முற்பிறப்பில் சிறந்த வாள் வீச்சு வீரன்; மறுபிறவியில் வாள்வீச்சில் தடுமாறுகிற பலவீனமான இளைஞன்!

 









சாவோட்டிக் ஸ்வார்ட் காட்


மாங்கா காமிக்ஸ் 


ரீட்மாங்காபேட்.காம்


150---



முந்தைய பிறப்பில் வாழ்ந்த சிறந்த வாள் வீரன், ஒரு போரில் எதிரியைக் கொன்றுவிட்டு படுகாயமுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போதுதான், சோல் ஸ்வார்ட் எனும் புதிய சக்தியைப் பெறுகிறார். அதை முதல்முறையாக பயன்படுத்தி எதிரியை வீழ்த்துகிறார். அவரது ஆன்மா மறுபிறப்பெடுக்கிறது. சாங்கியாங் எனும் அதிக வலிமை இல்லாத குலத்திற்கு செல்கிறது. அங்குதான் வாள் வீரர் குழந்தையாக பிறக்கிறார். பிறந்து சில ஆண்டுகளிலேயே நூல்களை வாசிப்பது. நடப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். சிறுவயதில் தீவிரமாக ஆன்ம ஆற்றல் பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் வாள் வீச்சுக்கு தேவையான ஆற்றல் குறைந்துபோகிறது. இந்த நிலையில் அவரை வாள் வீச்சுக்கான செயின்ட் ஃபோர்ஸ் இருக்கிறதா என சோதிக்கிறார்கள். அந்த தேர்வில் சாங் தோல்வியடைகிறான். எனவே, அவனை சுற்றத்தார், ஊர், வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் கூட கேலி செய்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே சாங் செய்த பல்வேறு பயிற்சிகள் அவனை வலிமை கொண்டவனாக மாற்றுகின்றன. ஒரு மரக்கிளை ஒன்றை ஒடித்து வாள் போல பாவித்து அவனது சகோதரனை தாக்கி மார்பில் காயத்தை ஏற்படுத்துகிறான். 


சாங்கின் அப்பாதான் இனக்குழு தலைவர். தன் மகனுக்கு உடலில் சக்தி இல்லையென்றால் பதினாறு வயது வரை வைத்திருந்துவிட்டு வெளியே அனுப்பிவைத்துவிடுவதுதான் திட்டம். அதை சாங் அறிந்தே இருக்கிறான். எனவே, பெற்றோர் மீது பெரிதாக ஒட்டுதல் ஏற்படுவதில்லை. அவன் அம்மா மீது மட்டும் பிரியம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அவன் தற்காப்பு பள்ளி ஒன்றுக்கு கல்வி கற்கச் செல்கிறான். 

அங்கு அவனது குடும்பத்தைச் சேர்ந்த மூத்த அண்ணன் படிக்கிறார். தொடக்கத்திலேயே புதிய மாணவர்களுக்கான போட்டியில் சாங் கலந்துகொண்டு பலரையும் தோற்கடிக்கிறான். அதில், நிறைய எதிரிகள் உருவாகிறார்கள். இறுதிப்போட்டியில் சந்திக்கும் ஒருவனான டை டா வலிமையான உடலைக் கொண்டவன். அவனை சமயோசிதமாக போட்டி நடக்கும் இடத்தில் இருந்து தள்ளி விட்டு வெல்கிறான் சாங். பின்னாளில் டை டா, சாங்கிற்கு நெருக்கமான நண்பனாக மாறுகிறான். டை டாவின் திறமை, வலிமையானவர்களோடு நேருக்கு நேராக துணிச்சலோடு நின்று சண்டையிடுவது. அதற்கான வலிமையும் உண்டு. துணிச்சலும் உண்டு. இவர்கள் இருவரும் பின்னாளி்ல காட்டுக்குள் மூன்று நாட்கள் தங்கி போட்டியிடும் போட்டியில் ஒன்றாக சேர்ந்து சண்டையிடுகிறார்கள். நண்பர்களாகிறார்கள். 

காட்டில் மூத்த அண்ணனின் குழு ஆபத்தை சந்திக்கும்போது சாங் அங்கு சென்று அவர்களைக் காப்பாற்றுவதோடு, விலங்குகளை கொன்று சேகரித்த ஆன்ம ஆற்றல் கற்களை கொள்ளையிடுபவர்களையும் அடித்து விரட்டுகிறான். தற்காப்பு பள்ளியில், அரச குடும்ப வாரிசுகளும் படிக்கின்றனர். அப்படி படிக்கும் இளவரசியை சாங்கிற்கு மணம் செய்து வைக்கலாம் என அரசர் முடிவெடுக்கிறார். இப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு, நாட்டில் நிலவும் அரசியல்தான் காரணம். தனது பெண்ணின் விருப்பம் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. இதுபோல பின்னணி விஷயங்கள் சாங்கிற்கு ஏதும் தெரியாது. இந்த திருமணம் ஹூவான் எனும் இனக்குழுவிற்கு முக்கியமானது. அந்த திருமணம் சாங்கின் இனக்குழுவிற்கு செல்கிறது என்றதும், அந்த குடும்பத்தின் இளம் மாணவன், சாங்கின் மூத்த அண்ணனை பிடித்து அடித்து உதைக்கிறான். இதனால் சாங் ஹூவான் குடும்ப ஆட்களை அடித்து உதைக்கிறான். கூடவே, இளம் வாரிசை கொல்வதில்லை. ஆனால் அவனது இடதுகையை வெட்டி விடுகிறான். இதனால் சாங் குடும்பத்திற்கு பெரும் சிக்கலாகிறது. 


அவர்கள் வாழும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயரும்படி சூழ்நிலை மாறுகிறது. அப்போதுதான். சாங்கிற்கு அவன் அம்மா வழி பிரச்னைகள் தெரிய வருகிறது. பை கிலான் எனும் இனக்குழுவைச் சேர்ந்த அம்மாவும், அவரது சகோதரனும் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். பிறர் அனைவருமே அடையாளம் தெரியாத ஆட்களால் கொல்லப்படுகிறார்கள். இப்படி கொன்றவர்களை கண்டுபிடிக்க சாங் நினைக்கிறான். வீட்டை விட்டு அவனை வெளியேற்றி பாதுகாக்க குடும்பத்தினர் முடிவு செய்கிறார்கள். சாங்கும் அங்கிருந்து வெளியேறி செல்கிறான். 


சாங் தனது உருவத்தை மாற்றிக்கொள்கிறான். அவனை கண்டுபிடித்து கொல்ல கூலிப்படை கும்பல்களுக்கு ஹூவான் இனக்குழு உத்தரவிட்டு அதிக பணத்தொகையை அறிவித்துள்ளது. இதை சாங் அறிந்தே இருக்கிறான். அப்போது, பிளேம் எனும் கூலிப்படையுடன் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. கெண்டல் என்பவர் நடத்துகிறார். அவர், நாட்டிலேயே முதல் நிறுவனமாக பிளேம் கூலிப்படையை உருவாக்க நினைக்கிறார். ஆனால், அவர் நேர்மையானவர், விதிப்படி, அனைத்தையும் செய்ய நினைக்கிறார். அதுவே சிக்கலாக மாறுகிறது. வேக் சிட்டி எனும் நகருக்கு செல்கிறார்கள். அங்குதான், சில வேலைகளை செய்து வருகிறார்கள். சாங் தனது பெயரை ஜியாங் சென் என்று மாற்றிக்கொள்கிறான். அவனது வாள் திறமையால் பிளேம் கூலிப்படை குழுவினர் விரைவில் பணபலம் கொண்ட குழுவாக மாறுகிறது. வேக் சிட்டியின் ஆளுநர் செய்யும் ஊழலால் பிளேம் கூலிப்படை குழுவினரின் உயிர் பலியாகிறது. அதற்கு ஜியாங் சென், ஜூ என்ற கூலிப்படையை பழிவாங்குகிறார். இதற்கு பரிசாக அந்த கூலிப்படையை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை அடைகிறார். பிறகு என்ன செய்தார் என்பதே கதை. 


சாங்/ஜியாங் சென் என்ற இரு அடையாளங்கள் நாயகனுக்கு உண்டு. வாள் வீச்சு வீரன் என கூறினாலும் நாயகனை பலவீனமாகவே கடைசி வரையில் காட்டுவதால் சற்று வருத்தமாக இருக்கிறது. முந்தைய பிறவியில் பல்வேறு சூத்திரங்களை, கலைகளைக் கற்றவருக்கு உடலை எப்படி பலமாக்கிக்கொள்வது என தெரியாதா? கடைசி வரையில் பிறருடன் சண்டை போடும்போது தடுமாறிக்கொண்டே இருக்கிறார். தன்னை விட வலிமையானவர்களை எதிர்கொள்ளும்போது தடுமாற்றம் சரி. ஆனால், அவனை விட அல்லது அவனுக்கு சமமாக உள்ளவர்களை எதிர்கொள்ளும்போது எதற்கு தடுமாற்றம்? இதெல்லாம் கதையை படிக்கும்போது சோர்வளிக்கிறது. 


நாயகன் எதற்கு வெளியே செல்கிறான், தலைமறைவாக வாழ்கிறான் என்பதையே அவன் மெல்ல மறந்துபோகிறான். பிளேம் என்ற கூலிப்படைக்காக பழிவாங்க கிளம்புகிறான். பிறகு அப்படியே கூலிப்படையினருக்கான தற்காப்புக்கலை போட்டிக்கு செல்கிறான். அங்கு சென்று போட்டியிட்டு வென்றால் ஹெவன்லி டெக்னிக் எனும் தற்காப்புக்கலை ஒன்றை பரிசாக கொடுக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறான். ஆனால் அதை அடைவது எளிதல்ல. சாங்கிற்கு அவனது தற்காப்புக்கலை பயிற்சியை வலிமையாக்கிக்கொள்வது, அடுத்து, பை கிலான் எனும் அவனது அம்மாவின் இனக்குழுவை யார் வீழ்த்தினார்கள் என்பதை அறியும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால் அதை அவன் ஒருவகையில் மறந்தே போகிறான். 


கதை இன்னும் முடியவில்லை. எனவே, கதையை எழுதும் எழுத்தாளர்கள் நாயகனின் கடமைகளை மீண்டும் கதைக்கு கொண்டு வருவார்கள் என நம்பலாம். 


குடும்ப பாசம், நண்பர்கள் விசுவாசம், பொறுப்பு, பழிவாங்குதல் என சில அம்சங்களை அடிப்படையாக இந்த கதை கொண்டிருக்கிறது. கதையை இந்த வகையில் புரிந்துகொண்டு வாசித்தால் மட்டுமே ரசிக்கமுடியும். 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்