அண்ணன் பெயரில் தம்பி ஆள்மாறாட்டம் செய்து குழந்தை தொழிலாளர்களைக் காப்பாற்றும் அரிய கதை! ஆதிகேசவா
ஆதிகேசவா
2023
தெலுங்கு
வைஷ்னவ் தேஜ், ஶ்ரீலீலா
ஒரு பாசமான அம்மா. வேலைக்கு செல்வதை விரும்பாத மகன். அவனை திட்டும் அரசு வேலையில் உள்ள அப்பா. லூசு ஹீரோயின். கண்ணில் பட்டவர்களை வெட்டிக்கொல்லும் வில்லன் என எழுபது எண்பதுகளில் பார்த்த அதே கதைதான்.
இந்த படத்தில் விசேஷம். மேற்சொன்ன அனைத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு நடிக்கும் ஆட்களை மட்டும் புதிதாக போட்டிருக்கிறார்கள். அநியாயத்திற்கு ஜோஜூ ஜார்ஜை கூட்டி வந்து வீணடித்திருக்கிறார்கள். நல்ல நடிகர். இறுதிக்காட்சியில் அவரது தலையை அப்படியே வெட்டி தனியாக எடுக்கிறார்கள். உண்மையில் அங்கு வெட்டப்பட்டது அவர் அல்ல. வைஷ்ணவின் படத்தை பார்க்க வந்த நாம்தான்.
படத்திற்கு ஜி வி பிரகாஷ் மட்டும்தான் சற்றே ஆறுதல் அளிக்கிறார். அடிதடி வன்முறையில் அதிக ஆர்வம் காட்டுகிற இயக்குநர். அடிபம்பு, ட்ரில்லர் மெஷின், சுத்தி, கற்களை அள்ளிப்போடும் கருவி, கடப்பாரை என என்னென்னமோ பொருட்களை எல்லாம் வைத்து வில்லனின் ஆட்களை நாயகன் கொன்று போடுகிறார். பார்க்கவே பீதியாகிறது. பூவையும் பொண்ணுகளையும் அவனுக்கு கண்ணுல காட்டுங்கடா ரொம்ப வன்முறையா இருக்கான் என குருஜி திரிவிக்ரம் எழுதிய வசனம் காதில் கேட்கிறது.
ஆகடு படத்தில் சீனுவைட்லா ஒரு காட்சியை வைத்திருப்பார். அதுதான் இறுதி சண்டைக்கு முன்னதான நகைச்சுவைக் காட்சி. பிரம்மானந்தத்தை எப்படி கொல்லலாம் என தனது அடியாட்களிடம் கேட்பார் சோனு சூட். அவர்களில் ஒருவன் ஆர்ஜிவி படத்தில் ரகரகமாக கொலை செய்யும் சீன் உண்டு. அதேபோல இவனையும் கொல்லலாம் என்பான். சோனுசூட், அத்தனையையும் லிஸ்ட் போடு. அதில் இருந்து செலக்ட் பண்ணி எடுத்து, ட்ரை பண்ணுவோம். அதை 4கேயில் வீடியோ எடுத்து யூட்யூபில் போடலாம் என்பார். அங்கு காமெடியாக இருக்கும் காட்சி அப்படியே ஆதிகேசவா படத்தில் நிஜமாகியிருக்கிறது. அதை சீனு வைட்லாவே கூட பார்த்தால்தான் நம்புவார்.
படத்தில் நாயகன் வேலை இல்லாமல் சுற்றுவார். ஆனால் நல்லவர். இதைக்காட்ட அரசியல்வாதி வாகனங்களை நிறுத்தி வைத்து பிறந்தநாள் கொண்டாடுவார். நிறுத்தி வைத்த வாகனங்களில் ஆம்புலன்சும் ஒன்று. விடுவாரா நாயகன். அந்த ஆம்புலன்சுக்காக ஒரு கொலை மாஸ் ஃபைட். பெரிய கார்கள், ஜீப்புகள், எஸ்யூவிகள் எல்லாம் சங்குசக்கரம் போல சுற்றுகின்றன. வாட் எ ஃபேன்டஸி மூவி. இதுதான் தொடக்கம். அதற்குப் பிறகு படத்தில் பார்ப்பதெல்லாம் இது படமா, தெலுங்கு படங்களை கிண்டல் செய்து எடுத்திருக்கிறார்களா என்று கூறும்படியே உள்ளது.
ஶ்ரீலீலா தேர்ந்தெடுக்கும் படங்களில் பெரும்பாலானவை உருப்படாதவை. அதற்கு அவர் என்ன செய்யமுடியும். அவரைப் பொறுத்தவரை எனக்கு டான்ஸ் நல்லா ஆடவரும். அதில் உங்களுக்கு குறை இருந்தா சொல்லுங்க என்பது போலவே நினைக்கிறார் போல. அந்த வகையில் ஜிவியின் பாடல்களை கேட்கலாம். பாடல்களாகவும் பார்க்கலாம் மோசமில்லை. உண்மையில் பாடல்களுக்காகவே ஹீரோயின் என்றால் அதற்கென விருது ஒன்றை உருவாக்கி ஶ்ரீலீலாவுக்கு கொடுத்துவிடலாம். அப்படியொரு பொருத்தம். இந்த விமர்சனம் எழுதும்பொழுதில் பொங்கல் பிளாப்பான குண்டூர் காரம் படத்தில் குர்ச்சி மடாதாபட்டி என்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் என பாராட்டு கிடைத்திருக்கும். அதுவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.
வைஷ்ணவ் தேஜ் இதுபோல இன்னொரு படம் நடித்தால் போதும். இப்படியொரு நடிகர் இருக்கிறார் என்பதையே தெலுங்கு ஆட்கள் மறந்துவிடுவார்கள். இந்த படத்தில் பெரிதாக நடிக்கும் அவசியமில்லை. அவசியமான இடங்களில் அவர் நடிக்க மறந்துவிடுகிறார். ஈஸ்வர காளீஸ்வர ரெட்டி என்பதுதான் நாயகனின் நிஜப்பெயர். இந்த பெயர் கூறப்பட்ட பிறகுதான், படம் சற்று தீவிர நிலையை எட்டுகிறது. ஆனால், அதையும் படத்தின் இறுதியில் கேலிக்குரிய காட்சியாக மாற்றிவிடுகிறார்கள். அதாவது, போலியான ஃபிளாஷ்பேக். அந்த இடத்தை இயக்குநர் காமெடியாக நினைத்து காட்சிபடுத்தியிருக்கிறார். உண்மையில் படம் பார்த்த ரசிகர்களுக்கு அந்த இடத்தில் தான் ஏமாற்றப்பட்டோம் என்ற கோபமே வருகிறது. கோபம் வருகிறாற்போலான காமெடி.
நவீன நகரத்தில் நாயகன் பிரயோஜனமில்லாத ஆள். அதாவது அவன் வீட்டிற்கென சம்பாதிப்பதில்லை. ஜாலியாக திருமணமான நண்பனுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறான். சிகரெட் பிடிக்கிறான். சரக்கு அடிக்கிறான். பிறகு அதிர்ஷ்டவசமாக காஸ்மெடிக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. அதுவும் கூட ஒரு லூசுப் பெண்ணால். அங்கும் நாயகன் வேலை செய்வதில்லை. இத்தனைக்கும் விற்பனைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். அங்கும், கை அடிபட்ட சிறுவனுக்கு சோறு வாங்கிக்கொடுத்து சுற்றிக்கொண்டிருக்கிறார். நாயகிதான் லூசுப்பெண். அவளுக்கு பாலு கோட்டையா என்ற நாயகன் மேல் காதல் வரவேண்டுமே அதற்காகவே காட்சிகளை வளர்த்துகிறார்கள். நாயகியின் பிறந்தநாள் அன்றுதான், பாலுவுக்கு அவன் அப்பா இறந்துபோய்விட்டார் என தகவல் கிடைக்கிறது. அதாவது அவனது உண்மையான அப்பா, அம்மா இப்போதுள்ளவர்கள் கிடையாது. அவர்கள் எங்கேயோ கிராமத்தில் இருக்கிறார்கள். இவனது பெயரும் கூட ஈஸ்வர காளீஸ்வர ரெட்டி. பாலு கிடையாது.
பிறகு, அங்கு சென்று தனது தந்தை, தாய் உறவினர்களை சந்திக்கிறான். அந்த கிராமத்தில் அக்கா கணவன் குவாரி நடத்துகிறான். அதற்கு பள்ளி செல்லும் குழந்தைகளை தொழிலாளிகளாக பயன்படுத்துகிறான். பள்ளிகளை மூடி ஆசிரியர்களை கொல்கிறான். அவனது அக்காவை கொடுமைப்படுத்தி தன் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற வைக்கிறான். இதெல்லாம் சரி. நாயகனின் அக்காவுக்கு தனக்கு நடப்பது என்னவென்று புரியாதா என்ன? ஏறத்தாழ குடும்ப வன்முறை. அதைக்கூட அவள் புகார் தர விரும்பவில்லை. அவளது சைக்கோ கணவன் கூடவே வாழ நினைக்கிறாள். அவளது கணவனால் ஒட்டுமொத்த கிராமமே படாதபாடு படுகிறது. இதெல்லாம் தாண்டி அரசியலில் நின்று எம்எல்ஏ ஆகவும் நினைக்கிறான். இங்குதான் நாயகன் வந்து அதை தடுத்து தனது அக்காவை அரசியலுக்குள் கொண்டு வருகிறான். அக்கா கணவன்தான், தந்தை இறப்பிற்கு காரணம் என தெரிந்த பிறகுதான் அதை செய்கிறான். மேலும் அக்காவை தேர்தலில் நின்றதற்காக மானபங்கம் செய்தவனை கோவில் வைத்தே நெருப்பு வைத்து கொளுத்துகிறான். இறுதியாக சூர சம்ஹாரம்.
கிராமத்தில் உள்ள இந்த பகுதி மட்டும் உண்மையானதாக இருந்திருந்தால் படத்தை பார்க்க பெரிய சிக்கல் ஏதுமில்லை. ஆனால் இதுவுமே கூட டூப். உண்மையான ஈஸ்வர காளீஸ்வர ரெட்டி என நாயகனின் டாக்டர் அண்ணனை காட்டுகிறார்கள். அங்குதான் பார்வையாளர்களுக்கு மனமுடைந்து போகிறது. டாக்டர் அண்ணனின் பெயர்தான் ஆதிகேசவா. படத்தின் தலைப்பும் அதுதான். ராஸ்கோண்டி மார் தட்டி பாடண்டி....
கோமாளிமேடை டீம்
Sai Soujanya
கருத்துகள்
கருத்துரையிடுக