியோயங்கிற்கு ஒரு கிராமத்தை, அதிலும் தன் குடும்பத்தை அழித்த கொள்ளைக்காரர்களை யாரும் தண்டிக்கவில்லை என்ற ஆத்திரம், ஆதங்கம் உள்ளது. ஒரு கிராமத்தையே அழித்தவர்களை அவர்கள், சாதாரண மக்கள் என்பதற்காக மவுன்ட் குவா இனக்குழு கூட கண்டுகொள்வதில்லை. 


எனவே, மவுன்ட் குவா தற்காப்புக்கலையை கற்க நினைக்கிறான். அதற்காக, ஊனமான இடது கால், இயல்பான வலது கால் என இரண்டையும் வலுவாக்க தினசரி படிக்கட்டுகளில் ஏறிப்பழகுகிறான். அவனது குரு ஹியூன் சோவிற்கே சியோங்யங்கின் மனவலிமையைப் பார்த்து மெய்சிலிர்க்கிறது. அவர் அவனது கால்களில் உள்ள காயங்களை குணமாக்க முயல்கிறார். கால்களை அமுக்கி விடுகிறார். ஏறத்தாழ சொந்த மகன் போல பாவிக்கிறார். ஆனால், இனக்குழு தலைவர், தற்காப்புக்கலை பயிற்சியாளர் என அனைவருமே சியோங்யங்கை தேவையில்லாத சுமையாக இழிவாக பேசுகிறார்கள். நடத்துகிறார்கள். சூ எனும் அவனுக்கு அக்கா முறையிலுள்ள பெண் மட்டுமே அவனை பரிவாக நடத்துகிறாள். 


பின்னாளில், சியோயங் முழுமையாக மாறுகிறான். கண்களை முழுக்க மறைக்கும் முடி. எந்த உணர்ச்சியும் இல்லாத வெளிக்காட்டாத கண்கள், கொல்லும் வெறி கொண்ட இருப்புநிலை. அதுதான் சியோயங்கின் வெளிப்படையான தோற்றம். யாருமே அவனது கண்களைப் பார்க்க மாட்டார்கள். அப்படி பார்த்தவர்கள் அவனால் கொல்லப்படுகிறார்கள். அந்தளவு கொலைவெறியும். ரத்ததாகமும், வெறுப்பும் மனதில் ஊறுகிறது. தனக்கு எதிராக வாள் உயர்த்துபவர்களை முழுக்க அழிப்பதுதான் அவனது சக்தி. சிறந்த தற்காப்புக்கலை வல்லுநரின் மாணவராகும் தேர்வுக்கு, சியோங்யங்கின் இடதுகாலைக் காட்டி, ''ஊனக்கால் உனக்கு நீயெல்லாம் தற்காப்புக்கலை கற்றால் அது எங்களுக்கு அவமானம்'' என சொல்வது அங்குள்ள மூத்த தலைவர். 


மவுன்ட் குவா வெறும் தற்காப்புக்கலை கொடுக்கும் பள்ளி மட்டும் அல்ல. புத்தரின் தத்துவங்களைக் கற்றுத்தரும், பின்பற்றும் இடம். அங்குள்ள மாணவர்கள் அனைவருமே துறவிகள். இப்படியான இடத்தில் சியோயங்கின் உருவத்தைப் பார்த்து அவமானப்படுத்தி பேசுகிறார்கள். இழிவாக நடத்துகிறார்கள். மூத்த தலைவர்களே இப்படி பேசும்போது என்ன செய்வது? குரு ஹியூன்சோ கூட இதனால் மனமொடிந்து போகிறார். அவர் அவனுக்கென ஹெவன்லி கல்டிவேஷன் முறையைக் கூறுகிறார். அவனுக்கென தனி தற்காப்பு பயிற்சிமுறையை வடிவமைக்கிறார். தனது சீடனை அவமானப்படுத்தியவர்கள், தங்களது சுயநலனுக்காக அதை செய்கிறார்கள் என்பதை ஹியூன்சோ ஆழமாக உணர்கிறார். தனது மாணவனுக்காக மலையில் அலைந்து திரிந்து மூலிகைகளை சேகரித்து மருந்து தயாரிக்கிறார். மாத்திரைகளை தயாரித்து கொடுக்கிறார். 



அவரது மவுன்ட் குவா இனக்குழு தலைவர், ஊனமான ஒருவனுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்க கூடாது என உத்தரவிடுகிறார். எனவே, தனது நினைவில் தேடி எடுத்து ஒரு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார். அது முழுக்க கைகளை பயன்படுத்துவது. குறிப்பாக முஷ்டி. பிறகொரு நாள், டீமோனிக் கல்ட் எனும் குழுவை அழிக்க செல்லும்போது தனது சீடன் சியோயங்கை கூடவே அழைத்துச் செல்கிறார். அங்கு நேரும் எதிர்பாராத சண்டையில், சியோயங்தான் மவுன்ட் குவா வீரர்களைக் காப்பாற்றுகிறான். ஆனால் அவர்கள் இறுதியாக அந்த இடம் வெடிகுண்டால் உடைந்து நொறுங்கும்போது, அவனுக்கு துரோகம் இழைத்து கைவிட்டு விடுகிறார்கள். இதன் விளைவாக, அவன் அங்குள்ள கோல்டன் ஹெல் இடத்தில் மாட்டிக்கொள்கிறான். 


இங்குதான் சியோங்யங், டாம்ஹோ என்ற வேறு ஒரு நபராக மாறுகிறான். உடல், மனது என இரண்டையும் பக்குவப்படுத்துகிறான். வெறுப்பு, கொலைவெறி என இரண்டையும் அடிப்படையாக வைத்து, தனக்கென தனி வகையாக ஒரு தற்காப்புக்கலையை டாம் ஹோ உருவாக்குகிறான். முழுக்க அழிவு சக்தியை அடிப்படையாக கொண்டது. அதைப் பயன்படுத்தினால் கொலை விழுவது உறுதி. அதை பெரும்பாலும் தடுப்பது கடினம். தங்க நரக சிறையில் பனிரெண்டு ஆண்டுகள் அடைபட்டு கிடக்கிறான். அங்குள்ள தீயசக்தி இனக்குழுவின் தற்காப்புக்கலைகளை தன்னுடைய உடலுக்கு ஏற்றபடி மாற்றிப் பயில்கிறான். இந்தப்பகுதியை ஓவியர் சிறப்பாக வரைந்திருக்கிறார். இதில் பாதுகாப்புக்காக வண்டு, வெட்டுக்கிளியின் தாக்குதல்களை எப்படி சமாளிக்கிறது என பார்த்து அதைப்போலவே தனது தற்காப்புத் திட்டங்களை டாம் ஹோ வடிவமைத்திருப்பது அட்டகாசம். அதாவது, எதிரியின் தாக்குதல்களை தடுக்காமல் ஏற்று அப்படியே வேறு இடத்திற்கு திருப்பிவிடுவது. பிரதிபலிப்பது அல்லது எதிரொளிப்பது என கூறலாம். 


டாம்ஹோவைப் பொறுத்தவரை அவனை எதிர்ப்பவர்களை அவன் காயப்படுத்துவதில்லை. கொன்றுவிடுகிறான். கொலைவெறி மின்னும் அவனது கண்களைப் பார்த்து நண்பன் ட்ரங்கன் டிராகனே பீதியடைகிறான். எதிரிகள் பலருக்கும் பேச்சே வருவதில்லை. அதிலும் இடதுகால் தரையில் உராய, வலது காலை எடுத்து வைத்து வரும் டாம்ஹோவின் நடை எதிரிகளின் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. பதற்றத்தை கூட்டுகிறது. அப்படியே திகிலில் பயத்தில் உறைந்துவிடுகிறார்கள். அதிலும் ஒரு சண்டையில் நாம்கூங் என்ற இனக்குழுவின் ஆலோசகர், சண்டையில் தோற்றுப்போய் டாம்ஹோ கொன்றுவிடுவானோ என்று பயத்தில் சிறுநீரே கழித்துவிடுகிறார். இந்த பீதியூட்டும் அதேசமயம் அவலநகைச்சுவையான காட்சி கதையில் முக்கியமான இடம் வகிக்கிறது. முஷ்டியை உயர்த்தி நெஞ்சில் குத்தினால் உடலே பல்வேறு துண்டுகளாக பிரிந்து பறக்கிறது. இதைப் பார்த்து அவனோடு சண்டை போட வருகிறவர்களே பீதியில் உறைகிறார்கள். 


அவனது சமையல்கார தம்பி ஒருமுறை தற்காப்புக்கலையைக் கற்றுத்தர கூறுகிறான். உனக்கு வேறு ஒரு கலையைத் தேடித்தருகிறேன் என்கிறான். டாம்ஹோவிற்கு அவனது கலையின் அழிவு சக்தி தெரியும். எனவே, அதை தம்பிக்கு கற்றுக்கொடுப்பதில்லை. 


தனது குடும்பத்தை அழித்த கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடித்து கொல்கிறான். அப்போதுதான் அவனது தங்கை உயிரோடு இருப்பதை அறிகிறான். அவளை க்ரீன் ஃபாரஸ்ட் என்ற கொள்ளைக்கூட்ட தலைவர் தத்தெடுத்து வளர்க்கிறார். உண்மையை அறிந்தாலும் அவள் உயிரைக் காப்பாற்றுவதோடு டாம்ஹோ நிறுத்திக்கொள்கிறான். ஏனெனில், அவனோடு இருப்பதை விட க்ரீன் ஃபாரஸ்ட் தலைவர் தங்கையை நல்லமுறையில் பார்த்துக்கொள்வதை அடையாளம் கண்டு கொள்கிறான். அங்கு நடைபெறும் சண்டை சற்று குரூரமான ஒன்று. க்ரீன் ஃபாரஸ்ட் தலைவருக்கு எதிராக துரோகம் செய்பவர்கள் அனைவரையும் கொன்று குவிக்கிறான். இதில், டீமோனிக் கல்ட் எனும் குழுவும் உள்ளடங்கும். ஜூ சூ சூன் என்ற கொள்ளைக்கூட்ட தலைவனை, டாம்ஹோ கொல்வது குரூரமாக இருந்தாலும் சிறந்த பழிவாங்குதல் என்று கூறலாம். 


கதையில் எல்லோரும் இனக்குழு, மூத்த தலைவர்கள் என பேசும்போது டாம்ஹோ மட்டும் எனக்கு அப்படி எந்த இனக்குழுவும் இல்லை. நான் சுதந்திரமானவன் என்று கூறுகிறான். அதுவே பலரையும அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. டாம்ஹோவுக்கு தனது மாஸ்டர் ஹியூன் சோவை மட்டும பார்க்க ஆசையிருக்கும். அவ்வளவுதான். மற்றபடி, மவுன்ட் குவாவைப் பற்றி அவன் எந்த கவலையும் கொள்வதில்லை. அவன் புகழ்பெறத் தொடங்கியதும் அவனை தன்னுடைய இனக்குழுவுக்குள் வளைக்க மவுன்ட் குவா முயலும். அதற்கு டாம்ஹோ அளிக்கும் பதிலும். அதில் தொடர்புடைய வாள் வீரர் அடையும் குற்றவுணர்ச்சியும் முக்கியமானது. 


கொலைகள் எக்கச்சக்கமாக நடக்கிறது. அதேசமயம், டாம்ஹோவின் தம்பி செய்யும் சமையல், பல்வேறு உணவுப்பொருட்களையும் அழகாக வரைந்திருக்கிறார்கள். கதையில்  உருவாகும் பதற்றத்தை உணவு சமைக்கும், பரிமாறும் காட்சி மட்டுமே சற்று தணிக்கிறது. 

komalimedai team 



கருத்துகள்