2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?








 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம்


2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது. 


ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன. ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ஃப் ஹிட்லர் கூட ஜனநாயக முறைப்படியான தேர்தல் மூலமாகவே வென்று சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்தினார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.  


2024ஆம் ஆண்டு உலகின் அரைப்பகுதி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். 65 நாடுகளில் உள்ள 4.2 பில்லியன் மக்கள், தங்களுக்கான அரசைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். ''2024ஆம் ஆண்டில் ஜனநாயகம் என்பது புதிதாக உருவாகி வளர்ச்சி பெறப்போகிறது அல்லது உடையப்போகிறது '' என்று கூறுகிறார் வெரைட்டிஸ் ஆஃப் டெமாக்ரசி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஸ்டாஃபன் லிண்ட்பெர்க். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த அமைப்பு ஜனநாயகம் சார்ந்த குழப்பமான பிரச்னைகளைப் பற்றி ஆய்வு செய்துவருகிறது. 


உலகமெங்கும் நடைபெறும் தேர்தல்கள் வழியாக புதிய வலிமையான தலைவர்கள் எழுச்சி பெறுவார்கள் அல்லது ஜனநாயகத்திற்கு எதிரான கட்சிகள் வலிமை பெறும் என லிண்ட்பெர்க் கருத்து கூறியுள்ளார்.  உலகிலுள்ள நாடுகளில், அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வருகிறது. அதேசமயம், மக்களின் உரிமைகளுக்கான குடிமை அமைப்புகள் முழுமையாக முடக்கப்பட்டு மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் சர்வாதிகார தலைவர்கள், ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்துவதோடு நீதித்துறை, ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பணியாற்றும்படி மாற்றி வருகிறார்கள். 


மேலும் தங்களுடைய அதிகாரத்தை மையப்படுத்தி அதன் வழியாக அரசியலமைப்பு சட்டங்களையும் மாற்றத் துணிகிறார்கள். இப்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரி, மறுமுறை தேர்தலில் நின்றால் அந்த தேர்தல் நேர்மையாக சுதந்திரமாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதானே?


மேற்குறிப்பிட்டபடி, உலகநாடுகளில் பலவும் மாறிவிட்டன. தற்போது, 43 நாடுகளில் மட்டுமே நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 28 நாடுகளில் நேர்மையான ஜனநாயகப்பூர்வமான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. இந்த தகவலை எகனாமிஸ்ட் இதழ்(டெமாக்ரஸி இண்டெக்ஸ்) ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது. 


அமெரிக்கா, இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் தேர்தல் சர்வாதிகார சவால்களை சந்தித்தே நடைபெறவிருக்கிறது. இந்த நாடுகளில் சுதந்திரமான பேச்சு, வாக்காளர் பங்களிப்பு, தேர்தல் தன்னாட்சி ஆகியவற்றுக்கு எதிரான சக்திகள் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகத்தை  கண்காணித்து ஆண்டுதோறும் அறிக்கை அளிக்கும் தன்னார்வ அமைப்பு, ஃப்ரீடம் ஹவுஸ். இந்த அமைப்பு, பதினேழு ஆண்டாக தனது ஜனநாயக சுதந்திரம் பற்றிய அறிக்கையை  வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலுள்ள இந்தியா பற்றிய ஆய்வுத் தகவல்களை தொழிலதிபர்களின் பிடியிலுள்ள இந்திய ஊடகங்கள் தடாலடியாக மறுத்துள்ளன.


அமெரிக்கா வலிமையான ஜனநாயக நாடு. அங்கு குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் அதிபர் ட்ரம்ப். அதற்கடுத்து நடந்த தேர்தலில் தோற்றுப்போனார். ஆனால், தனது அலுவலகத்தை காலி செய்து கொடுக்கவில்லை. தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக உள்நாட்டு கலவரத்தை உருவாக்க முயன்றார். அதிபர் அலுவலகத்தை பலவந்தமாக கைப்பற்ற தன்னால் ஆனதை செய்தார். இப்படியான சூழலில் இருந்த அமெரிக்காவைப் பார்த்து உலக நாடுகளே, ''எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆய்ட்டாரு'' என கூறிய தருணம் அது. ஜனவரி ஆறாம் தேதி நடந்த உள்நாட்டுக் கலகம் அமெரிக்க வரலாற்றில் மறக்கமுடியாத களங்கமாக, கறையாக மாறிவிட்டது. 


இந்தியாவில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக நிற்கவிருக்கிறார். அவரது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பகுதியளவு சுதந்திரமே இருந்ததாக ஃப்ரீடம் ஹவுஸ் அறிக்கை கூறுகிறது. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர், அரச கூலிப்படையால் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டன. தேசதுரோகம் என்ற பெயரில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் மட்டுமல்ல இங்கிலாந்தின் பிபிசி நிறுவனம் கூட சர்வாதிகார தாக்குதலுக்கு தப்பவில்லை. பிரதமரின் ஆளுங்கட்சிக்கு பின்புலமாக இந்துத்துவ தீவிரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் இருப்பதால், சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரங்கள், தாக்குதல்கள், சொத்துகளை அழிப்பது தொடர்ந்து முடிவேயில்லாமல் நடந்தன. ராமர் கோவிலின் கட்டுமானத்தை மட்டுமே வைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறார் பிரதமர் மோடி. 


வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் எழுபத்தாறு வயதான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றிபெற்றிருக்கிறார். நாட்டில் அதிக ஆண்டுகள் பதவி வகித்த அரசியல் தலைவர் இவர்தான். உலகில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெண் தலைவரும் கூட ஹசீனாதான். இவர், தனது அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து பராமரித்து வருகிறார். அடுத்து, துனிசியா தேர்தல். மத்திய கிழக்கில் ஜனநாயகம் என்பதற்கான நம்பிக்கை மிச்சம் இருந்தது. அதை தடுத்து நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல ஆட்சியில் உள்ள அதிபர் கைஸ் சயீத் முயல்கிறார். எனவே, இங்கு ஜனநாயகம் என்பதே எதிர்காலத்தில் இருக்காது. 


அடுத்து ரஷ்யா, எதிர்க்கட்சி தலைவர்களை விஷம் வைத்துக் கொல்வது, சிறையில் அடைப்பது, அச்சுறுத்துவது என்ற வகையில் புடின் சர்வாதிகார ஆட்சியை எப்போதோ அமல்படுத்த தொடங்கிவிட்டார். இந்த முறை தேர்தலில் வென்றால், ஐந்தாம் முறையாக அதிபராகிறார். வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அவருக்கு எதிராக நிற்க யாருமே இல்லை.  உக்ரைன் நாட்டோடு போரிட்டு வருகிறார். ரஷ்ய ராணுவத்தோடு, கூலிப்படைகளை அழைத்து வந்து போரிட வைத்துக்கொண்டிருக்கிறார். மீண்டும் ஆட்சி அமைந்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டப்பூர்வமாக சிறையில் வைப்பதற்கான செயல்பாடுகளை புடின் செய்வார் என பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


சர்வதேச தேர்தல் இயக்க அமைப்பு , 145 நாடுகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகளை அளிக்கிறது. தேர்தல்களை பாதுகாப்பதன் வழியாக ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என நம்புகிறோம் என்கிறது. நடப்பு ஆண்டின் தேர்தல்களின் நம்பகத்தன்மை பற்றிக்கூட அச்சம் நிலவுகிறது. அந்தளவு சர்வாதிகார சக்திகளின் தாக்கம் உள்ளது.


 மெட்டா அமைப்பை, இந்தியாவில் வலதுசாரி மதவாத அமைப்புகள் விலைக்கு வாங்கி  வளைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் நடக்கிற ஒன்றுதான். பாப்புலிச தலைவர்கள், சர்வாதிகார மனப்பாங்கு கொண்டவர்கள் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை எந்த வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பரப்பி வருகிறார்கள். மெக்சிகோவில் அதிபர் மானுவேல் லோபெஸ், அவரை எதிர்க்கும் வேட்பாளரான கால்வெஸ் மீது ஏராளமான போலியான, ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். இங்கு, வரும் ஜூனில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 


கூகுள், மெட்டா போன்ற டெக் நிறுவனங்கள் தேர்தலின் நம்பகத்தன்மையை காப்பாற்றுவதாக கூறினாலும் அவற்றின் தரப்பை நம்ப முடியாது. அதற்கென உழைப்பும் தேவை. மென்பொருட்களும் தேவை. ஐரோப்பிய  யூனியனில் டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம், இங்கிலாந்தின் ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் ஆகியவை வெறுப்புவாத கருத்துகள், போலிச்செய்திகளை தடுக்க உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு இணையத்தில் எளிதாக கிடைப்பதால், அதை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் போலிசெய்திகள், வீடியோக்களை தடுப்பது கடினமாகி வருகிறது. 


கடந்த மே மாதம் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், போலியான குரல் பதிவு கொண்ட வீடியோவை வெளியிட்டார். இதில் சிஎன்என் டிவி தொகுப்பாளர் ஆண்டர்சன் கூப்பர் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பரில் ஸ்லோவேகியாவில் தேர்தல் நடைபெற்றது. அப்போது இணையத்தில் டீப் ஃபேக் எனும் வீடியோக்கள் வெளியாயின. இவை அனைத்துமே ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துகளை பேசின. அதாவது தேர்தலை எப்படி சிதைப்பது என பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பேசுவது போல குரல் பதிவு கருத்துகள் இருந்தன. 


தேர்தல் நடந்தால் எல்லாம் மாறிவிடுமா என்றால் இல்லைதான் அப்படி நடக்காவிட்டால் என்னாகும் என்பதற்கும் நம்மிடம் எந்த பதிலும் இல்லை. ஐரோப்பாவில் வலதுசாரி தேசியவாதம் வளர்ந்து வருகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அனைத்து தளங்களிலும் பிரச்னை வளர்ந்துவருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் போர், ரஷ்யா, உக்ரைன் போர் ஆகியவை நிற்காமல் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் நடைபெறும் தேர்தல்களால் உலகம் முன்பைப் போல இருக்காது என ஜனநாயக அமைப்புகள் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. 



யாஸ்மின் செர்ஹான், ஆஸ்தா ராஜ்வன்சி

டைம் வார இதழ் 


மூலக்கட்டுரையை தழுவியது. 


pixabay

கருத்துகள்