தனிநபர்கள் சமூகத்தை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவியல் ஆய்வு - செர்ஜ் மாஸ்கோவிசி

 











உளவியல் ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இதில் பொதுமக்களின் கருத்துகள் பற்றிய அக்கறையே இல்லையே என அங்கலாய்த்த உளவியலாளர்கள் உண்டு. அவர்கள் என்ன கூற நினைத்தார்கள் என்பதைப் பார்ப்போம். 


ஒரு விஷயத்தைப் பற்றி பிறர் கூற அல்லது இணையத்தின் வழியாக கேள்விப்படுகிறோம். உடனே அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்தவற்றோடு அல்லது அனுபவத்தோடு இணைக்கிறோம். இப்படி தெரிந்துகொண்ட அனுபவங்களை ஒருவர் உரையாடல் வழியாக பிறருக்கு கடத்துகிறார். பகிர்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நட்பு, உறவுகள், சமூக வலைத்தளங்கள், மக்கள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் உதவுகின்றன. நிறைய மக்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அங்கு கற்பதும், பெறுவதும் நடக்கிறது. இதன்வழியாக சமூகத்தின் மதிப்புகள், ஈடுபாடு தெரிய வருகிறது.


மக்கள் உரையாடுவதன் வழியாக ஒருவர் மிகுந்த மேம்பாடு கொண்ட அறிவை அடைகிறார்கள் என்று கூற முடியாது. அது உரையாடலின் லட்சியமும் அல்ல. கலந்துரையாடலின் வழியாக சமூகம் தனக்கான தொலைநோக்கு பார்வையை, பாதிக்கும் விஷயங்களை எப்படி கையாள்வது என கற்கிறது. 


அறுபதுகளில், மேற்குலகைச் சேர்ந்த சமூக உளவியலாளர்கள் பொதுமக்களின் கருத்துகள் உளவியலில் பிரதிபலிக்கப்படவேண்டும் என கருத்துகளை கூறத் தொடங்கினர். தனிநபர்கள், அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் உலகைப் பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய நடைபெறுகின்றன. ஆனால், சமூகம் சார்ந்த அவர்களின் வெளிப்பாடுகள் கவனிக்கப்படாமல் இருந்தன. இதை அடையாளம் கண்ட உளவியலாளர் செர்ஜ் மாஸ்கோவிசி, தனிநபர்கள் எப்படி கருத்துகளை உள்வாங்குகிறார்கள், உலகை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தார். 


1961ஆம் ஆண்டு, பிரான்சில் 'சைக்கோ அனாலிசிஸ் - இட்ஸ் இமேஜ் அண்ட் இட்ஸ் பப்ளிக்' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். இதில், சமூக பிரதிபலிப்புகள் பற்றிய கருத்துகள் இருந்தன. கோட்பாடுகள், அறிக்கைகள், விளக்கங்கள் ஆகியவை மக்களின் உரையாடல் வழியாக திரட்டப்பட்டிருந்தன. சமூகம், ஊடகம், மதம், மேலும் பல்வேறு சமூக குழுக்களின் உரையாடல் வழியாக காலப்போக்கில் சமூகத்தின் மனநிலை, அறிவு கட்டமைக்கப்படுகிறது. 


உளவியலாளர் செர்ஜ், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரான்சில் எதுமாதிரியான உளவியல் கருத்துகளை மக்கள் பேசினார்கள் என்பதை ஆராய்ந்தார். இதற்கு, அன்றைய காலத்தில் வெளியான வணிகரீதியான ஏராளமான நூல்களை ஆராய்ந்தார். அன்றைய மக்கள் உளவியல் பற்றிய சிக்கலான கருத்துகளை விவாதித்தனர். ஆனால் அதை சற்று எளிமைப்படுத்தி கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இதற்கு எளிமையான உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். 

அன்றிலிருந்து இன்றுவரை பரபரப்பு குறையாத தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கான உரிமைகள், சட்டங்களை பெறவும் உருவாக்கவும் ஜனநாயக காலத்திலேயே பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது. அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடுகளாக மாறிவரும் ஜனநாயக நாடுகள் என இரண்டு வகைகளையும் இதில் சேர்க்கலாம். இரண்டிலும் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்பதில்லை. அவர்களை குற்றவாளிகளாகவே மதரீதியான சட்டம் கருதுகிறது. மக்களையும் அதே திசை நோக்கி அரசு திருப்பு முயல்கிறது.

இத்தகைய நாடுகளில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்பது சட்டரீதியான ஏற்றுக்கொள்ள கடினமான ஒன்று. இதை மாற்றமுடியாது என்று கூறவில்லை. ஆனால் அந்த செயலை செய்ய சற்று தாராளமான மனம் தேவை. சொந்த நலன்களுக்கான உண்மையை புறக்கணிக்காத நேர்மையான ஆளுநர் பதவிக்கு ஆசைப்படாத நீதிபதிகள் தேவை. தோளில் குறுகல் இல்லாத பணத்திற்கு ஆன்மாவை விற்காத ஊடகங்கள் தேவை 


தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய சட்டம் மாறுவதோடு மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது. சமூகத்தில் உள்ள பொதுமக்களின் மனங்களிலும் மாற்றம் வரவேண்டும். அதற்கான முயற்சியை அரசு முன்னெடுப்பது முக்கியமானது. அப்போதுதான், சமூகத்தின் மனநிலை மெல்ல மேம்பாடு அடையும். கருத்துகள் தெளிவாகும். பிறருக்கும் புரியும். முக்கியமான பிரச்னைகளை அறிவியல் இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளைப் போல எழுதினால் பிறருக்கு கூறினால் எந்த பயனும் இருக்காது. அறிவியல் கட்டுரைகள், ஆய்வாளர்களுக்கானவை. பொதுமக்களுக்கு கட்டுரை தகவல்களை சற்று எளிமையாக கூற வேண்டியுள்ளது. அப்போதுதான் சமூகத்தின் பழைய நிலை மாறி புதிய பாதை திறக்கும். செர்ஜ், இதற்கு மக்களின் பங்களிப்பும், கருத்துகளும் தேவை என்று ஆய்வுகளின் வழியாக நிறுவினார். 


சைக்காலஜி புக் - டிகே புக்ஸ் 

tenor.com





 


கருத்துகள்