மறுபிறப்பெடுத்து வந்து தீயசக்தி இனக்குழுவை அழிக்கப் போராடும் இரவு வீரன்! இம்மார்டல் இன்விசிபிள்

 








இம்மார்டல், இன்விசிபிள்


மாங்கா காமிக்ஸ்


ரீட்மாங்காகாமிக்ஸ்.காம்


150----


தீயசக்தியைச் சேர்ந்த இனக்குழுவில் உள்ள நாயகன், மக்களுக்கு பீதியூட்டிய தற்காப்புக்கலை மாஸ்டர். அனைத்து நாடுகளிலும் பொது எதிரியாக கருதப்பட்டு துரத்தப்படுகிறார்.  பின்னாளில், எதிரிகளால் வெட்டி படுகொலை கொல்லப்படுகிறார். ஆனால் அவர் மனதில் நம் வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்கிறார். மறுபிறப்பில், சென் என்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாரிசாக பிறக்கிறார். அப்பா, வணிகர். அம்மா, புகழ்பெற்ற வாள் வீராங்கனை. அம்மாதான், மகன் கோ உன்னுக்கு அடிப்படை தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்பிக்கிறார். தினசரி மறக்காமல் பயிற்சி செய்யவேண்டும் என கூறுகிறார். அதுவே கோ உன்னுக்கு போதுமானதாக இருக்கிறது. அம்மா சொல்லிக்கொடுத்த கலைகளோடு, அவன் முற்பிறவியில் கற்ற தீயசக்தி கலைகளையும் சேர்த்து பயிற்சி செய்கிறான். 


அவன் அம்மா முற்பிறவியில் எதிரிகளுடன் சண்டையிட்டு இறுதியாக இறந்துபோகிறார். எனவே, அந்த சூழ்நிலையை கோ உன் மாற்ற முயல்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அம்மாவின் வாள் பயிற்சியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறான். அவனுக்கு உள்ள ஒரே லட்சியம்.முற்பிறப்பில் மக்களை துன்புறுத்திய, தனக்கு துரோகம் செய்த டீமன் கார்ப்ஸ் கல்ட் எனும் இனக்குழுவை முற்றாக அழிப்பது. அதற்காகவே தனது வலிமையை பெருக்கிக் கொள்வதோடு, போரில் உதவும் சகோதர சக்திகளையும் தேடிச்செல்கிறான். இதையெல்லாம் அவன் ரகசியமாக செய்வதுதான் முக்கியமானது. ஆனாலும் அவன் செய்யும் விஷயங்களின் வீரியம் பெரியது. எனவே, டீமன் கார்ப்ஸ் கல்ட் அவனை பின்தொடர்ந்து கொல்ல முயல்கிறது. அவனைப் பற்றிய ரகசியங்களை தேட முயல்கிறார்கள். இதனால் நேரும் விளைவுகள் என்னவென்பதே கதை. 


நிலவு வாள் வீரன், சுன்ஜாங் எனும் நாயகனுடைய வீட்டுக்கு பாதுகாவலராக வருகிறார். அவர் தொடக்கத்தில் இருந்தே கோ உன்னை சந்தேகமாக பார்க்கிறார். எதையோ மறைத்து வைத்திருக்கிறானே என்று. அது உண்மைதான். கோ உன் தன் சக்தியை பெரிதாக வெளிக்காட்டுவதில்லை. ஆனால் வெளிக்காட்டும் இடத்தில் நிலவுவாள் வீரன் பார்த்துவிடுகிறார். அதை பிறருக்கு சொல்வதில்லை. அமைதியாக ரகசியமாக அவனை கவனிக்க தொடங்குகிறார். கோ உன்னுக்கு தான் வெளிப்படையாக காரியங்களைச் செய்தால் அது பிறருடைய கவனத்தை ஈர்க்கும். பிரச்னையை தரும் என தெரியும். எனவே முந்தைய பிறவியில் செய்த தவறுகளை செய்வதில்லை. 


தேயிலை வாங்குவதற்காக ஒரு மலைப்பகுதிக்கு செல்ல கோ உன் தயாராகிறான். அங்கு செல்லும்போது, ஒரு திருட்டு கும்பல் நிலவுவாள் வீரனை தாக்க முயல்கிறது.அங்கு கோ உன் வந்து தாக்க முயல்பவர்களை அடித்து துரத்துகிறான். கூடவே திருட்டு கும்பலின் தலைவனை கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்துகிறான். தன்னைக் காப்பாற்றியது கோ உன் என நிலவுவாள் வீரன் அடையாளம் கண்டு கொள்கிறார். பிறகு, தேயிலை பயிரிடும் இனக்குழுவை கொள்ளை குழுவொன்று பணம் கேட்டு மிரட்டி சரக்குகளை எடுத்துச் செல்வதோடு தேயிலை தோட்டத்திலும் நெருப்பு பற்றிவைத்து விடுகிறது. இந்த பிரச்னையைப் பற்றி விசாரித்துவிட்டு நாயகன் கோ உன், கொள்ளையர் தலைவனை கொல்கிறான். திருட்டுக்கூட்டம் இறந்துவிட, மிஞ்சிய அவனது மாமனார், அவரது பேரன் ஆகியோரை மீட்கிறான். கூடவே, உருவம் மாற்றி திருடும் கொள்ளைக்காரனின் மகளின் உயிரைக் காக்க உதவுகிறான். இதனால் அவனும் கோ உன்னின் ஆதரவு சக்தியாக மாறுகிறான். 


கோ உன்னுக்கு கடந்த கால நினைவுகள் இருப்பதால், யாரை நண்பர்களாக்கி கொள்ளவேண்டும். யாரை உடனே களையெடுக்க வேண்டும் என்ற புரிதலும் தெளிவும் உள்ளது. அதனால் கொள்ளையர்களை கொன்றதோடு, திருடப்பட்ட தேயிலை மூட்டைகளையும் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்க செய்கிறான். இது இரு தரப்பிற்கும் நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. கொள்ளையனின் மகன் ஹான் ரிம், மிகச்சிறந்த வீரன். எதிர்காலத்தில் நிறைய சாதனைகளை செய்தான் என்பதை கோ  உன் அறிந்திருப்பான். எனவே, அவனை தனது பக்கமே வைத்துக்கொள்கிறான். அவனது தாத்தாவிற்கு நம்பிக்கை கொடுத்து, அவரை வணிக நிறுவனம் ஒன்றைத் தொடங்க கூறுகிறான். அதற்கான பாதுகாப்பை கோ உன் வழங்குகிறான். 


இந்த நேரத்தில் மூகமூடி அசுரனோடு ஒரு சண்டை. அதில் அவரின் அடையாளம் வெளியே தெரிய வருகிறது. அவர் வேறு யாருமல்ல. நிலவுவாள்வீரனோடு ஒருமுறை கார்ப்ஸ் கல்ட்டுடன் சண்டையில் ஈடுபட்டு, மாய விஷத்தால் பாதிக்கப்பட்டு கண்களை இழந்த வாள் வீரர். அவருக்கு நிலவுவாள் வீரன் துரோகம் செய்த காரணத்தால் எதிரிகளோடு போரிட்டு தோற்றுப்போனோம் என்ற வருத்தம் கோபம் இருக்கிறது. அதுபற்றிய உண்மையை அறிய அலைந்துகொண்டிருக்கிறார். அந்த சண்டைக்காட்சி ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. பிறகு, கோ உன் எமெய் செக்டில் உள்ள தனது அத்தையைப் பார்க்க போகிறான். அங்கு அவர் அடிபட்டு சாகும் நிலையில் உள்ளார். கறுப்புக்கொடி குழுவின் தலைவர்தான் கோ உன்னின் அத்தையை கொல்ல முயல்பவர். அவரைத் தடுத்து, அவரோடு சண்டையிடுகிறான். சண்டையில் தந்திரமாக தோளில் ஒரு காயத்தை வாங்கி ஏமாற்றி, தலைவரின் வலது கையை செயலிழந்து போகச்செய்கிறான். அவனது அத்தை, அம்மாவின் சகோதரி. கதையில் அப்படித்தான் கூறப்படுகிறது. அவர் புத்த துறவி மடத்தை் சேர்ந்தவர். அவரது உயிரைக் காப்பாற்றி, அந்த மடத்திலுள்ள  ஒரு அரிய மருந்தை பெறுகிறான் கோ உன். அந்த சக்தியை வைத்தே கறுப்புக்கொடி தலைவரை மிரட்டி ஒத்துழைப்பைக் கேட்கிறான். அவருக்கு கார்ப்ஸ் இனக்குழு பொக்கிஷத்தில் இருந்து வாள் ஒன்றை எடுத்து தருவதாக கூறுகிறான். 


கறுப்புக்கொடி தலைவருக்கு வலது கை செயல்படாத நிலை. சண்டை போட்டால் நிச்சயம் தோற்கும் துயரமான உண்மை புரிபடுகிறது. எனவே, ஒருமாத காலத்திற்கு புத்த துறவி மடத்தை தாக்க மாட்டேன் என உறுதிகொடுத்து பின்வாங்குகிறார். அவரது பெயரை வைத்து டேங்க் எனும் விஷங்களை தயாரிக்கும் மருத்துவ இனக்குழு தலைவரை சந்திக்கிறான். அவரிடமும் ஒத்துழைப்பை நாடுகிறான். அவர் அவனது தற்காப்புக்கலையை சோதித்து பார்த்துவிட்டு அவன் கூற்றை ஏற்கிறார். அவனது முழுமையான அடையாளம் தெரியாத நிலையில், தனது பேத்தியை மணம் செய்துகொடுக்கிறேன் என்கிறார். ஆனால் கோ யுன் அதை உடனடியாக மறுக்கிறான். இனக்குழுவில் நடைபெறும் சடங்கான அரசியல் திருமணங்களை பற்றி அறிந்திருப்பதால், அதை தவிர்க்கிறான். டேங்க் குழுவின் தலைவருக்கு ஆச்சரியம். இருந்தாலும் சின்ன வயதில் வலிமையோடு புத்திசாலித்தனமும் இருப்பதால் அவனது கோரிக்கையை ஏற்கிறார். 


அடுத்து கோ உன், கறுப்புக் கொடி தலைவரோடு சென்று பாண்டம் கேட் ஹவுஸ் எனும் இடத்தில் உள்ள மூன்று அடிமை வீரர்களை மீட்கிறான்.அவர்களது உடலில் ஹெமாசைட் எனும் புழு உள்ளது. இது அவர்களது உடலைக் கட்டுப்படுத்துகிறது. அதாவது உயர் பொறுப்பில் உள்ள தலைவர் அந்தபுழுவை கட்டுப்படுத்த முடியும். அதன் வழியாக அடிமை வீர ர்களை இயக்கலாம். அவர்கள் அதற்கு மறுத்தால் புழு, அவர்களின் இதயத்தை செயலிழக்க வைக்கும் உடனே இறந்துவிடுவார்கள். அவர்களது உயிரைக் காப்பாற்றியதால் அந்த மூன்று அடிமை வீரர்களும் கோ உன்னுடன் சேர்ந்து வேலை செய்ய ஒத்துக்கொள்கிறார்கள். கறுப்புக்கொடி வீரருக்கு அவரது வாளை கோ உன் எடுத்துக்கொடுக்கிறான். 


கோ உன் ஒருவிஷயத்தில் அசட்டையாக இருந்துவிடுகிறான். அதுதான் அவனை பின்தொடரும் ஆட்கள். அவனுக்கு இம்மார்டல் கிராண்ட்மாஸ்டரை தனக்கு ஆதரவாக மாற்றும் பொறுப்பு இருக்கிறது. அவரது பெயரைக் கூறித்தான் மூன்று அடிமை வீர ர்களை தன்பக்கம் திருப்புகிறான். உண்மையில் அந்த கிராண்ட் மாஸ்டர் கோ உன்னின் முற்பிறப்பு பெயர். வடிவம். கோ உன், கார்ப்ஸ் குழுக்கள் எங்கு தென்பட்டாலும் அவர்களை வேட்டையாடுகிறான். இதனால் அவனை அந்த குழுவின் வீரர்கள் வேட்டையாடத் தொடங்குகிறார்கள். அந்த தாக்குதல்களை அவன் எப்படி சந்தித்தான் என்பதே மீதிக்கதை. 


கோ உன், பாரோன் ஆஃப் டஸ்க் என இரண்டு பாத்திரங்கள் நாயகனுக்கு. ஒன்றில் அம்மாவுக்கு அடங்கிய பையன். இன்னொன்றில், தன் பெற்றோரையே பாதுகாக்கும் திறமையுள்ள வீரன். எதிரிகளை அழித்தொழிப்பவன். அவனைப் பார்த்து செயல்களின் தீரத்தை வியந்து அவனது நண்பர்களே திகைத்துப் போகிறார்கள். ஒரு கட்டத்தில் கோ உன்னின் அடையாளத்தை தெரிந்துகொண்ட அவனது தாத்தா, அவனை ராஜா என பெருமையாக கூறுகிறார். ஆனால் அவருக்கே பேரனான கோ உன்னின் சுயேச்சையான எழுச்சியும், செய்த செயல்களும் ஆச்சரியமாக இருக்கிறது. தன்னுடைய வழித்தோன்றல் என்ற பெருமையும் உள்ளது. தனது குடும்பத்தின் அடையாளமாக மாற்ற நினைக்கிறார். ஆனால் கோ உன் அதை ஏற்பதில்லை. ஏனெனில் தாத்தா செய்த அரசியல் விளையாட்டுகளால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதோடு, அவனின் அம்மாவும் விஷத்தாக்குதலால் படுத்த படு்க்கையாகிவிடுகிறார். 


கோ உன் பாத்திரம் அபாயத்தின் எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது. மூன்று அடிமை வீரர்களைக் காக்க, ஹெமாசெட் புழுவை விழுங்கி தன்னை அபாயத்திற்கு உள்ளாக்கிக் கொள்வது, தீயசக்தி குழுவின் அதிக பலம் கொண்ட இரு எதிரிகளை ஒரே நேரத்தில் சந்தித்து அவர்களை நுட்பமாக வீழ்த்துவது, சென் குடும்ப சந்திப்பில் தனது அடையாளத்தை மறைத்து அம்மாவுக்கு உதவுவது, அதிகார சண்டையை மூட்டிவிட்ட தாத்தாவிடம் நேருக்கு நேராக சண்டையிடுவது, திருடனின் மகளான சோமியைக் காப்பாற்ற உயிரையே பணயம் வைப்பது என யாரும் அந்த பாத்திரத்தை இப்படித்தான் என கணிக்கவே முடியாது. 


சுவாரசியமான கதை. வலிமையான நேர்த்தியான ஓவியங்கள். நெகிழ்ச்சியான சம்பவங்கள். மெல்லிய நகைச்சுவை ஆகியவறைற ரசிக்கலாம். வாசிக்கலாம். 

 

கோமாளிமேடை டீம்

 
















 


கருத்துகள்