நல்ல செய்தி - முன்னர் இளம் குற்றவாளி இப்போது மாரத்தான் வீரர்!
ஒருவர் இளம் வயதில் வழிதவறி சிறை சென்றுவிட்டால் இயல்பான வாழ்க்கைக்கு மீள்வது கடினம். வளர்ந்த நாடுகளில் குற்றவாளிகளை மீட்க சமூகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் குற்றவாளிகளை மனம் திருந்தியபிறகு, இயல்பான சமூகத்தில் வாழ அனுமதிப்பது கடினமாகவே உள்ளது. சமூக கண்ணோட்டம், முன்முடிவுகள், போலியான செய்திகள், வதந்திகள் என நிறைய அம்சங்கள் பின்னணியில் உள்ளன. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போகும் நபர் சிறை சென்றவர். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு விளையாட்டு மூலம் தனது வாழ்க்கையை மடை மாற்றிக்கொண்டார். அதோடு பிறருக்கும் வழிகாட்டி உதவி வருகிறார்.
2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் ஜான் மெக்கவி அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினார். அவரது இலக்கை எட்டிப்பிடிக்க நான்கு கி.மீ. தூரம்தான் இருந்தது. சாமோனிக்ஸ் என்ற இடத்திற்கு செல்லவேண்டும். அதை எட்டிப்பிடிப்பது சவாலானது. ஆனால் முடியாத ஒன்றல்ல. நாற்பது வயதில் தன்னுடைய கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜானின் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. அவரது வாழ்க்கை திருட்டு, கொள்ளை என தடம் மாற வளர்ப்புத் தந்தையும், மாமாவும் காரணமாக இருந்தனர். அவர்கள் இருவருமே திருட்டு செய்துதான் பிழைத்து வந்தனர். அதன் காரணமாகவே ஜான், பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி சூழல் அமைந்தது. முதன்முதலில் பத்தொன்பது வயதில் சிறைக்கு சென்றார். அந்த முறை ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அடுத்த ஆண்டே மீண்டும் கொள்ளைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஜானின் நண்பர் ஆரோன் என்பவர், போலீஸ் அவரை கைது செய்ய துரத்தும்போது விபத்தில் சிக்கி இறந்துபோனார். அதுதான் ஜானை பெரும் குற்றவுணர்ச்சியில் தள்ளியது. எனவே, சிறையில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார். இவரைக் கவனித்த சிறை அதிகாரியான டாரன் டேவிஸ், ஊக்கப்படுத்தினார். இதன் வழியாக ஜான் படகுப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரராக மாறினார். தற்போது, டேவிஸ் சிறை அதிகாரி பணியை விட்டு பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இப்போதும் கூட ஜானுக்கு ஆதரவாக இருக்கிறார்.
2012ஆம் ஆண்டு பத்தாண்டு சிறைவாசத்திலிருந்து மீண்டார். பிறகு, தன்னை விளையாட்டு வீரராக மாற்றிக்கொண்டார். ட்ரைஅத்லெட் வீரராக உள்ளவருக்கு நைக் நிறுவனம் பண உதவிகளைச் செய்கிறது. இளம் குற்றவாளிகளை திருத்தி அவர்களை விளையாட்டு வீரர்களாக மாற்றி வருகிறார்.
சிறை வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்தவர், தன்னை தவறான வழிக்கு செல்லுமாறு நிர்பந்தித்த சூழலை மாற்றிக்கொண்டார். விளையாட்டை மறுவாழ்விற்காக வழியாக தேர்ந்தெடுத்தார். இளம் குற்றவாளிகளிடம் உரையாடி அவர்களை மாற்ற முயன்றார். பல்வேறு பள்ளிகளில் உரையாற்றினார். அகதிகள், இளம் குற்றவாளிகள் ஆகியோருக்கு ஆறுமாத தடகள பயிற்சியளித்து அல்ட்ரா மாரத்தானில் பங்கேற்க வைக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக