குப்பை என அவமானப்படுத்தப்படும் நாயகனின் எழுச்சியும், போராட்டமும்!

 









காட் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் 


ரீட்மாங்காபேட்.காம்




ஜின் ஃபேன் என்பதுதான் நாயகன் பெயர். ஆனால் அதை விட அதிகமாக ட்ராஷ் என அவரை வசைபாடும் சொல்தான் கதையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜின்னுக்கு அவரது தாய் மூலமாக சிறு பாம்பு ஒன்று ஆன்ம ஆற்றல் விலங்காக மாறுகிறது. ஆனால், அதன் சக்தி என்ன அதை எப்படி வளர்ப்பது என அவருக்கும் தெரிவதில்லை. அவரது அப்பாவுக்கும் தெரிவதில்லை. ஜின்னின் அண்ணன் முறை உறவுகள் கூட தற்காப்புக்கலை சக்தியில் தளர்ச்சியில் உள்ளவனை அடித்து உதைக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென அவனின் ஆன்மாவை அழுத்தி இன்னொரு ஆன்மா உள்ளே வருகிறது. அதுதான் நவீனகாலத்தில் உள்ள இளைஞன் ஒருவனின் ஆன்மா. விபத்தில் இறந்தவன், தொன்மைக் காலத்தில் உள்ள ஜின் ஃபேனின் உடலுக்குள் புகுகிறான். சொல்லும்போது இருக்கும் ஆச்சரியம். கதையாக படிக்கும் போது வற்றிவிடுகிறது. 


எதிர்கால உலகில் இருந்து வருபவன், தொன்மைக்காலத்தில் உள்ளவர்களை விட நவீனமாக யோசிக்கவேண்டும். திட்டமிடவேண்டும் அல்லவா? ஆனால் அப்படியான ஐடியா ஏதுமின்றி தற்காப்புக்கலை கற்று மெல்ல முன்னேறுகிறான். அதுதான் கதையை சாதாரண கதையாக மாற்றுகிறது. லின் ஃபேனின் அப்பா சிறந்த வாள் வீரர் என்பதே லின்னுக்கு மிக தாமதமாகவே தெரிய வருகிறது. கூடவே, அவரது அம்மா யாரென்பதும் ரகசியமாகவே இருக்கிறது. இதையெல்லாம் அவன் தெரிந்துகொள்ள முயல்வதே கதை. அதைநோக்கி கதை சற்று வேகமாக நகர்ந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். 


லின் ஃபேன் அவனது அப்பா ஆகியோர் குடும்ப குழுவிலிருந்து வேண்டுமென்றே நீக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு முன்னரே லின், தனது அப்பாவை கேலி செய்த அண்ணன் ஒருவரை புரட்டி எடுத்து அடித்து உதைக்கிறான். கூடவே, நூலகம் சென்று தற்காப்புக்கலை நூல்களை எடுத்து படிக்கிறான். அவனது ஆர்வத்தைப் பார்த்த நூலகர், தனது வாளை அவனுக்கு பரிசாக கொடுப்பார். பின்னாளில் அவன்தான் யுன்காய் எனும் இனக்குழுவை பாதுகாக்கவேண்டும் என்பது அவரது ஆசை. ஏன் அப்படி முடிவெடுத்தார் என்பதை அவர்கள் பின்னாளில் வெளிப்படுத்துகிறார்கள். ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது. ஒட்டுமொத்த இனக்குழுவே லின்னுக்கு எதிராக இருக்கிறது. இனக்குழு தலைவர் கூட கைவிட்டு விடுகிறார். இந்த சூழலில் லின் அவரைக் காப்பாற்ற துரோகிகளோடு, எதிரிகளோடு ஒரே சமயத்தில் போராடுகிறான். 


லின்னைப் பொறுத்தவரை யாராவது அவனை ட்ராஷ் அதாவது கையாலாகாதவன் என்று சொன்னால் அவ்வளவுதான். அடித்து உதைத்து அவர்களை சின்னாபின்னாக்கிவிடுவான். அதை அவன் தொடக்கம் முதல் கதையின் இறுதிவரை கடைபிடிக்கிறான். 


இந்த இயல்பே அவனுக்கு நிறைய பிரச்னைகளை கொண்டு வருகிறது. நிறைய பெண்கள் அவனை விரும்பவும் செய்கிறார்கள். ஃபெய், மெங், இளவரசி என அனைவருமே லின்னை விட்டுக்கொடுக்காத பாத்திரங்களாக உள்ளார்கள். லின்னின் அப்பா அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டு இனக்குழுவில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அவர் திரும்பி வருவதில்லை. உண்மையில் அவரது உண்மையான கதையை லின் மெல்ல இளவரசி சொல்ல அறிவது முக்கியமான நிகழ்ச்சி. 


யுன்காய் இனக்குழு கறைபட்ட களங்கத்திற்கு உள்ளான ஒன்றாக மாறுகிறது. அதன் இறுதியான முடிவு, லின் ஃபேனின் நேர்மையான பேச்சு மூலமே நடைபெறுகிறது. அவன், காயம்பட்ட தனது நண்பனை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து இனக்குழுவின் சவாலான குகை ஒன்றுக்குள் சென்று சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறான். நண்பனைக் காப்பாற்றிவிட்டு வெளியே வரும்போது இன்னொரு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் லின்னை கொலை செய்ய அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். 


யுன்காய் இனக்குழுவின் மூத்த ஆட்களோ, லின் ஃபேனோடு பழைய பகை இருப்பதால் அவனை பலியிட நினைக்கிறார்கள். எனவே எதையும் விசாரிக்காமல் அவனை புகார் கொடுத்த இனக்குழுவிற்கு கொடுக்க நினைக்கிறார்கள். லின் அதைப்பற்றி புரிந்துகொண்டதுமே பகிரங்கமாக இனக்குழு தலைவர் மற்றும் பிறருடன் தனது தரப்பு நியாயத்தை பேசத் தொடங்குகிறான். இதனால் எளிதாக குற்றம்சாட்டி கொன்றுவிடலாம் என்ற நினைப்பில் உள்ளவர்கள் கூட பதறிப்போகிறார்கள். 


லின்னின் சிறப்பம்சமே குற்றம் செய்தவர்களை பகிரங்கப்படுத்தி அவர்களின் குறைகளை அம்பலப்படுத்துவதுதான். கதை நெடுக நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நி்ன்றிருப்பதைப் போலவே லின் நிறைய பேசுகிறார். அவனின் பேச்சால் பலரும் உண்மையை அறிந்துகொள்வதோடு, குற்றவாளிகளையும் அடையாளம் காண்கிறார்கள். சில சமயங்களில் இதுவே மிகவும் நீண்டுவிட்டதோ, அதிகமாகிவிட்டதோ என்று கூட தோன்றுகிறது. நிறைய இடங்களில் லின்னை வேண்டுமென்றே குப்பை என வசைச்சொல்லைப் பயன்படுத்தி திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. 


லின்னின் இயல்பே, அநீதி எங்கு நடந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதில் தலையிட்டு நீதியை நிலைநாட்டுவதுதான். அதற்கான விளைவுகள் என்றெல்லாம் எதையும் நினைப்பதில்லை. யோசிப்பதில்லை. ஒருமுறை ஃபெய் கேட்பாள்.

 பின்விளைவுகளை யோசிச்சியா? 

உனக்கு ஏதாச்சும் நடந்தா, நான் பின்விளைவுகளை யோசிச்சிட்டு இருப்பனா என்பான். 


கதை நெடுக அவன் அப்படித்தான் இயங்குகிறான். முன்கோபக்காரன் என்று கூற முடியாது. அவன் என்ன செய்கிறான் என்பது அவனுக்கு தெரியும். பிறர் தன்னை வைத்து என்ன செய்கிறார்கள் என்பதையும் அறிந்தே இருப்பான். 


கதையில் முக்கியமான பாத்திரங்களை அடையாளம் கண்டுகொள்ள யுன்காய் இனக்குழுவை, மைய அரசு குழுக்கள் அழிக்கும் சம்பவம் சிறந்த சான்று. அங்குதான் லின் ஃபேன் பாத்திரம் அழுத்தமான ஒன்றாக மாறுகிறது. அவன் லட்சியம் உறுதியாகிறது. அவனோடு சண்டையிட்ட சிறந்த மாணவன் சடாரென துரோகம் செய்துவிட்டு உயிரைக் காத்துக்க்கொள்ள எதிரிகளோடு சேர்கிறான். லின்தான் அடுத்த இனக்குழு தலைவர் என உறுதி செய்துகொண்ட முன்னோர்கள், அவனைக் காக்க தங்களது உயிரை அர்ப்பணிக்கிறார்கள். கூடவே அவனுக்கு தேவையான ஆயுதங்கள், பணம் ஆகியவற்றை அடையாளம் காட்டிவிட்டு மறைகிறார்கள். 


லின் தப்பித்து காட்டில் செல்லும்போது வழி தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது அங்குள்ள மெங்க் குயின்  என்ற இளம்பெண் அவனுக்கு உதவுகிறாள். அவளைத்தான் லின் காதலிக்கிறான். அதற்கு முன்னர் ஃபெய் என்ற இளம்பெண் அவனுக்கு உதவியிருந்தாலும் அவள் மேல் அவனுக்கு காதல் வருவதில்லை. ஆனால் கதையில் அது ஒரு பெரிய விஷயமில்லை. லின் எங்கு சென்று அடிதடியில் ஈடுபட்டாலும் அங்கிருந்து அவனுக்கு ஒரு இளம்பெண் கிடைத்துவிடுகிறாள். அவர்களை கூட்டி வந்து அகாடமியில் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறான். பெண்களை காக்க வேண்டும் என்ற கரிசனமாக இதைப் பார்க்கலாம்.  


லின்னைப் பொறுத்தவரை எந்த குடும்பத்து பணக்கார வாரிசாக இருந்தாலும் சரி லொள்ளு செய்தால் மாறுகை மாறுகால் வாங்குகிறான். அதுவும், ஒரு தற்காப்புக்கலை போட்டிக்கு பதிவு செய்யப்போகும்போதே வம்பு பேசிய ஒருவரின் மணிக்கட்டை வெட்டி வீழ்த்துகிறான். அந்த போட்டியில் பங்கேற்ற ஆட்களை அங்கேயே கொல்கிறான். அதுவே போட்டியை நடத்திய அங்கு வருகை தந்த முக்கிய குடு்ம்பங்களை அதிர்ச்சியில் தள்ளுகிறது. ஏன் என்றால், லின் அப்படித்தான். அவனை, அவனது அப்பாவை அவமானப்படுத்திய யாரையும் சும்மா விடுவதில்லை. இதனால் பகை வளருகிறது. 


லின்னின் திறமையை கேள்விப்பட்ட அரச குடு்ம்பத்தின் இரண்டாவது இளவரசர் அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து தன் அருகில் வைத்துக்கொள்ள முயல்கிறார். கூடவே தன் தங்கைக்கு அவனை மணமுடித்து வைக்க முயல்கிறார். அதேசமயம் யுன்காய் இனக்குழுவை அழித்த டுவாங் லாம் என்பவர் நகரின் காவல்தலைவராக செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ளார். அவர் லின்னை அழிக்க நிறைய முயற்சிகளை செய்கிறார். இதனால் அவனைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை சிக்கலுக்குள் வீழ்கிறது. 


இரண்டாம் இளவரசர், லின்னின் வாள் வீச்சு திறமையை வைத்து தனது அதிகாரத்தை வளர்த்துக்கொள்ள நினைக்கிறார். இதற்காகத்தான் தனது தங்கையை லின்னுக்கு கல்யாணம் செய்யும்முயற்சி கூட. லின், மெங் என்ற காட்டில் வாழ்ந்து தன்னோடு உலகை சுற்றிப்பார்க்க வந்த இளவரசியை விரும்புகிறான். அவள் சில முறை அவனது உயிரையே காப்பாற்றியும் இருக்கிறாள். இவர்கள் இருவருக்குமான காதல் வாய்விட்டு சொல்வதல்ல. அது மனதால் உணர்வது. இளவரசி அப்படியல்ல. இளவரசியை மீட்க லின் தன் உயிரையே பணயம் வைப்பான். ஆனால், உள்நாட்டு அரசியல் துரோகங்களால் மனம் வெறுத்துப்போய் இளவரசியை எதிரி நாட்டு ஆட்களிடம் இருந்து அப்படியே விட்டுவிட்டு கிளம்பிவிடுவான். இளவரசிக்கு லின் தன்னை வெறுக்கிறான் என்று தெரிந்து பதற்றமாகும். ஆனால் உண்மையில் அவளுக்கு தன் அண்ணன் ஆடும் அரசியல் விளையாட்டுகள் தெரியாது. அவளை கடத்த ராணுவ தலைவர் உதவியது ஏன் என்றும் தெரியாது. அவள் தன் தற்காப்புக்கலை சக்தியை கடைசிவரையில் பயன்படுத்தவே இல்லை என்பது சந்தேகமாகவே இருக்கிறது. 


லின்னின் உருவத்தை, தனது அறையில் பல்வேறு கோணங்களில் வரைந்து வைத்துக்கொண்டிருப்பாள். டுவாரென் போரில், இளவரசியை எதிரிகள் கடத்திப்போய் பலவந்த மணம் செய்துகொள்ள முனைவார்கள். அந்த சூழலில் லின் சக்தியெல்லாம் இழந்து மெல்ல சுயநினைவுக்கு வந்துகொண்டிருப்பான். ஒரு கிராமத்து பணக்காரரின் வீட்டில் வேலைக்காரனாக வேலை செய்து வருவான். பிறகு மெல்ல சொர்க்கம், பூமி என்ற இரண்டின் தத்துவத்தை அறிந்து தனது தற்காப்புக்கலைக்கான சக்தியை திரும்ப மீட்பான். பிறகு இளவரசி மணம் செய்துகொள்ளும இடத்திற்கு சென்று எதிரிகளை வீழ்த்தி அவளை மீட்டு வருவார். இந்த முயற்சியில் எதிரியின் முன்னோர் உள்ள கல்லறையில் நிறைய தற்காப்புக்கலைகள் பரிசாக கிடைக்கும். லின்னைக் காணோம் என்று பார்க்க வருவது மெங்தான். வேறு யாருமில்லை. அவள்தான் அங்கு வந்து காத்திருப்பாள். 


லின் கதையில் வரும் பெண்கள் காட்டும் அன்பை புறக்கணிக்க மாட்டான். ஆனால் இளவரசியிடம் மட்டுமே தான் மெங்கை காதலிப்பதாக ஒத்துக்கொள்வான். இளவரசியின் அன்பையும் அவன் மறுக்கமுடியாது. இளவரசியை மணம் முடித்தால் அவனுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும். அதை வைத்து எதிரிகளை சமாளிக்கலாம். உயிர்பிழைத்திருக்கலாம். அனேகமாக மெங்க் என்ற இளம்பெண் பின்னாடியும் ஏதேனும் கதைகள் இருக்கலாம். ஏனெனில் அவளின் பின்னணி சற்று மர்மமான ஒன்று.


லின்னைப் பொறுத்தவரை எதிரிகள் அவனை என்ன செய்வதாக சொல்லி மிரட்டுகிறார்களோ அதையே அவர்களுக்கு செய்துவிடுவது வழக்கம். எனவே, அவன் யாரை அடித்து உதைக்கிறானோ அவர்கள் திரும்ப உயிர்பிழைத்து வருவது கடினம். அந்தளவு அடி பலமாக இருக்கும். லின் ஃபின் அரச குடும்பத்து சதிகளைப் பற்றி பெரிதாக கவலைப்படமாட்டான். அவனது அம்மா பற்றி இரண்டாவது இளவரசர் தெரிந்துகொண்டுதான் தனது தங்கைக்கு அவனை கணவனாக வளைக்க முயல்வார். லின்னைப் பொறுத்தவரை யுன்காய் இனக்குழுவை திரும்ப உருவாக்கமுயல்வார். இதற்காக அரசு ராணுவப் படைத்தலைவருடன் நட்பு கொள்வான். யுன்காய் இனக்குழுவில் இருந்து அடிமையாக பிடித்து வரப்பட்ட மக்களை மீண்டும் விலை கொடுத்து வாங்குவான். அவர்களுக்கு பாய் தாவோ என்ற இன்னொரு வீரன் மூலம் பயிற்சி கொடுப்பான். 


தனது மக்கள் படையை டுவாரென் போரில் ஈடுபடுத்தி களப்பயிற்சி கொடுப்பான். கூடவே, டுவாரென் படைத்தலைவர் மூலம் அறிமுகமான படைப்பிரிவு தலைவர்களிடம் யுன் என்ற நகர பொறுப்பை முழுமையாக ஒப்படைப்பான். கூடவே அந்த படைவீரர்களின் சக்தியை அதிகரிக்க ஆன்ம ஆற்றலை அதிகரிக்கும் மருந்துகளை இரு மருத்துவர்கள் மூலம் தயாரித்து வழங்குவான். படைவீரர்கள் மீது அக்கறை உள்ள ஒரு தற்காப்புக் கலைஞனைப் பார்த்த படைப்பிரிவு தலைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 


லின் ஃபேனின் திறமை என்னவென்றால், அவனிடம் வம்பு செய்பவர்களை நேருக்கு நேராக சந்தித்து சண்டைபோடும் துணிச்சல் உண்டு. அதேநேரம் அவன் பணிவாகவே நடந்துகொள்வான். யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப சமயோசிதமாக பேசுவதால், நிறைய திறமைசாலிகள் அவன் பக்கம் வந்துவிடுவார்கள். 


லின்னின் பால்ய நண்பன் அடிமையாக மாற்றப்பட்டு இருப்பான். அவனையும், அவனோடு உள்ள இன்னொரு நண்பனையும் காப்பாற்றுவான். இந்த முயற்சியில், ஒரு இனக்குழுவையே பகைக்கும் சூழல் ஏற்படும். அதைப்பற்றியெல்லாம் லின் கவலையே கொள்ளமாட்டான். இதைப்பற்றி கேட்கும்போது அவன் என்னுடைய நண்பன், அவனை அடிமையாக்கி நடத்தினால் அதை நான் பார்த்துக்கிட்டு இருக்கணுமா என்பான். பொதுவாக நிறைய இடங்களில் அநீதியைக் கண்டு பலர் கடந்து போய்விடுவார்கள். ஆனால் லின்னால் அது முடியாது. அதனால் அவனுக்கு நண்பர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு. 


தற்காப்புக்கலையில் திறமையானவனாக இருந்தாலும் கூட பணிவும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும், கருணையும், மன்னிக்கும் இயல்பும் அவனுக்கு உண்டு. அதனால், பால்ய நண்பனோடு இருந்தவனுக்கு ஆன்ம ஆற்றல் ஆயுதத்தை பரிசாக வழங்குவதோடு அவனை ராணுவத்தில் சேர்க்கவும் உதவுவான். மருந்துகளை விற்கும் வணிகருக்கு முக்கியமான மருந்து தயாரிப்பு முறைகளைக் கொடுத்து பதிலாக சில மருந்துகளை அதிகளவில் தயாரித்து தர கூறுவான். அவனது திறமையைப் பார்த்த வணிகர், அவரது நண்பரோடு சேர்ந்து லின்னோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கிவிடுவார். காரணம், அவனது புத்திசாலித்தனமும், எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளும் பார்த்துத்தான். அதை லின் அறிந்தே இருப்பான். 


ஏனெனில் புதிய இனக்குழுவை உருவாக்குபவனுக்கு பலதரப்பட்ட ஆட்களும் தேவை அல்லவா? அவர்களை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் கூட தன்னை முன்னிலைப்படுத்தாமல் மூத்த வணிகர்களும் தற்காப்பு வல்லுநர்களாக அவர்களோடு இருப்பது தனக்கு பாதுகாப்பு, வலிமை என்று பேசுவான். இந்த பெருந்தன்மையும், வெற்றியை அனைவருக்குமாக உரிமையாக்குவதும் தலைவனாக இருப்பவனுக்கு அவசியமான ஒன்று. 


லின் ஃபேனின் குறிப்பிடத்தக்க அம்சம் அவன் உண்மையை பகிரங்கமாக கூறிவிடுவான். இது அவனை ஏமாற்ற, கொல்ல நினைக்கும், சதிகாரர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கெட்டப்பெயரை உருவாக்குகிறது. பொதுவெளியில் தலைகுனிவை ஏற்படுத்துவது என்பதும், அதை எதிர்கொள்வதும் என்றுமே சவால்தான். அல்லவா?


டுவாரென் போர், யுன்காய் இனக்குழு அழிப்பு, எதிரி நாடான மோ யூவில் நடைபெறும் இளவரசி மீட்பு சண்டை, இளவரசியின் வீட்டில் நடக்கும் பாதுகாப்புவீரனுக்கும் லின்னுக்குமான சண்டை, வாள் பயிற்சி செய்யும் மலைப்பகுதியில் நடைபெறும் சண்டை என நிறைய இடங்களில் இந்த மாங்கா காமிக்ஸ் ஆச்சரியப்படுத்துகிறது. குறிப்பாக, வாள் பயிற்சி செய்யும் மலையில் லின் தனது ஆன்ம ஆற்றல் விலங்கை அடையாளம் கண்டு கொள்வது, இந்த சமயத்தில்தான் அவனது தாத்தா யார் என வாசகர்களுக்கு அடையாளம் தெரிகிறது.  

 

லின்னை காதலிக்கும் பெண்களில் யார் வியக்க வைப்பவர்கள் என்றால் மெங் குயிங்தான். காட்டில் விலங்குகளை பாசமாக நடத்திக்கொண்டிருப்பவள், லின்னோடு வெளியுலகத்தைப் பார்க்க வருகிறாள். அவர்களை இரு வீரர்கள் கிண்டல் செய்கிறார்கள். லின் அவர்களை மிரட்டுவதோடு விட்டுவிடுகிறான்.ஆனால் மெங் எளிமையாக கூறுகிறாள். எதற்கு அவங்களை உயிரோடு விட்ட? கொன்னுடலாமே?  இந்த உரையாடலில் லின் மட்டுமல்ல நாமுமே முதுகில் ஒரு சில்லிடலை உணர்கிறோம். ஆகா, எப்படியான பெண் இவள் என அப்போதுதான் யோசிக்கிறோம். மெங் குயின், லின் நல்லவன் என்று உணர்ந்தபிறகு அவனை அவள்தான் பாதுகாக்கிறாள். லின்னை அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் அடிக்க முயல்கிறாள். அவளது அப்பா அவளுக்காக சண்டை வருகிறாள் என்ற தெரிந்ததும் மெங்க் குயின் சண்டை போட முன்னால் வருகிறாள். சண்டையில்  முழு உணவகமே இடிந்து விழுகிறது.  


மாங்கா காமிக்ஸ் இன்னும் முடியவில்லை. இனிவரும் அத்தியாயங்களில் இரண்டாவது இளவரசனின் சதித்திட்டங்கள், இளவரசியின் காதல், தற்காப்புக்கலை போட்டியில் அகாடமி சார்பில் லின் எப்படி கலந்துகொள்கிறான், அவனது தாத்தா சார்ந்த இனக்குழுவின் செயல்கள், லின்னின் அம்மா யார், அவனது அப்பா எங்கிருக்கிறார் என்பதற்கான விடை கிடைக்கும் என நம்பலாம். பழிக்குப்பழி கதைதான். அதில் உளவியல் அம்சங்களை சேர்த்து வலுவாக்கியிருக்கிறார்கள். இதில் வரும் எதிர்மறை பாத்திரங்கள் அனைவருமே கோழையான ஈனத்தனமான தந்திரங்களை கையாள்கிறார்கள். அவர்களை அனைவரையுமே லின், சக்தி கைவந்தபிறகு அடித்து நொறுக்குகிறான். அழிக்கிறான். கூனிக்குறுக வைக்கிறான். சிறந்த பழிவாங்கல் கதை. மனிதர்களின் இருட்டான பக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்