உலகை ஆள நினைப்பவனின் மறுபிறப்பு ரகசியங்கள்!

 









ஸ்காலர் ரீஇன்கார்னேஷன் 


மாங்கா காமிக்ஸ் 


150 அத்தியாயங்கள்----



தற்காப்புக்கலை கற்ற மாவீரன் ஒருவனை, பத்து தற்காப்பு கலை மாஸ்டர்கள் ஒன்றாக சேர்ந்து சதி செய்து  கொல்ல நினைக்கிறார்கள். எதற்கு, அவனால் உலக அமைதி கெட்டுவிடுமாம். மாவீரனைப் பொறுத்தவரை கற்ற டார்க் ஆர்ட்ஸ் கலையை ஆயுதமாக பயன்படுத்துகிறான். அவனிடம் வாளோ, குறுங்கத்தியோ கூட கிடையாது. தற்காப்புக்கலை கற்றவன் ஆயுதங்களை சார்ந்து இருக்ககூடாது என்பதுதான் அவனது உறுதியான கொள்கை. இமாலயம் போன்ற மலைப்பகுதியில் நடக்கும் சண்டையில், புத்த துறவி தற்கொலைத் தாக்குதல் நடத்தி மாவீரனை கொல்கிறார். அவரும் இறந்துபோனதாக காட்டுகிறார்கள். 


பிறகு, அதிக காலமெல்லாம் ஆகவில்லை. அதே மாவீரன் மீண்டும் பிறக்கிறான். டார்க் ஆர்ட்ஸ்  என்ற தற்காப்புக்கலை கற்றதால் கொல்லப்பட்டவன், மீண்டும் அதே கலையை நினைவில் கொண்டு பிறக்கிறான். முற்பிறவி நினைவுகளுடன் நகரத்தின் தலைவர் வீட்டில் பிறக்கிறான். முற்காலத்தில், அனாதை. ஆனால் புதிய மறுபிறப்பில் குடும்பம், பெற்றோர். தங்கை, குறிப்பாக வீடு, செல்வம் என அனைத்துமே இருக்கிறது. 


மாவீரனைப் பொறுத்தவரை தனது உலகத்தை ஆளும் ஆசையை அவன் கைவிடவில்லை. எனவே அதைநோக்கி மெல்ல நகர்கிறான். நினைவிலுள்ள தற்காப்புக்கலைகளைக் கற்கிறான். கூடவே அவன் அப்பா, கல்வி முக்கியம் என ஆசிரியர் ஒருவரை வீட்டுக்கே அழைத்துவந்து பாடம் சொல்லச் சொல்கிறார். மாவீரனுக்கு தற்காப்புக்கலை என்றால் பிரியமாக இருக்கிறது. ஆனால் எழுத, படிக்க கற்பது கடினமாக உள்ளது. ஆனாலும் கூட இந்த எண்ணம் மெல்ல மாறுகிறது. காரணம், அந்த ஆசிரியரின் பிடிவாதமும், விடாமுயற்சியும்தான். முந்தைய பிறவியில் அனாதையாக அலைந்து திரிந்து உணவுக்கு லோலாயப்பட்டவனுக்கு வீட்டில் எளிதாக பன்றி, ஆடு, கோழி என இறைச்சி வகைகள் அத்தனையும் கிடைக்கிறது. அவன் கறி சாப்பிடும் வேகத்தைப் பார்த்து அவனது அம்மாவுக்கே ஆச்சரியமாகிறது. 


 இதேநேரத்தில் கடைத்தெருவுக்கு போன அண்ணன், தங்கையை கொள்ளைக்காரர்கள் கடத்துகிறார்கள். நகரத்தலைவர் பிள்ளைகள் அல்லவா? காசு கேட்டு மிரட்டுவது திட்டம். நகரத்தலைவர் அடிப்படையில் நல்லவர்தான். ஆனால் தனது பிள்ளைகளை கடத்தியவர்களை மன்னிக்கும் அளவுக்கு நல்லவர் அல்ல. அவர்களை கொல்ல கூலிக்கொலைகாரர்களிடம் உத்தரவிடுகிறார். இவர்கள் சென்று கடத்தல்காரர்களைக் கொல்வதற்கு முன்னரே, மாவீரன் சிறுவனாக இருந்தாலும் கொள்ளைக்காரர்களை அடித்து கொன்றுவிடுகிறான். அதுவே கூலிக்கொலைகாரர்களுக்கு வியப்பாக இருக்கிறது. மாவீரனுக்கு உடலில் சிற்சில இடங்களில் காயம் இருக்கிறது. 


நகரத்தலைவருக்கு அவரது மகன்தான், கொள்ளைக்காரர்களை கொன்றான் என்று தெரிந்து பெருமையாக இருக்கிறது. அதேசமயம் இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என உத்தரவிடுகிறார். கடத்தல் சம்பவம் காரணமாக, மாவீரன் தனது தற்காப்பு பயிற்சியை அதிகரிப்பதோடு, தங்கைக்கும் தற்காப்புக்கலையை சொல்லித் தருகிறான். தங்கை, அண்ணனை வெறித்தனமாக நேசிக்கும் பெண்ணாக வளர்கிறாள். பிடிவாதமும் கோபமும் அதிகம்தான். அவளுக்கு அண்ணனை முந்தும் வேகம் இருக்கிறது.


மாவீரன், தன்னை பாதுகாக்க நியமிக்கப்பட்ட குயிங்கோ என்பவனுக்கும் தற்காப்புக் கலையை கற்றுத் தருகிறான். அவனுக்கு, தனக்கென உலகை உருவாக்கிக்கொள்ளும் ஆசை உண்டு. அதேசமயம் முற்பிறவியில் துரோகம் செய்த ஆட்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று தேடுகிறான். அப்படி தேடி கண்டுபிடித்தவர்களில் ஒருவர், எலி மனிதன். எலிகளை வைத்தே உளவு பார்த்து பல்வேறு செய்திகளை உலகம் முழுக்க அனுப்பி பணம் சம்பாதிப்பவன். அவனை அடித்து உதைத்து மீண்டும் தன் பக்கத்திற்கு கொண்டு வருகிறான். எலி மனிதனுக்கும் தான் செய்த துரோகம் காரணமாக குற்றவுணர்ச்சி மனதில் வருத்திக்கொண்டே இருக்கிறது. எனவே அவனும் செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கோரி உயிர்ப்பிச்சை கேட்கிறான். இப்படியான அவனது உதவி மீண்டும் மாவீரனுக்கு கிடைக்கிறது. 


அடுத்து, முற்பிறவியில் மாவீரனைக் கொன்ற புத்த துறவி மீண்டும் கதையில் வருகிறார்.அவர், ஆயுதங்களை உருவாக்கித் தரும் கொல்லர். டிராகன் ஜெனரல் என்று கூறும்படியான திறமைசாலி. அவரை சில ஆட்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்ள முயலும்போது மாவீரனின் தங்கை அங்கு புகுந்து அவர்களை அடித்து விரட்டுகிறாள். டிராகன் ஜெனரலை தங்கைக்காகவே  மாவீரன் தங்களது வீட்டுக்கு கூட்டி வருகிறான். அவர். நன்றி உபகாரமாக இரு வாள்களை தயாரித்து கொடுக்கிறார். இரண்டு ஆயுதங்களுமே அவரவர் கற்ற தற்காப்புக் கலை திறன் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மாவீரனுக்கு அவர் வாளை உருவாக்கும்போது, அவனுக்கு அதில் விருப்பம் இருப்பதில்லை. இருந்தாலும் சரி இருக்கட்டுமே என வாளை ஏற்கிறான். அந்த வாளின் மூலம் ஏர் ஜம்ப் எனும் தற்காப்புக்கலையை செய்து பார்க்கிறான்.  அவனின் வயதுக்கு அது அரிய கலை. 


இதைப் பார்த்து மாவீரனின் அப்பா, அவனது பாதுகாவலர் என அனைவருமே வியந்துபோகிறார்கள். இந்த நேரத்தில் அவனுக்கு இளவரசியை பாதுகாப்பாக பெய்ஜிங் கொண்டுபோய் சேர்க்கும் வேலை கிடைக்கிறது. அவனது அப்பாவே மாவீரனுக்கென ஏற்பாடு செய்கிறார். இளவரசியை மாவீரன் தனது பதினொன்றாவது வயதில் சந்தித்திருப்பான். அவளை எல்லோரும் மரியாதையாக பேசும்போது இவன் மட்டுமே மிரட்டலாக சாதாரணமாக கையாண்டிருப்பான். இது இளவரசிக்கு அதிர்ச்சியாக இருக்கும். அவளுடைய நினைவில் மறக்க முடியாத ஆளாக மாவீரன் மாறுவான். இந்த நட்பு பின்னாலும் அப்படியே தொடரும். அரச குடும்பம் என்பதால் நிறைய ஆபத்துகளை மாவீரன் எதிர்கொள்ள நேரும். அதை அவன் தனது எதிர்காலத்திற்கான பயிற்சி என நினைத்துக்கொள்வான். இளவரசியோடு பயணிக்கும்போதுதான் கொலைகார இரட்டையர்களை சந்தித்து அவர்களின் கூன் முதுகை சரிசெய்துகொடுத்து அவர்களை  தனக்கென மட்டும் வேலை செய்ய வைப்பான். 


கதையில் எதிரி இல்லாவிட்டால் எப்படி? பச்சை தலைமுடி கொண்ட கேப்டன் என்பவன் வருவான். இவன், பாதிரியார் என்ற பெண்மணியிடம் வேலை செய்வான். இவன் யார் என்ற பின்கதை நெகிழ்ச்சியான கதையாக உள்ளது. பாதுகாப்பு வீரன், குத்தீட்டி வீரன் தங்கை என மூவருக்கும் பயிற்சி அளிப்பதே மாவீரனின் முக்கியப் பணி. அவர்களும் தங்களை தற்காப்புக் கலைப்புக்கென முழுமையாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். 


கதை முடியவில்லை. தொடர்கிறது. சண்டை தொடர்பான காட்சிகளி்ல் ஓவியம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். கதை நிதானமாக நகர்கிறது. உளவியல் பூர்வமாக, மாவீரன் தன்னை நிதானித்துக்கொண்டு தவறுகளை குறைத்துக்கொண்டு நகர்வதால் கதைக்கு நிதானம் தேவைப்படுகிறது. கதை முடியவில்லை. தொடர்கிறது. வாசிப்போர் வாசிக்கலாம். 




கோமாளிமேடை டீம் 


கருத்துகள்