போரைத் தடுக்க நினைக்கும் மவுண்ட் குவா இனக்குழுவைச் சேர்ந்த வாள் துறவியின் சாகசங்கள்!

 












வல்கானிக் ஏஜ் 


மாங்கா காமிக்ஸ் 


ரீட்மாங்காபேட்.காம் 


160 அத்தியாயங்கள் 



மவுண்ட் குவா செக்ட்டைச் சேர்ந்த பெரிய தலைவர்களில் ஒருவர். மரணப்படுக்கையில் கிடக்கிறார். நிறைய விஷயங்களை அறிந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி நினைத்த வெற்றிகளை அவரால் அடைய முடியவில்லை. குறிப்பாக காதல் இல்லை, திருமணம் இல்லை. நட்பு இல்லை. தொடர்புகள் இல்லை. இதனால் சாகும் நிலையில் வருத்தப்படுகிறார். நாம் நினைத்தது போல சந்தோஷமாக வாழ முடியவில்லையே என.... அந்த உயிர் அப்படியே மவுண்ட் குவாவில் உள்ள எட்டு வயதான சிறுவனின் உடலில் புகுகிறது.  அந்த சிறுவனின் பெயர் ஜூ சூ சியோன். அவனுக்கு இப்போது, மூத்த தலைவரின் நினைவுகள் இருக்கின்றன. அதை வைத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னதாக அறிந்து அதை தனக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே கதை. 


ஜூவின் மாஸ்டர் ஓவியத்தில் ஆண் போல இருக்கிறார். ஆனால் உரையாடலில் அவரை பெண்பாலாக குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இருந்தால் கதையின் போக்கில் நாம் அவரை ஆண்பாலாகவே புரிந்துகொள்வோம். மவுண்ட் குவா செக்ட், தாவோயிசத்தை கடைபிடிக்கும் துறவி மடம். எனவே, அங்குள்ளவர்கள் வாள்வீச்சு கலையை பழகினாலும் கூட பொருள் சேர்ப்பதில் பெரிதாக மனத்தை செலுத்துவதில்லை. ஆனால் ஜூ அப்படியானவன் அல்ல. அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய உண்மைகள் தெரியும் என்பதால், நோயுற்று இறந்துபோகவிருக்கும் மாஸ்டரை, அரிய மருத்துவ தாவரம் கொண்டு காப்பாற்றுகிறான். கூடவே, அவரின் வாள்வீச்சுக்கலையில் உள்ள தேக்கத்தையும் தீர்க்கிறான். எப்படி என அவன் குருவே வியந்து, எனது மாணவனாக இருந்தாலும்  இவன் அதிமேதாவி என முடிவுக்கு வருகிறார். 


ஆனால் ஜூவுக்குத்தான் முழு உண்மையும் தெரியும். எதிர்காலத்தில்  பிளாக் ஹெவன் செக்ட் உருவாக்கும் போரைத் தடுக்க நினைக்கிறான். இதற்கென திட்டம்போட்டு காரியங்களை செய்கிறான். தன்னை மெல்ல வலுவாக்கிக் கொள்கிறான். அதற்கென இனக்குழு தலைவர் அவரது மாணவனுக்கு மட்டும் சொல்லித்தரும் தற்காப்புக்கலையான வயலட் மிஸ்டைக் கற்கிறான். கூடவே 14, 24 பிளம் பிளாசம் ஸ்வார்ட் டெக்னிக்கை பயில்கிறான். 


வேறு ஒரு வேலையாக தற்காப்பு கலை கற்கும் மாணவர்களை முரிம் கூட்டணி அழைக்கிறது. செல்லும் வழியில் திருடர்களுக்கு காசு கொடுத்துத்தான் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை வாங்கிக்கொண்டு மீண்டும் வம்புக்கு வருகிறார்கள். இந்த முறை ஜூ சண்டைக்கு சென்று 18 ஸ்ட்ராங்ஹோல்ட் திருடர்கள் கூட்டணி ஆட்களை அடித்து உதைக்கிறான். ஆனால், அவர்கள் நீரில் சண்டை போடுவதில் வல்லவர்கள். எனவே, ஜூ  பயணித்த கப்பலை உடைக்கிறார்கள். அதில், ராஜ குடும்பத்தை் சேர்ந்த ஜூங் கியூ என்ற சிறுவனும் இருக்கிறான். 


ஜூ, ஏற்கெனவே அவனது எந்திரங்களை அறியும் கட்டமைக்கும் திறமையை அறிந்திருக்கிறான். எனவே, அதைப் பயன்படுத்தி த்ரீமைண்ட் என்ற திருடனின் ரகசிய புதையல் இடத்திற்கு செல்கிறான். அங்கு சென்று புதையல்களை எடுக்கிறான். அங்கு, ஜூ எதிர்பார்த்தது போலவே ஏராளமான தற்காப்புக்கலை நூல்கள் கிடைக்கின்றன. அதை பயில்கிறான். கூடவே, அவன் கோல்டன் வில் என்ற வியாபார சங்கத்தின் தலைவருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறான். அதன்படி புதையலாக கிடைத்த பொன், பொருட்களை அந்த வியாபாரியிடம் முதலீடு செய்து லாபத்தில் அவனும் ஜூங் கியூவும் பங்கு பெறுவதாக உறுதிமொழி செய்துகொள்கிறார்கள். 


வியாபாரியைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் அவர் பெரிய தலைவராக மாறுவார் என்பது ஜூவுக்கு முந்தைய பிறப்பு வழியாக தெரியும். எனவே, அவரை அவன் தன் பக்கம் வைத்துக்கொள்கிறான். வியாபாரிக்கு முதலீட்டுக்கு பணம் கிடைக்கிறது. கூடவே, வியாபாரத்தை நடத்துவதற்கான பாதுகாப்பும் ஜூ தருகிறான் என்றதும் அவர் மனமகிழ்ந்து போகிறார். தான் எதற்காக பயன்படுத்தப்படுகிறோம் என்று அவருக்குத் தெரியாது. அவருக்கு எல்லாவற்றையும் விட எதில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதே முக்கியமாக உள்ளது. 


ஜூவிற்கு,  பிளாக் ஹெவன்லி செக்டின் போர் முயற்சிகளை தடுக்கவேண்டும். அதற்கு முதற்கட்டமாக அவர்கள் தேடும் அரிய பொருட்களை முன்னரே தேடி கண்டுபிடித்து அதை தனக்கென சொந்தமாக்கிக் கொள்கிறான். இப்படி டிராகனின் ஆறு கொம்புகள், மீன் வயிற்றி்ல் உள்ள முத்து, ஜின்செங் கிழங்கு ஆகியவற்றை வசப்படுத்துகிறான். டிராகனை பிடிக்கும் முயற்சியில் அவன் தியான்சங் செக்ட்டின் ஏழாவது இளவரசரை சந்தித்து நட்பாக்கிக்கொள்கிறான். ஏறத்தாழ அவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறான். மேலும் டிராகனை கொன்று கொம்புகளை எடுத்துக்கொண்டு மீதி ஒன்றை தியான்சங்  இளவரசருக்கு கொடுத்துவிடுகிறான். இந்த டிராகன் விஷத்தை உடலில் செலுத்தி, அதை தனது ஆன்ம ஆற்றலால் நச்சு நீக்குகிறான். கூடவே அதற்கென தவுசண்ட் பாய்சன் ஆர்ட் என்ற தற்காப்புக் கலையை பயில்கிறான். இதன் வழியாக அவன் உடல் வெப்பம், குளிரால் பாதிக்கப்படாததோடு எந்த விஷத்தாலும் அவனை தாக்கமுடியாத பாதுகாப்பு உருவாகிறது. வெறும் வாள்வீச்சு மட்டுமல்ல விஷத் தாக்குதல் கூட அவனைப் பாதிக்காது. பிறரை அவன் விஷத்தால் தாக்கி கொல்ல முடியும். 


எனவே, டேங் இனக்குழுவிற்கு சென்று சவால் விட்டு பீனிக்ஸ் விஷத்தைக் கேட்கிறான். இளவரசி டேங் ஹைக்கு எப்போதும் மேலே இருக்கத்தான் விருப்பம். சவாலில் தோற்பது பிடிக்காது. ஆனால் அவனால் இயற்கை மட்டுமல்ல செயற்கை விஷத்தால் கூட ஜூவைத் தோற்கடிக்க முடிவதில்லை. ஒருகட்டத்தில் அவளது இனக்குழுவின் மூத்தவர்களே, ஜூவை மணந்துகொள் என அவளுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அவளுக்கு ஜூவின் மேல் ஆச்சரியமும் இருக்கிறது. அவனிடம் தோற்றுப்போன கோபமும் இருக்கிறது. ஆனால் பகிரங்க சவாலில் இருமுறை தோற்றுப்போன காரணத்தால் அவளால் எதுவும் செய்யமுடிவதில்லை. எனவே அவனுடன் நட்பாகிறாள். 


பிளாக் ஹெவன்லி செக்டின் அடுத்தடுத்த செயல்பாடுகளை ஜூ ஏற்கெனவே அறிந்திருக்கபடியால், மிகச்சிறந்த வாள் வீரனை சந்திக்க பாய்சன் பீனிக்ஸ் டாங் ஹையை அழைத்துச் செல்கிறான். அவள் அவனது படுக்கையில் கிடக்கிற விஷத்தாக்குதலுக்குள்ளான மகளைக் காப்பாற்றுகிறாள். இதற்கு ஒரு வினோதமான மோதிரம் ஒன்று தேவைப்படுகிறது. அதை ஜூ, பிளேட் செக்ட் எனும் இனக்குழு தலைவனை தோற்கடித்து, அவனைக் கொன்று கைப்பற்றுகிறான். இப்படி வாள் வீரனின் மகளைக் காப்பாற்ற, அவன் தனது வாளை ஜூவின் காலடியில் வைத்து வணங்கி தான் இனிமேல் அடிமையாக நீங்கள் சொல்லும் பாதையில் நடப்பேன் என்று கூறுகிறான். அதைத்தான் ஜூ எதிர்பார்த்தான். இந்த வாள் வீரன் எதிரிகளின் கைக்கு போனால் அவனால் எதிரிகளோடு போரிட்டு வெல்ல முடியாது. 


நேரடியாக ஜூவின் பெயர் வெளியே தெரிந்தால் உயிருக்கு ஆபத்து என பாண்டம் போ ஸ்வார்ட்ஸ் மேன் என இன்னொரு அடையாளத்தை ஏற்படுத்தி,எதிரிகளை வேட்டையாடுகிறான். ஜூ சூ சியோன், பாண்டம் போ ஸ்வார்ட்ஸ் மேன் என இருவராக மாறி பல்வேறு இடங்களுக்குச் செல்கிறான். எதிரிகளை அடித்து உதைத்து கொல்கிறான். ஒருகட்டத்தில் கோஸ்ட் வேலி எனும் இடத்திற்கு சென்று அங்குள்ளவர்கள தனக்கு சொந்தமாக்குகிறான். அவர்கள் வேறுயாருமில்லை. திருடனாக வாழ்ந்த த்ரீமைண்ட்ஸ் என்பவரின் ஆட்கள். இவர்கள் மூக்கில் சுவாசிக்காமல் தோல் வழியாக சுவாசிக்கும் திறன் பெற்றவர்கள். முழுக்க கண்களை துணியால் கட்டியிருப்பார்கள். பிற ஆட்களை மறைவாக சென்று கொலை செய்வதுதான் வேலை. அதற்கென காசு வாங்கிக்கொள்வார்கள். 


ஜூ, ஒரு தாவோயிச துறவி. ஆனாலும் நாக் வோ வுல், டாங் ஹை, ஜூஜ் குடும்ப பெண் என நிறைய பெண்கள் அவனைக் காதலிக்கிறார்கள். இந்த மாங்கா காமிக்ஸில் தொடக்கத்தில் வாள் சண்டைகளில் ரத்தம் தெறிக்கவில்லை. மிகவும் தாமதமாக சண்டையில் ரத்தம் பார்க்கிறோம். மற்ற இடங்களில் வீரர்கள் அடிபட்டு கீழே வீழ்கிறார்கள். ஓவியங்களை ரத்தத்தை காட்டுவதில்லை. ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து பிளட் டீமோனுடன் நடக்கும் சண்டையில் ஈடு செய்துவிடுகிறார்கள். அந்த சண்டையில் சிந்தும் ரத்தம் அளவில்லாத ஒன்று. சண்டையின்போது, ஜூ பெறும் அறிவு என்பது ஆச்சரியமானது. சண்டை போட்டுக்கொண்டே எதிரி யார், எதற்காக இப்படி செய்கிறான் என அத்தனையையும் அப்படியே சொல்வான். பிளட் டீமோனே ஒரு கட்டத்தில் உண்மையில் நான் இங்கு ராட்சஷன் இல்லை நீதான் உண்மையான ராட்சஷன் என்று சொல்லி வியந்துபோய் உயிரை விடுவான். 


ஒரு கட்டத்தில் கதை முழுக்க ஒரு தரப்பிலேயே நடப்பது போல மாறிவிடுகிறது. அதுவே சோர்வாகிறது. வில்லன் தரப்பு, அடேய் ஜூ சூ சியோன் என அலறுவதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். வேறு ஏதும் நடப்பதில்லை. இதனால் கதை தொய்வடைகிறது. ஒருதரப்பு வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க, இன்னொரு தரப்பு தோற்று வருகிறது. அப்புறம் கதையில் என்ன இருக்கிறது? 



தற்காப்புக்கலை, அதன் நோக்கம், தற்காப்பு கலையின் வழியாக ஒருவன் பெறும் அறிவு என்ன, அந்த அறிவு எதற்கு உதவுகிறது என நிறைய இடங்களில் தத்துவரீதியாக செல்கிறார்கள். அதை அறிவதும் கூட நன்றாகத்தான் இருக்கிறது. ஜூ சூ சியோனின் சாகசங்களைப் படிக்கவேண்டுமானாலும் காமிக்ஸை வாசிக்கலாம். 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்