தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

 










பாய்சன் கிங், வெனோம்கிங்


மாங்கா காமிக்ஸ் 


எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது. 


மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது. 


மருத்துவ இனக்குழு அழிக்கப்பட்டு விடு்ம். அதில் எஞ்சியவர்கள் சுரங்க வேலைக்கு அடிமையாக அனுப்பப்படுவார்கள். ஜின், மங்கிரையோ என்பவன் பிடித்து வைத்து பல்வேறு விஷங்களை கொடுத்து அறிகுறிகளை சோதித்து வருவான். தொடக்கத்தில் அவனது காலை, சென்டிபீட்டில் விஷம் கொண்ட உடல் பாகத்தால் காயப்படுத்துவான். அப்போது இடதுகாலைக் காப்பாற்ற அதை மங்க்கிரையோ வெட்டி எறிவான். அடுத்து ஜின் தப்பிச்செல்லும்போது நடத்தும் விஷத்தாக்குதலில் மங்க்கிரையோ பல மாதங்களுக்கு படுக்கையில் படுத்து கிடப்பது போல ஆகும். விஷத்தாக்குதலில் இடது கண் போய்விடும். வலதுகாலையும் வெட்டி எடுத்துவிடுவார்கள். ஜின், மங்க்கிரையோ செத்துவிட்டதாக நினைப்பான். 


தனது மக்களைக் காப்பாற்ற சுரங்கத்திற்கு செல்வான். அங்குள்ளவர்களை சுரங்கத்தில் உள்ள குகைகளை அப்படியே மூடி கொல்ல ஏற்பாடு நடக்கும். அதில் ஜின்னும் உள்ளேயே சிக்கிக்கொள்வான். மங்க்கிரையோ அங்கு வந்து ஜின்னை மட்டும் தனியாக பிரித்து கொல்ல நினைப்பான். ஆனால் அதற்கு பிற தலைவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நடந்த இனப்படுகொலைகளை மறைக்கும் ஆசையே முதன்மையாக இருக்கும். ஜின் குகையில் அடைபட்டு கிடந்து, அங்குள்ளவர்களின் தற்காப்புக்கலைகளை கற்பான். அனைவரும் பசியில் இறந்துபோக விஷப்புல்களை தின்றுகொண்டு ஜின் மட்டுமே உயிரோடு இருப்பான். எட்டு ஆண்டுகளாக அங்கேய சுத்தியை வைத்து கற்களை உடைத்து தப்பித்து வெளியே வருவான். இந்த கதை மனிதர்களின் மீது வெறுப்பை விரக்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் உலகம் அப்படித்தானே உள்ளது என படிக்கவேண்டியதுதான். பின்னாளில் ஜின்னின் கதையைக் கேட்டு டேங்க் குலத்தின் ஹாரன் என்ற பெண்ணே அவன் மீது பரிதாபப்படுவாள். இப்படி மனிதனா, மனவலிமையா என பீதியடைவாள். அதற்குப் பிறகு அவள், ஜின்னை அப்படியே பின்பற்றத் தொடங்கிவிடுவாள். அவள்தான் உலகில் அவனை காதலிக்கும் காதலி, மனைவியும் கூட. ஆனால் அதை ஜின்னால் நம்பவே முடியாது. அவன் வாழ்க்கையை பழிவாங்குவதற்கானது. காதல், மனைவி, மனைவி மூலம் குழந்தை என்பதே அவனுக்கு ஒன்றும் புரியாது. ஆனால் ஹாரனை அவன் விட்டுக்கொடுக்க மாட்டான். ஏனெனில் அவனை கொல்ல முயன்றபோது அவள் உதவியிருப்பாள். கதை நெடுக உதவி செய்தவர்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களுக்காக போராடுவான். அது சாவை நோக்கிச் சென்றாலும் கூட சரிதான். 


கதை நெடுக ஜின் மோதும் ஆட்கள் அவனை விட பலமடங்கு வலிமையானவர்கள். அனைத்து சண்டையிலும் ஜின் அவனது உடல் முழுக்க காயம்பட்டு ரத்தம் ஒழுகத்தான் சண்டை போடுவான். விட்டுக்கொடுத்துவிடு, உயிர் பிழைப்பாய் என என்னென்னமோ சொல்லி மிரட்டுவார்கள். ஆனால் , ஜின் அதைக் காது கொடுத்தே கேட்கமாட்டான். சைலண்ட் டிராகனுடன் ஜெகல் குடும்பத்தின் இடத்தில் நடக்கும் சண்டை இதற்கு சாட்சி. 


எல்லோரிடமும் வாள் அல்லது வேறு ஆயுதங்கள்.தற்காப்புக்கலை என இருக்கும். ஆனால் ஜின்னிடம் வெறும் குறுங்கத்தி மட்டுமே இருக்கும். அதை வைத்துக்கொண்டு பையில் விஷப்பொடியை வைத்து சண்டை போடுவான். யாரும் நினைத்தே பார்க்க முடியாது. பேக்ளி ஜூங் என்ற முரிமின் தலைவன் கூட ஜின்னோடு சண்டையிட்டு அவன் வலையில் சிக்கி வலது கையை பயன்படுத்த முடியாமல் போய்விடும். தந்திரமான போர் முறை. அதிலும் உடலிலுள்ள விஷத்தை பயன்படுத்தும் ஆயுதங்களில் தடவி பயன்படுத்தும்போது பலரும் பீதியடைகிறார்கள். புத்த துறவியோடு நடக்கும் இறுதி சண்டைக்காட்சி இதற்கு உதாரணம். 


எது உண்மை, எது பொய், எதை நம்புவது என்ற கேள்வியை ஜின் எதிர்கொள்வது சற்று புதுமையாக கையாளப்பட்டுள்ளது. தனது குடும்பத்தை அழித்தவர்கள் விஷ இனக்குழு. ஆனால் அவர்களோடு முதலில் போரிட்டவர்கள் மருத்துவ இனக்குழு. அந்த போரில் விஷ இனக்குழுவிற்கு உதவியவர்கள் டேங்க் இனக்குழு. இதில் பெற்ற ஆதாயங்கள் முரிம் என்ற அமைப்பிற்கு செல்கிறது. இப்படி பல்வேறு அடுக்காக துரோகிகள், சதிகாரர்கள் இருக்கிறார்கள். டேங்க் குழுவிற்கு மணமகனாக வெனோம் டிராகன் ஜின் செல்கிறான். அங்கு நடக்கும் சண்டையில் தோற்று, நூலகத்தில் அடைக்கப்படுகிறான். விஷத்தை பயன்படுத்தும் தெரியுமே தவிர, தற்காப்புக்கலையில் வலு இருக்காது. பத்து நாட்களில் அவன் வலுவான தற்காப்புக்கலை கற்று சண்டையிட்டு வென்றால் அவனை உயிரோடு விடுவதாக டேங்க் இனக்குழு தலைவர் ஹேடஸ் கூறுவார். ஜின்னிடம் உள்ள விஷப்பைகளை எதிரிகள் அகற்றிவிடுவார்கள். அவனைப் பிடிக்காத படைத்தலைவன், ஜின்னிடம் வந்து அவனை அவமானப்படுத்தி அடித்து உதைப்பான். அதற்கெல்லாம் சேர்த்து ஜின் நூலகம் முழுக்க நெருப்பை பற்றவைப்பான். படைத்தலைவனை அங்கு வரவைத்து அடைத்து கொல்வான். அந்தக்காட்சி சிறப்பாக வரையப்பட்டு உள்ளது. அங்குதான் ஹாரனுக்கும் ஜின்னுக்குமான உறவு தெளிவாகும். 


ஹாரனுடைய உறவு சற்று சிக்கலானது. அவள் குடும்பத்தின் தலைவி ஆவதைப் பற்றி யோசிப்பாள் அதற்காக உழைப்பாள். ஆனால் மங்க்கிரையோ தலையிட்டு ஜின்னை சண்டையிட்டு தோற்கடித்து அவனை திருமணம் செய்வதாக கூறி கூட்டிவர சொல்வான். ஆனால் போட்டியில் ஹாரன் தோற்றுவிடுவாள். இன்னொரு அவமானமாக எனக்கு உன்மேல எந்த ஆர்வமும் இல்லை என ஜின் கூறிவிடுவான். இந்த செய்தியோடு வீட்டுக்கு போனால் தன்னை யாரோ ஒரு பெயர் தெரியாத ஒருவனுக்கு மணம் செய்துவைத்துவிடுவார்கள் என அழுதுகொண்டிருப்பாள். ஜின்னுக்கு டேங்க் இனக்குழுவில் செய்யும் விஷம் பற்றிய ஆய்வுகளை அறிய ஆசையிருக்கும். அதற்காகவே அவன் ஹாரனை மணந்துகொள்வதாக கூறுவான். கணவனாக நான் நடிக்கிறேன். நீ மனைவியாக நடி என்பான். ஆனால் பெண்ணில்லையா? முதலிரவு என்பதில் எப்படி நடிப்பது என கேள்வி கேட்பாள். ஜின்னிடம் எந்த பதிலும் இருக்காது. ஏறத்தாழ ஜின்னை அவள் ஏற்று்க்கொண்டுவிட்டாள் என எடுத்துக்கொள்ளலாம். 


போட்டி என்றால் வெல்ல வேண்டும். அவ்வளவுதான். அதற்காக இப்படித்தான் போகவேண்டும். செய்யவேண்டும் என்பதெல்லாம் கிடையாது. ஜின்னைப் பொறுத்தவரை வென்றால்தான் உயிரோடு இருக்கமுடியும். அதற்கு என்ன செய்வது? அதை செய்வான். தனக்கு அநீதி இழைத்தவர்களை மட்டுமேதான் அவன் கொல்வான். போரிடுவான். ஆனால் டேங்க் இனக்குழுவில் நடைபெறும் சிறை சம்பவத்தில் ஹேடஸ் கைதியாக்கி வைத்திருந்தவர்களை தேவையில்லாமல் கொல்லும்படி ஆகிவிடும். அவர்களை வைத்து மிரட்டி வெளியே செல்லத்தான் ஜின் திட்டமிடுவான். ஆனால் நிலைமை அதற்கு சாதகமாக இருக்காது. மன வருத்தத்துடன் அக்கைதிகளை கொல்வான். அப்படி இறந்துபோகவும் அக்கைதிகள் தயாராக இருப்பார்கள். 


கதை நெடுக துரோகிகள், சதிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. நம்பிக்கை என்பதே தெரியாத சூழ்நிலையில்தான் பாதையில்தான் ஜின் நடக்கிறான். ஈவில் இனக்குழுவின் தலைவி கூட அவனை பயன்படுத்திக்கொள்ளத்தான் நினைக்கிறாள். ஆனால் அதை ஜின் பயப்படாமல் சுட்டிக்காட்டிய பிறகே அவளும் சற்று மாறுகிறாள். ஜின்னுக்கு அறிவுரை சொல்வதில் புத்த மட தலைவர் மட்டுமே முன்னிலை வகிக்கிறார். அவர்தான் அவன் எங்கு பயணிக்கிறான், இலக்கு என்ன என்பதை தீர்மானிக்க வைக்கிறார். அதுதான் கதையின் போக்கை மாற்றுகிறது. ஹாரனை அறிமுக காட்சியில் வலிமையாக காட்டிவிட்டு பிறகு எதற்கு பலவீனமாக காட்டுகிறார்கள் என்று புரியவில்லை. இந்த கதையில் ஜின்னுக்காக மாஸ் காட்சி ஏதும் இல்லை. பலவீனமான நாயகன். சில தந்திரமான முறைகளின் மூலம் விஷத்தை பயன்படுத்தி தாக்குகிறான். அவ்வளவுதான். அவனுக்கு போரிட வாள் கூட இல்லை. வெறும் குறுங்கத்திதான். 


பழிவாங்குகிற கதை. சற்று இருட்டான மையப்பொருள். படிக்கும்போதே மனம் விரக்தி கொள்கிறது. எனவே, மனநிலை சற்று தொய்வாக இருக்கும்போது இக்கதையை படிக்கவேண்டாம். அது மனநிலையை இன்னும் சிக்கலாக்கிவிடும். 


கோமாளிமேடை டீம் 



 


கருத்துகள்