மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்











 தாவோ தே ஜிங்

லாவோட்சு

தமிழில்

சந்தியா நடராஜன் 

159 பக்கங்கள்


இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது. 


தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது. 


சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிபெயர்ப்பு பாடலைப் படித்துவிட்டு அவர் என்ன சொன்னார் என்பதை மட்டும் தனியே தணிக்கை செய்து படிக்கவேண்டிய இக்கட்டு நமக்கு ஏற்படுகிறது. 


மொத்த நூலும் இப்படியேதான் செல்கிறது. எனவே, லாவோட்சுவின் சிந்தனைகளை வாசிப்பது எப்போதும் போல் இல்லாமல் கடுமையான சோதனையாகிறது. தாவோ தே ஜிங் நூலின் வேறு ஏதாவது மொழிபெயர்ப்பு நூல் கிடைத்தால் சிறப்பானது. சந்தியா நடராஜன், லாவோட்சுவை பற்றி கூறுவதை விட அவரது சிந்தனைகளை பிறருடன் ஒப்பீடு செய்து பேசியிருப்பதுதான் அதிகம். எனவே, அதுவே நூலுக்கு பெரும் தொய்வை அளிக்கிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றை வாசிக்க அந்தந்த நூல்களையே வாங்கிப்படிக்கலாமே? அதற்கு ஏன் தாவோ பற்றிய நூலை வாங்கி வாசிக்கவேண்டும்? 


எளிமையான வாழ்க்கையே சிறந்தது. மென்மையே நல்லது என்று சொல்லும் இந்த நூலும் கூட குறுநூலாக வந்திருந்தால்,அதன் சிறப்பு அதிகரித்திருக்கும். ஏராளமான இடைச்செருகல்களால் நூல் அதன் ஆன்மாவை மொத்தமாக இழந்துவிட்டது. நூலை முற்றாக படிக்கவேண்டாம் என்று வாசிப்பை விரும்புவனாக கூறமுடியாது. அது தவறும்கூட. நூலை தமிழ்நாட்டு இலக்கியப் பின்னணியைக் கொண்டு புரிந்துகொள்ள முயல நினைத்தால், வாசிக்கலாம். தவறில்லை. அந்த ஒரு கோணத்தில் நூல் வாசிப்பவர்களுக்கு திருப்தியைத் தரும். 


தாவோ பற்றிய ஓரளவுக்கு எளிய புரிதலை ஏற்படுத்த முயலும் நூல். ஆன்மிக, மெய்யியல் நூல்களை விமர்சனம் செய்து எழுதுவது கடினம். அப்படி செய்தாலும் அதில் எந்த பொருளும் இருக்காது. வாசிப்பவர்கள் அவர்களின் வாழ்பனுவத்திற்கு ஏற்ப புரிந்துகொள்ள வேண்டியதுதான். நூலை வாங்கி வாசியுங்கள். 

 


கோமாளிமேடை டீம் 

 

நன்றி

வடிவமைப்பாளர் மெய்யருள் 

https://www.udumalai.com/thavo-the-jing.htm

https://www.dinamani.com/specials/nool-aragam/2019/dec/23/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-3313241.html

கருத்துகள்