சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி
எக்ஸ்ட்ரா ஆர்டினரி
தெலுங்கு
நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத்
சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில் நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்?
தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.
இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை. கூட்டத்தில் ஒருவனாகவே நின்று வாழ்க்கை போகிறது.
இந்த சூழ்நிலையில், நாயகனுக்கு தொழில்நிறுவனம் நடத்தும் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. அதை வைத்து பத்தே நிமிடங்களில் அவரின் நிறுவனத்திற்கு சிஇஓ ஆகிவிடுகிறார். நாயகியை கல்யாணம் செய்து வைத்து மருமகன் ஆக்கிவிடலாம் என்று கூட நாயகியின் லூசு குடும்பம் முடிவுக்கு வருகிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட். சினிமா உதவி இயக்குநர் படம் எடுக்க நினைக்கிறார். அக்கதைக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்டான நாயகன்தான் ஹீரோ என்று கதை கூறுகிறார். அதைக்கேட்டு, நாயகன், மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருமானம் வரும் வேலையை விட்டுவிட்டு நடிக்க ரெடியாகிறார். ஆனால் அந்த இயக்குநரோ, வேறு ஒரு நாயகனை வைத்து கதையை எடுக்க முயல்கிறார். நாயகனை பணிக்குமால யெதவா என்று கூறி வெளியே தள்ளிவிடுகிறார். ஆனால் நாயகன், தான் நடிக்கவேண்டிய கதைக்குள் ஆழமாக உள்ளே போய்விடுகிறார். அந்த சைத்தான் எனும் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். மெத்தேட் ஆக்டிங்...
திரைக்கதையில் உள்ள காட்சிகளை தினசரி வாழ்க்கையில் அப்படியே நடிக்க ஆரம்பிக்கிறார். அந்த சினிமா கதையில் உள்ள பாத்திரங்கள் நிஜமாகவே உலகில் வாழ்ந்து வருகின்றன. எது நிஜம், எது பொய் என நாயகன் உணர்ந்தாரா இல்லையா என்பதே கதை.
இந்த படத்தில் கடுமையாக உழைத்திருப்பது யார் என்றால் அது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். படத்தின் காட்சிகள் தாறுமாறாக சென்றாலும், பின்னணி இசை, பாடல்கள் என அவரது முயற்சியை மனம் தளராமல் செய்துகொண்டே இருக்கிறார். கர்த்தர் உங்களை காப்பாற்றுவார் ஜெயராஜ். ஆனால் படத்தை காப்பாற்றமுடியாது.
நாயகனை அவனது குடும்பத்தில், உறவு வட்டாரத்தில், சினிமாவில் பின்புறமாக நிற்க வைத்து அவமானப்படுத்துகிறார்கள். அதே சினிமா கதையை எடுத்துக்கொண்டு நிஜவாழ்க்கையில் ஒரு கிராமத்தைக் காப்பாற்றும் ஹீரோவாக நாயகன் மாறுகிறான். ஜூனியர் ஆர்டிஸ்ட் நாயகனாக மாறி சாதனை படைக்கிறான். இவனுக்கு எதிராக நீரோ என்ற நபரே வில்லன்.
இதில் வில்லன் என்பவனுக்கு பெரிய தனித்துவம் ஏதும் கிடையாது. கிராமத்தை வளைத்து அதில் தொழில் தொடங்கும் கார்ப்பரேட் வில்லன். மற்றபடி நாயகனை மிரட்ட அவனது குடும்பத்தை கடத்தும் எண்பது கால வில்லன் கிடையாது என்பதே ஆறுதல். தனது பெருமைக்காக நாயகனை வளர்த்துவிட்டு பிறகு அவனை அழிக்க நினைக்கும் வினோதமான ஆள்.
ஶ்ரீலீலாவுக்கென தனியாக சும்மா பேச்சு, மட்ட ஊறுகாய் யூட்யூப் சேனல்களில் கிரிஞ்ச் குயின் என தனி வீடியோ ரெடி செய்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அம்மணி நடிக்கும் படங்கள் நாசமாக போவதற்கு அவர் முக்கிய காரணமில்லை. ஆனாலும் உருப்படாத படங்களில் அவர் தோன்றுவது தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா? இந்தப்படத்தில் வரும் ஆபீஸ் காட்சிகளும், ஆதிகேசவா படத்தில் வரும் ஆபீஸ் காட்சிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. பொறுமையை சோதிக்கும் காட்சிகள். ராஜசேகர் ஐஜியாக வருகிறார். அவருக்கும் உருப்படியான பாத்திரம் இல்லை. இருந்தாலும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
எக்ஸ்ட்ரா ஆர்டினரி படத்தின் திரைக்கதை இயக்குநருக்கும் எடிட்டருக்கும் தவிர வேறு யாருக்கும் புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படியான ஒரு களேபர கதம்பக்கோவை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக